செவ்வாய், 14 டிசம்பர், 2010

வெலிக்கந்தை சிறைச்சாலை பண்ணையில் நெருக்கடிகளைச் சந்தித்துவரும் முன்னாள் போராளிகள்!

வெலிக்கந்தைக்கு அருகில் அமைந்துள்ள காட்டில் 2500 ஏக்கரில் வாழைத்தோட்டம்  ஒன்றை அமைப்பதற்கான அமைக்கும் நடவடிக்கையில் முன்னாள் போராளிகள் ஈவிரக்கமின்ற பயன்படுத்தப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எலிக்காய்ச்சலால் மிகமோசமாகப் பீடிக்கப்பட்ட ஒருவர் மாத்திரமே பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புனர்வாழ்வு முகாமைச் சேர்ந்தவர்கள் வைத்திய தேவைக்காக இங்கிருந்து 60 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பொலன்னறுவை வைத்தியசாலைக்கே செல்ல வேண்டி இருப்பதாகவும், ஆயினும் அவ்வாறு அந்த வைத்தியசாலைக்கு நோயினால் மிகமோசமாக பாதிக்கப்பட்டவர்கள் மாத்திரமே அழைத்துச் செல்லப்படுவதாகக் கூறப்படுகின்றது.

இந்த முகாமில் உள்ளவர்களில் 5 பேர் வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தும், அவர்களுக்குத் தொடர்ச்சியாக வழங்கப்பட வேண்டிய வைத்திய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் தெரியவருகின்றது. இந்தப் புனர்வாழ்வு முகாம் தொடர்பாகக் கசிந்துள்ள கவலையளிக்கும் தகவல்கள் பற்றி மேலும் தெரியவந்துள்ளதாவது:

வெலிக்கந்த புனர்வாழ்வு முகாமில் இருந்து ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் பண்ணையொன்று அமைந்துள்ளது. இந்தப் புனர்வாழ்வு முகாமுக்குப் பொறுப்பான இராணுவத்தினாரால் இந்தப் பண்ணை நிர்வகிக்கப்படுகின்றது.

இந்தப் பண்ணையில் புனர்வாழ்வு முகாமில் உள்ளவர்களையே வேலைகளைச் செய்வதற்குப் பயன்படுத்துகின்றார்கள்.

கந்தல்காடு என்ற இடத்தில் இந்தப் பண்ணை அமைந்துள்ளது. கடும் வேலை ,இந்தப் பண்ணையில் உள்ள தோட்ட வேலைகள் மாட்டுப் பண்ணை வேலைகள் என அங்குள்ள அனைத்து வேலைகளையும் புனர்வாழ்வு முகாமைச் சேர்ந்தவர்களே செய்ய வேண்டும்.

இதற்காக இவர்கள் ஒரு கிலோ மீற்றர் தூரத்தையும் நடந்து சென்று காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரையில் வேலை செய்ய வேண்டும்.

தோட்ட வேலைகள். வயல்வேலைகள், பண்ணையில் உள்ள பால் கறக்கின்ற எருமை மாடுகளைக் குளிப்பாட்டுவது, பால் கறப்பது, சாணம் அள்ளுவது, மரக்கறிகள் ஆய்வது, அவற்றை வியாபாரிகள் கொண்டு செல்லத்தக்கதாக அவற்றை மூடைகளாக்குவது வாகனங்களில் ஏற்றுவது என பலதரப்பட்ட வேலைகளையும் இவர்களே செய்ய வேண்டும்.

இதனால் இங்கு இவர்களுக்குக் கடுமையான வேலை கொடுக்கப்படுகின்றது. மழையோ வெய்யிலோ சோர்ந்தோ, ஓய்ந்தோ இருக்க முடியாது. நாள்தோறும் வேலைகள் செய்தே ஆகவேண்டும்.

இந்தப் பண்ணையில் கத்தரி, தக்காளி, கோவா, பாகற்காய், பயற்றங்காய், வெண்டிக்காய், லீக்ஸ், கரட் என அனைத்து மரக்கறிகளும், கீரைவகைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. நாள்தோறும் இங்கு வருகின்ற வியாபாரிகள், 2000, 3000 கிலோ என மரக்கறி வகைகளையும் கீரை வகைகளையும் விலைக்கு வாங்கிச் செல்வார்கள்.

இதேபோல பால், தயிர் என்பவற்றையும் கொள்வனவு செய்வதற்காக வியாபாரிகள வந்து போவார்கள்.

இவற்றை உற்பத்தி செய்தாலும், இங்கு வேலை செய்கின்ற புனர்வாழ்வு முகாமைச் சேர்ந்தவர்களுக்கு, பால், தயிர் அல்லது மரக்கறிகள் தேவையென்றால் அவர்களும் வெளியாட்களைப் போன்று காசு கொடுத்தே வாங்க வேண்டும்.

வேலை செய்பவர்கள்தானே என்பதற்காக அவர்களுக்கு சலுகைகள் எதுவும் கிடையாது. ஆனால் தினசரி கடுமையாக வேலை செய்தே ஆக வேண்டும்.

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தபோது காட்டிலும் மேட்டிலும் பண்ணைகளிலும், முகாம்களிலும் நீங்கள் கடுமையான வேலைகள் செய்தீர்கள்தானே அதேபோன்று இங்கேயும் நீங்கள் வேலை செய்ய வேண்டும்.

புனர்வாழ்வென்று இங்கே வேலை செய்யாமல் இருக்க முடியாது என்று கடுமையான தொனியில் இராணுவத்தினர் இந்த முன்னாள் போராளிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்கள்.

தற்போது இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஓரளவு பிரச்சினையின்றி சாப்பாடு வழங்கப்படுகின்றது. அதேபோல, இவர்களைப் பார்வையிடுவதற்காக வருகை தருகின்ற உறவினர்கள் முன்பு அரை மணித்தியாலம் மாத்தி;ரமே பார்வையிட முடியும். இப்போது இந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது.

இந்தப் புனர்வாழ்வு முகாமில் உள்ளவர்களை விடுதலை செய்வதற்கான விபரங்கள் தேவைப்படுவதாகக் கூறி, அவற்றைப் பெறுவதற்கான விசேட படிவங்கள் இங்குள்ளவர்களுக்கு இராணுவத்தினரால் வழங்கப்பட்டுள்ளது,

இந்தப் படிவத்தில், முழுமையான சொந்தப்பெயர், இயக்கத்தில் இருந்தபோது பயன்படுத்தப்பட்ட பதவியுடன் கூடிய பெயர் விபரங்கள், கல்வித் தகைமைகள், குடும்ப விபரங்கள், சொந்த முகவரி, நெருக்கமான நண்பர்கள் அத்துடன் எதிரிகள் அல்லது விரோதமானவர்களின் பெயர் விபரங்கள், இயக்கத்தில் இருந்தபோது எடுத்த ஆயுதப் பயிற்சி, மற்றும் கையாளக் கூடிய அல்லது பயன்படுத்தத் தெரிந்த ஆயுதங்களின் பெயர் விபரங்கள் போன்ற பல்வேறு விபரங்கள் கோரப்பட்டுள்ளன.

படிவங்களின் மூலமாகத் திரட்டப்படுகின்ற விபரங்கள் தொடர்பாக ஒவ்வொருவரும் அரை மணித்தியாலம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு படிவங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் சரியானவைதானா என்பது இராணுவத்தினரால் உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தம் முடிவடைந்துவிட்டது. இராணுவம் கோரியபடி அவர்களிடம் சரணடைந்தோம். ஒரு வருடம் புனர்வாழ்வுப் பயிற்சி என்றார்கள். புலிகளோடு இருந்த காலத்தையும், அவர்களிடம் எடுத்த பயிற்சிகளையும் மறந்து விடுமாறு கூறினார்கள். புனர்வாழ்வுப் பயிற்சிக் காலம் ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்ட.துதானே, இனிமேல் விடுதலை செய்வார்கள்.

விடுதலையானதும். பழைய வாழ்க்கை எல்லோவற்றையும்  மறந்து, குடும்பங்கள், உறவினர்களோடு இணைந்து புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் என்ற நப்பாசையில் இருந்தவர்களுக்கு, விடுதலைப்புலிகள் அமைப்பில் என்ன பெயரில் இருந்தாய் என்ன செய்தாய், பன்ன படித்தாய், என்ன பயிற்சி பெற்றாய், என்னென்ன உன்னால் செய்ய முடியம் என கேள்வி மேல் கேள்விகளைக் கேட்டு மறந்துபோயுள்ள பழைய வாழ்க்கை பற்றிய எண்ணங்களை மீண்டும் கிளறி மன வேதனைகளையும் மனக்கஸ்டங்களையும் ஏற்படுத்துகின்றார்களே என்று வெலிக்கந்தையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் கவலையடைந்துள்ளார்கள்.

இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ள போராளிகள் ஒரு வருட கால புனர்வாழ்வின் பின்னர் விடுதலை செய்யப்பட்டு விடுவார்கள் என அரசாங்கம் உறுதிமொழி வழங்கியிருந்தது.

ஆனால் ஒரு வருட காலம் கடந்த பின்னர் ஒன்றரை வருடங்கள், இரண்டு வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களான இவர்கள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. இனிமேல் எப்போது விடுதலை செய்யப்படுவார்கள் என்பது பற்றியும் அரசாங்கத்தினாலோ அல்லது இராணுவத்தினராலோ எந்தவிதமான அறிவித்தலும் வெளியிடப்படவில்லை.

இதனால் வெலிக்கந்தையில் உள்ளவர்களுக்கு எப்போது விடுதலை கிடைக்கும் என்பது தெரியாமல் இருக்கின்றது. இதனால், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களும், அவர்களது குடும்ப உறவினர்களும் பெரும் கவலை கொண்டுள்ளார்கள்.

வெலிக்கந்தைக்கு அருகில் அமைந்துள்ள காட்டில் 2500 ஏக்கரில் வாழைத்தோட்டம்  ஒன்றை அமைப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. வாழையுடன் அன்னாசிப் பழச் செய்கையும் இங்கு மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக 200 ஏக்கரில் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.

அடை மழை காரணமாக தற்காலிகமாக இந்த வேலைகள் இப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வாழைத்தோட்டத்தை அமைக்கும் பணியில் சீனாவில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள இரண்டு தொழில்நுட்பவியலாளர்கள் செயற்பட்டு வருகின்றார்கள்.

இந்த வாழைத்தோட்டம் அமைக்கப்படும்போது அங்கு வேலை செய்வதற்கு நிரந்தரத் தொழிலாளிகள் தேவைப்படுவார்கள். இந்தத் தொழிலாளர்களுக்கான தேவையை வெலிக்கந்தை புனர்வாழ்வு முகாமில் உள்ளவர்களைப் பயன்படுத்துவதற்குத் திட்டமிடுவார்களோ என்ற அச்சம் இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மத்தியில் பரவலாக ஏற்பட்டுள்ளது. இதனால் வாழ்நாள் முழுதும் தாங்கள் இ;ந்த முகாமிலேயே இருக்க வேண்டிய நிலைமை ஏற்படுமோ என்று பலரும் எண்ணி கலக்கமடைந்துள்ளார்கள்.

சரணடைந்துள்ள அனைவரையும் அரசாங்கம் புனர்வாழ்வளித்து சமூகத்துடன் இணைத்து அவர்கள் இயல்பான வாழ்க்கை வாழ்வதற்கு அரசாங்கம் வழிசெய்யும் என தெரிவிக்கப்பட்டது. அதற்கு மாறாக வெலிக்கந்தைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளவர்கள் பல்வேறு வழிகளிலும் சித்திரவதை செய்யப்பட்டு வருவதாகவே அங்குள்ளவர்களின் உறவினர்கள் பலரும் கூறுகின்றார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக