யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் மீளக் குடியமர்ந்துள்ள பூர்வீகத் தமிழ்க் குடும்பங்கள் நேற்று படையினரால் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.
யாழ் மாநகரசபைக்குட்பட்ட கரையோரப் பகுதியைச் சேர்ந்த கொழும்புத்துறைக்கு உட்பட்ட பகுதியில் மணியந்தோட்டம் அமைந்துள்ளது.
யாழ்.குடாநாடு மீதான போர் நடவடிக்கையின் போது மணியங்குளத்திற்கு உட்பட்ட வசந்தபுரம் எனும் கிராமத்தினைச் சேர்ந்த மக்கள் 1995ஆம் ஆண்டு விரட்டியடிக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் வன்னி மற்றும் வலிகாமம் உட்பட்ட பகுதிகளில் தற்காலிக குடிசைகளிலும் முகாம்களிலும் வாழ்ந்து வந்திருந்தனர்.
2002ஆம் ஆண்டு சமாதான நடவடிக்கையினை அடுத்து தமது பகுதிகளுக்குச் சென்று மீளக்குடியமர முற்பட்ட போதிலும் அவர்களுக்கு அங்கு குடியேற அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றது.
இப்பகுதியில் பாரியளவு படைத்தளம் அமைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையிலேயே இந்தப் படைத்தளம் மட்டுப்படுத்தப்பட்டு மக்கள் குடியேற, நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வசந்தபுரம் பகுதியிலிருந்து விரட்டப்பட்ட ஐம்பது குடும்பங்களைச் சேர்ந்த நூற்றைம்பதற்கும் மேற்பட்ட மக்கள் மீளக் குடியமரத் தொடங்கியிருந்தன.
கடந்தவாரம் அந்த மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதனை அடுத்து நேற்றுக் காலை அவர்களைச் சந்தித்த படையினர் அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்திருக்கின்றனர்.
மீண்டும் பத்துமணியளவில் அங்கு சென்ற படையினர் பிற்பகல் மூன்று மணிக்கு முன்பாக அனைவரும் அங்கிருந்து வெளியேறவேண்டும் என மிரட்டியுள்ளனர்.
இந்நிலையில் அங்கிருந்து வெளியேறிய மக்கள் அடுத்த கட்டம் தொடர்பில் முடிவெடுக்க முடியாத நிலையில் வீதியோரங்களில் தங்கியதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்.தொடருந்து நிலையத்தில் மீள்குடியேறப் போகிறோம் எனத் தெரிவித்து தங்கியுள்ள சிங்களவர்கள், தாம் முன்னர் மணியந்தோட்டம் பகுதியிலேயே வாழ்ந்ததாகத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக