கிளிநொச்சி மாவட்டத்தின் புதுமுறிப்புப் பகுதியில் பஸ்ஸில் வைத்து 16 வயதுச் சிறுமியான பாடசாலை மாணவி ஒருவருடன் இராணுவச் சிப்பாய் ஒருவர் அங்க சேட்டையில் நேற்று மாலை 7.00 மணி அளவில் ஈடுபட்டிருக்கின்றார்.
பாடசாலையில் இருந்து தனியார் வகுப்பு ஒன்றுக்கு சென்று விட்டு காந்திக் கிராமத்தில் உள்ள வீடு நோக்கி சிறுமி பஸ்ஸில் பயணித்து இருக்கின்றார். சக பயணிகளில் ஒருவரான இராணுவ சிப்பாயின் தொந்தரவு தாங்காமல் சிறுமி அழுதிருக்கின்றார்.
ஏனைய பயணிகளிடம் முறையிட்டார். பயணிகளின் தலையீட்டை அடுத்து பஸ் புதுமுறிப்பு இராணுவ முகாம் முன்பாக நிறுத்தப்பட்டது. அங்கு கடமையாற்றும் இராணுவத்தினரிடம் முறையிடப்பட்டது. சிப்பாய் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரினார்கள்.
ஆனால் சிப்பாய் குற்றச்சாட்டை நிராகரித்து விட்டார். சிறுமி பொய் சொல்கின்றார் என்று பழி போட்டார். இதனால் பஸ் பயணிகளில் சில இளைஞர்கள் ஆத்திரம் அடைந்து சிப்பாயுடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இவ்விளைஞர்களை முகாமில் கடமையில் நின்ற இராணுவத்தினர் நன்றாக நையப் புடைத்து எடுத்தனர். அத்துடன் சிறுமியை மிரட்டியும் இருக்கின்றார்கள். பஸ் இராணுவத்தின் உத்தரவை அடுத்து சாரதியால் உடனடியாக அங்கிருந்து ஓட்டிச் செல்லப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக