யாழ் வடமராட்சி மணற்காட்டுப் பகுதியில் நாளுக்கு நாள் சிங்களக் கடற் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு. தற்போது 400இற்கும் அதிகமான சிங்களக் கடற் தொழிலாளர்கள் இப் பகுதிக் கடலில் அட்டை, மீன் என்பவற்றைப் பிடிப்பதில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது பொற்பகுதி கடற் தொழிலாளர் சங்கம் ஊடகங்களுக்கு விடுத்த செய்தி. யாழ். புகையிரத நிலையத்தில் 500 சிங்களக் குடும்பங்கள் மீள்குடீயேற்றத்திற்கென வந்துள்ளன. இது பத்திரிகைச் செய்தி.
இன்று இவையெல்லாம் செய்திகள். நாளை என்ன நடக்கப் போகின்றது?
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த காலங்களில் நடந்ததை மீட்டுப் பார்ப்போமேயானால் எதிர்காலத்தில் யாழ் மாவட்டத்தில் என்ன நடக்கப் போகின்றது என்பதை அறிந்து கொள்ளலாம்.
1901ம் ஆண்டு திருகோணமலை மாவட்டத்தில் மீன்பிடித் தொழிலில் 150 சிங்களவர்களும் மீன் விற்பனைத் தொழிலில் 17 சிங்களவர்களும் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் ஆண்களாகும். மேலும் இவர்களில் எவரும் தங்கி வாழவில்லை. எனவே இந்த 167 பேரும் தனி மனிதர்களாக தொழிலுக்காக இம் மாவட்டத்தில் குடியேறியிருந்தனர்.
திருகோணமலை மாவட்டத்தின் தென் பகுதியிலுள்ள கொட்டியார்பற்றுப் பிரதேசத்தில் உள்ள வெருகல் என்ற கிராமத்தில் 1901ம் ஆண்டு 77 சிங்களவர்கள் காணப்பட்டனர். இவர்களைப் பற்றிய தகவல்கள் சற்று சுவாரஸ்யமானது.
1. 77 சிங்களவர்களும் கரையோரச் சிங்களவர்களாவர்.
2. 77 சிங்களவர்களும் கிறீஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்களாவர்.
3. 77 சிங்களவர்களும் ஆண்களாகும்.
4. 77 சிங்களவர்களிலும் தங்கியிருந்து வாழ்பவர்களா இம்மாவட்டத்தில் யாருமே இருக்கவில்லை.
5. 77 சிங்களவர்களும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தனர்.
கிராமங்கள் சிங்களவர் தொகை
1901ம் ஆண்டு 1911ம் ஆண்டு 1921ம் ஆண்டு
வெருகல் 77 - -
முட்டிச்சேனை - 94 04
வாழைத்தோட்டம் 01 01 102
கொட்டியார்பற்றுப் பிரதேசத்தில் எந்தவொரு கிராமத்திலும் சிங்களவர்கள் நிரந்தரமாகக் குடியிருக்கவில்லை என்பதனை மேலே தரப்பட்ட அட்டவணை காட்டுகின்றது. 1901ம் ஆண்டு இப்பிரதேசத்தில் இருந்த 115 சிங்களவர்களில் 77 பேர் (67 வீதத்தினர்) வெருகல் என்ற கிராமத்தில் மட்டும் இருந்துள்ளனர். 1911ம் ஆண்டு இப்பிரதேசத்தில் இருந்த 117 சிங்களவர்களில் 94பேர் (80வீதத்தினர்) முட்டிச்சேனை என்ற கிராமத்தில் மட்டும் இருந்துள்ளனர். 1921ம் ஆண்டு இப்பிரதேசத்தில் இருந்த 169 சிங்களவர்களில் 102 பேர் (60வீதத்தினர்) வாழைத்தோட்டம் என்ற கிராமத்தில் மட்டும் இருந்துள்ளனர்.வாழைத்தோட்டம், முட்டிச்சேனை ஆகிய இரண்டு கிராமங்களும் கடற்கரையோரக் கிராமங்களாகும். வெருகல் ஆற்றோரம் அமைந்துள்ள கிராமமே வெருகல் கிராமமாகும். எனவே இவை அனைத்தும் மீனவக் கிராமங்களாகும். ஒவ்வொரு பருவகாலத்தின்போதும் தமது சொந்த இடங்களிலிருந்து இங்கு வந்து வாடியமைத்துத் தொழில்புரிந்துவிட்டு மீண்டும் தமது சொந்த இடங்களுக்குச் சென்றுவிடுகின்ற சிங்களவர்களே இக்காலப்பகுதியில் இப்பிரதேசத்தில் காணப்பட்டனர். இவர்களில் 391பேர் ஆண்களாகவும் 21 பெண்களாகவும் காணப்பட்டனர். மேலும் இவர்களில் 167 ஆண்களும் 400 பெண்களுமாக மொத்தம் 567 பேர் சார்ந்து வாழ்ந்திருந்தனர். இதன்படி திருகோணமலை மாவட்டத்தில் 1901ம் ஆண்டு மீன்படித் தொழிலிலும் மீன் விற்பனைத் தொழிலிலும் ஈடுபட்டவர்களை எடுத்துநோக்கினால் பின்வரும் முடிவுகளைப் பெறமுடியும்.
1. தமிழர்கள் மத்தியில் இத் தொழிலில் ஆண்கள்இ பெண்கள் ஆகிய இருசாராரும் ஈடுபட்டருந்தனர். ஆனால் இத் தொழிலில் ஈடுபட்டிருந்த சிங்களவர்கள் அனைவருமே ஆண்களாகும்.
2. இத் தொழிலில் ஈடுபட்டிருந்த 412 தமிழர்களில் 167 ஆண்களும் 400 பெண்களுமாக மொத்தம் 567 பேர் சார்ந்து வாழ்ந்திருந்தனர். ஆனால் இத் தொழிலில் ஈடுபட்டிருந்த 167 சிங்களவர்களில் சார்ந்து வாழ்கின்ற எவரும் இம் மாவட்டத்தில் இருக்கவில்லை.
3. இத் தொழிலில் ஈடுபட்டிருந்த தமிழர்கள் குடும்பங்களாக ஒரு சமூகமாக இம் மண்ணில் வாழ்ந்திருந்தனர். ஆனால் சிங்களவர்கள் தமது மனைவி, பிள்ளைகளைப் பிரிந்து தனி மனிதர்களாக இங்கு தொழிலில் ஈடுபட்டிருந்தனர்.
1901ம் ஆண்டுக் குடிசனமதிப்பீட்டின்படி திருகோணமலை நகரத்தில் வாழ்ந்த 314 சிங்களவர்களில் 280 பேர் ஏனைய மாவட்டங்களைப் பிறப்பிடமாகக் கொண்டவர்களாவர். 34 பேர் மட்டுமே திருகோணமலை மாவட்டத்தினைப் பிறப்பிடமாகக் கொண்டு வாழ்ந்தனர். இதன்படி நகரத்தில் வாழ்ந்த சிங்களவர்களில் 89 சதவீதத்தினர் ஏனைய மாவட்டங்களைப் பிறப்பிடமாகக் கொண்டவர்களாவர்.
அதே நேரத்தில் 1901ம் ஆண்டுக் குடிசனமதிப்பீட்டின் படி திருகோணமலை நகரத்தில் வாழ்ந்த 9,281 தமிழர்களில் 5,685 பேர் அதாவது 61 சதவீதத்தினர் திருகோணமலை மாவட்டத்தையே பிறப்பிடமாகக் கொண்டவர்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் வெளிமாவட்டங்களைப் பிறப்பிடமாகக் கொண்டு திருகோணமலை மாவட்டத்தில் வாழ்ந்த 280 சிங்களவர்களில் 131 பேர் நீர்கொழும்புப் பிரதேசத்தையும் 71 பேர் காலிப் பிரதேசத்தையும் பிறப்பிடமாகக் கொண்டவர்களாவர்.
மேலும் பிறமாவட்டங்களிலிருந்து திருகோணமலை நகரத்தில் குடியேறியிருந்த 280 சிங்களவர்களில் 187 பேர் ஆண்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. எனவே வெளிமாவட்டங்களைப் பிறப்பிடமாகக்கொண்டு திருகோணமலை நகரத்தில் வாழ்ந்த சிங்களவர்களில் 67 சதவீதத்தினர் ஆண்களாகவும் 33 சதவீதத்தினர் பெண்களாகவும் இருந்தனர். அதேநேரத்தில் வெளிமாவட் டங்களைப் பிறப்பிடமாகக்கொண்டு திருகோணமலை நகரத்தில் வாழ்ந்த தமிழர்களில் 58 சதவீதத்தினர் ஆண்களாகவும் 42 சதவீதத்தினர் பெண்களாகவும் இருந்தனர்.
இக்காலப் பகுதியில் திருகோணமலை மாவட்டத்தில் இருந்த சிங்களவர்கள் தொழில் வாய்ப்புக்களைத் தேடி தற்காலிகமாக, தனி மனிதர்களாக திருகோணமலை மாவட்டத்தில் குடியேறியிருந்தனர் என்பதே இத் தரவுகள் தகவல்கள் வெளிப்படுத்தும் உண்மைகளாகும். ஆனால் இவ்வாறு குடியேறிய சிங்கள மக்கள் இன்று இம் மாவட்டத்தின் பெரும்பான்மையினமாக ( 1981ம் ஆண்டுக் கணிப்பீட்டின்படி தமிழர்கள் தொகை 94447 பேர் 34.5 சதவீதம், சிங்களவர்கள் தொகை 97550 பேர் 35.6 சதவீதம்) மாறியது எவ்வாறு? அரசாங்கத்தின் ஆதரவின்றி துணையின்றி இது நடைபெற்றிருக்க முடியாதுதானே
ஆரம்பத்தில் குடும்பங்களை தமது சொந்த இடங்களில் விட்டுவிட்டு தொழிலைத் தேடி தனிமனிதர்களாகச் சுயமாகக் குடியேறிய சிங்கள மக்களுக்குக் குடியேற்றத் திட்டங்கள் மூலம் காணிகளை வழங்கி அவர்களது குடும்பங்களை வரவழைத்து இம் மண்ணில் நிரந்தரமாக வாழ வைத்தது அரசாங்கமே. இது திருகோணமலை மாவட்டத்தில் நடந்த வரலாறு. இன்று யாழ் மாவட்டத்தில் என்ன நடக்கின்றது? ஆரம்பத்திலேயே அரசின் ஆதரவோடுதான் சிங்கள மக்கள் இங்கு குடியேற வருகின்றனர். மணற்காட்டுப் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் சிங்கள மீனவர்கள் கடற்தொழில் அமைச்சின் அனுமதி பெற்று வந்துள்ளனர்.
யாழ் புகையிரத நிலையத்தில் இருக்கும் சிங்கள மக்கள் என்ன நம்பிக்கையில் என்ன உத்தரவாதத்தின்பேரில் தமது குடியிருப்புக்களையும் தொழிலையும் திடீரென்ற கைவிட்டு இங்கு வந்திருக்கின்றனர்? யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்றவாறு சிங்கள மக்கள் முதலில் வந்தார்கள். அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பதற்காக சமூர்த்தி அதிகாரிகளும் மீள்குடியேற்ற அமைச்சரும் பின்னர் வந்தனர். மூன்று மாதங்களுக்குள் அவர்களுக்குக் காணி வழங்கப்படும் குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் என்றெல்லாம் உத்தரவாதம் வழங்கப்படுகின்றது. உண்மையில் இச்சிங்கள மக்களுக்கு தமது சொந்தக் காணிகள் வீடுகளில் யாழ்ப்பாணத்தில் இருக்கின்றதென்றால் அவற்றை அவர்களுக்கு மீள வழங்கத்தான் வேண்டும். இதில் மாற்றுக் கருத்துக் கிடையாது. ஆனால் தமது சொந்தமாக எங்கு எதுவும் கிடையாது என்று அவர்களே கூறுகின்றார்கள். கடந்த 27 வருடங்களாக அநுராதபுரம், மிகிந்தலை போன்ற பிரதேசங்களில் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். அங்கு இவர்கள் வசதியாக வாழ்ந்தார்களா இல்லையா என்பது வேறு விடயம்.
அவர்களுக்கு அங்கு வசதியான வாழ்க்கை கிடைக்கவில்லை என்றால் என்றால் அதனை அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும். இன்று அவசரஅவசரமாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து இம் மக்களுக்கு வசதிகளைச் செய்து தரமுற்படும் அரசாங்கம் ஏன் இந்த 27 வருடங்கள் அவர்களைப் புறக்கணித்திருந்தது. உண்மையில் இம் மக்கள்மீது அக்கறை இருந்திருக்குமாயின் இவ்வளவு காலமும் அவர்கள் வாழ்ந்த பிரதேசத்திலேயே ஏராளமாகக் காணப்படுகின்ற வளமான அரச காணிகளை இம் மக்களுக்கு பகிர்ந்து வழங்கி, குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கலாம் தானே. யாழ்ப்பாணத்தில் இவர்களுக்குக் காணி வழங்கவேண்டும் என்று இன்று ஆர்ப்பாட்டம் செய்யும் ஜாதிக கெல உறுமய, ஜக்கிய தேசியக் கட்சி போன்றவை இவ்வளவு காலமும் இவர்களின் நலன்களைக் கவனிக்கத் தவறியது ஏன்?
ஆரம்பத்தில் குடும்பங்களை தமது சொந்த இடங்களில் விட்டுவிட்டு தொழிலைத் தேடி தனிமனிதர்களாகச் சுயமாகக் குடியேறிய சிங்கள மக்களுக்குக் குடியேற்றத் திட்டங்கள் மூலம் காணிகளை வழங்கி அவர்களது குடும்பங்களை வரவழைத்து இம் மண்ணில் நிரந்தரமாக வாழ வைத்ததன் மூலம் திருகோணமலை மாவட்டத்தின் பெரும்பான்மையினமாக மாற்றப்பட்டமை கடந்த காலங்களில் திருகோணமலை மாவட்டத்தில் நடந்த வரலாறு. இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பத்திலேயே அரச ஆதரவோடு நடைபெறுகின்ற இக் குடியேற்றத்திட்டங்களின் முடிவில் யாழ்ப்பாணத்தின் வரலாறு எவ்வாறு எழுதப்படப் போகின்றது? யாழ் மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதிகளுக்கு இது சமர்ப்பணம்.
- தாயகத்திருந்து தேனுப்பிரியன் -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக