வியாழன், 19 ஆகஸ்ட், 2010

சண் சீ கப்பல் அகதிகள் தொடர்பாக இலங்கை விடுத்த கோரிக்கை – கனடா அரசினால் நிராகரிப்பு .

எம்.வி. சண் சீ கப்பலில் கனடா சென்ற தமிழர்களை அகதிகளாக அங்கீகரிக்கக் கூடாது என விடுத்த இலங்கை அரசின் கோரிக்கையை கனடா அரசு நிராகரித்துள்ளது.

சன் சீ என்ற கப்பலில் பிரிட்டீஸ் கொலம்பியா கடற்கரைக்கு இலங்கை தமிழர்கள் சென்றடைந்தனர். அவர்கள் 500 பேரும் வான்கூவர் அருகில் உள்ள ஒரு தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை அகதிகளாக அங்கீகரிக்கக் கூடாது என இலங்கை அரசு கனடா அரசிடம் கோரிக்கை விடுத்தது.

இந்நிலையில் தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் கனடா அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில் கடிதத்தில் தண்ணீர், கழிப்பிடம், படுக்கை, குடிநீர் இல்லாமல் கொடுமையான துன்பத்தில் 4 மாதங்களாக பயணம் செய்து வந்தோம்.

இலங்கையில் இனப்பிரச்சனை தீர்ந்துவிட்டதாக இலங்கை அரசு கூறியபோதும், அங்கு அவசர நிலைச் சட்டங்களை இதுவரை அகற்றவில்லை. தடுப்புக் காவலில் உள்ள அப்பாவி அரசியல் கைதிகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை. இடம் பெயர்ந்த தமிழர்களை முழுமையாக சொந்த இடங்களில் குடியமர்த்தவில்லை.

இதற்கு மாறாக, ஆட்கடத்தல்களும், படுகொலைகளும் தொலைபேசி மிரட்டல்களும் நடைபெறுகிறது எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாங்கள் போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள். தீவிரவாதிகள் அல்ல என்றும் கடிதத்தில் தமிழர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் இலங்கை தமிழர்களை அகதிகளாக அங்கீகரிக்கக் கூடாது என இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று கனடா அரசு அறிவித்துள்ளது. மனித நேய அடிப்படையில்தான் பிரச்சனைகளை அணுக முடியும் என அந்நாட்டு அரசு மேலும் கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக