சிறுவர்களை நல்ல பிரஜைகளாக வளர்த்தெடுப்பதற்கு பெற்றோர் ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல அவர்கள் சார்ந்த சமூகத்திற்கும் பாரிய பொறுப்புகள் உண்டென யாழ். மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற சிறுவர் தின விழாவிற்குத் தலைமை தாங்கி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்..
சமூகத்தில் சிறுவர்களை நல்ல பிரஜைகளாக வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மட்டும் உள்ள கடமையல்ல. மாறாக அவர்கள் சார்ந்து வாழும் சமூகத்திற்கும் பாரிய பொறுப்புகள் உண்டு.
இன்றைய சிறுவர்களே நாட்டின் எதிர்கால சிற்பிகள் என்பதுடன் அவர்களது வளமான வாழ்வுக்கு நாம் எல்லோரும் ஒன்றிணைந்து பணியாற்றும் அதேவேளை சிறுவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடந்து கொள்ள வேண்டியது நமது கடப்பாடாகும்.
அத்துடன் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் எடுக்கப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம் இம் மாவட்டத்தில் 278 மாணவர்கள் பாடசாலைகளிலிருந்து இடை விலகியிருப்பதாகவும் அதற்கு குடும்ப வறுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருப்பதாகவும் தெரிவித்த மாவட்ட அரச அதிபர் 300 க்கும் அதிகமான சிறுவர்கள் இதுவரையில் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் இல்லாதிருக்கின்றனர். 246 சிறுவர்கள் உடல் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் சிலருக்கு கட்டாயம் சிகிச்சையளிக்கப்படவேண்டிய தேவை உள்ளது என்றும் இல்லாது விடின் அவர்கள் உயிரிழக்க வேண்டிய துர்ப்பாக்கியம் இருப்பதாகவும் அரச அதிபர் தெரிவித்தார்.
இதேவேளை 77 சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்பட்டிருக்கின்றனர் என்றும் இதற்கு அவர்களுக்கான அறிவின்மையும் சமூகமும் காரணமென்றும் அவர் சுட்டிக்காட்டினார். சிறுவர்களின் உலகத்தை ஒளிரச் செய்ய அனைத்துக் கரங்களினதும் பலத்தை வழங்குவோம் என்ற தொனிப் பொருளில் யாழ்.மாவட்ட செயலகத்தின் மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழு இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக