செவ்வாய், 21 செப்டம்பர், 2010

தமிழின படுகொலையை நினைவுகூறுவது எந்த இனத்துக்கும் எதிரானதாக கருதக்கூடாது – அரியநேத்திரன் எம்.பி.

தமிழ் மக்கள் படுகொலைசெய்யப்பட்ட தினத்தை நினைவுகூறும் நிகழ்வை எந்தவொரு இனமும் தங்களுக்கு எதிரான நிகழ்வாகவோ,செயலாகவோ கருதக்கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

1990ஆம் ஆண்டு 9ஆம் மாதம் 21 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் முஸ்லிம் ஆயுதக்குழுவால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட 17 அப்பாவி தமிழ் மக்களின் நினைவுகூறும் தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.
இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4.30மணியளவில் புதுக்குடியிருப்பு கடற்கரை வீதியில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபியில் உறவினர்கள் மற்றும் பொதுமக்களால் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வை முன்னிட்டு பிரதான வீதிகளிலும் உள்வீதிகளிலும் வெள்ளை,கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டிருந்தன.

புதுக்குடியிருப்பு பொதுமக்களால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த இந்த நினைவுதின நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
90ஆம்ஆண்டு காலப்பகுதியில் வடக்குகிழக்கில் பாரிய இனப்படுகொலைகள் இடம்பெற்றாலும் அக்காலப்பகுதி மட்டக்களப்பை பொறுத்தவரையில் தொடர்ச்சியாக வந்தாறுமூலை பல்கலைக்கழக படுகொலை,சத்துருக்கொண்டான் படுகொலை,புதுக்குடியிருப்பு படுகொலையென தொடர்ச்சியாக சென்றது.

இத்தினங்களை ஏன் நாங்கள் நினைவுகூறுகின்றோம் என்றால் வரலாறுகள் எம்மிடம் இருந்து அழியக்கூடாது.அவை பாதுகாக்கப்படவேண்டும்,போற்றப்படவேண்டும் என்பதற்காகவே.
இந்த நிகழ்வுகளை எந்தவொரு இனமோ,நபரோ தங்களுக்கெதிரானதாக கருதக்கூடாது. காத்தான்குடியில் இடம்பெற்ற படுகொலையை அவர்கள் தொடர்ச்சியாக நினைவுகூர்ந்து வருகின்றார்கள்.அது அவர்களுக்கு இருக்கக்கூடிய உரிமை.அதனை நாம் மறுக்கமுடியாது.

அதேபோன்றுதான் கடந்த 30வருட போராட்ட காலத்தில் 90ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கெதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலையானது தொடர்ந்துகொண்டேசென்றது.
அதிலொரு அங்கமே இந்த படுகொலையாகும். காத்தான்குடியிலே உள்ள முஸ்லிம் ஆயுதக்;குழுவினர் இப்படுகொலையினை மேற்கொண்டிருந்தனர்.ஆனால் எமது மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வந்த நிலையிலே தமிழ் மக்களின் உரிமைக்கான ஆயுதப்போராட்டம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த ஆயுதப்போராட்டம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டிருந்தாலும் தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கின்ற எமது மக்களின் நலனுக்காக பாடுபடுகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் ரீதியான உரிமையினை பெறுவதற்கு பாடுபடும்.

எந்தவித போராட்ட முன்னெடுப்புகளிலும் ஈடுபடாத இந்த அப்பாவி தமிழ் மக்களின் படுகொலையானது காலம்காலமாக நினைவுகூரப்படவேண்டும்.அதனை செய்யவேண்டியது எமது சமூகத்தின் தலையாய கடமையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக