கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை அடுத்த மாதமளவில் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளதான தகவல்கள் வெளியாகியுள்ளன. கற்றுக் கொண்ட பாடங்கள் என்ற சொற்பதத்தில் எமக்கு எந்தவிதமான உடன்பாடும் கிடையாது. யாரிடம் இருந்து யார் கற்றுக் கொண்டது? இந்தக் கேள்வி எங்களிடம் ஏற்படாமல் போனமை வேதனைக்குரியதே.
வன்னிப் போரில் நடந்த சம்பவங்கள் தொடர்பில் போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சாட்சி யங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.அப்படியானால் அவர்கள் கற்றுக் கொண்ட பாடத்தை ஆணைக்குழுவிற்கு ஒப்புவிக்கின்றனர் என்பது பொருளாகும். அட! யாரிடம் கற்றுக் கொண்ட பாடம் எனக் கேட்டால் இலங்கை அரசிடம் -படையினரிடம் என்பது விடையாக இருக்கும். இந்தக் கேள்விக்கப்பால் ஏன் பாடம் கற்றுக் கொண்டனர் அல்லது எதற்காக பாடம் கற்பிக் கப்பட்டது என்ற உப கேள்வி ஒன்றை மனத்திற்குள் எழுப்பினால்,ஆணைக்குழுவிற்கு பெயர் வைத்ததன் நோக்கம் புரியும்.
பரவாயில்லை பெயரை வைத்துக் கொண்டு எதுவும் நடப்பதில்லையே!“ இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு” என்று எங்கள் நாட்டை விளித்துக் கூறுகின்றோம். சனநாயகம் என்பதன் அடிப்படை பண்புகளுக்கே பிச்சை எடுக்கும் நிலையில் அந்தப் பெயரால் என்ன பயன்?அது போன்றுதான் கற்றுக் கொண்டபாடங்கள் என்ற பெயர் தொடர்பிலும் நிலைமை இருக்கும் என்பதால் அது பற்றி நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. ஆனாலும், யாழ்ப்பாணத்தில் அந்த ஆணைக் குழுவின் விசாரணை இடம்பெறவே போகின்றது. விசாரணைக் குழுவின் முன் சாட்சியம் அளிப்பது தொடர்பில் ஏற்கெனவே இவ்விடத்தில் சில விடயங்களை பிரஸ்தாபித்திருந்தோம்.
எனவே அதை மீண்டும் பிரஸ்தாபித்து“ கூறியது கூறல்” என்ற பெரும் குறைக்குள் அகப்பட விரும்பவில்லை. இருந்தும் ஆணைக்குழு விசாரணை நடத்தப் போவதும் அதன்முன் சாட்சியமளிக்கப்படப் போவதும் உண்மை. இவ்வாறு சாட்சியமளிப்பவர்கள் நிதானமாகச் செயற்பட வேண்டும்.
விசாரணைக் குழுவிடம் போய் தேவையற்ற விடயங்களை ஒப்புவித்து விட்டு வருவது பிரயோ சனமற்றதாகும். கடந்த காலங்களில் எங்கள் பிரச்சினையை அறிய வந்தவர்களிடம் ஆங்கிலம் பேசும் திறத்தை நாம் காட்டினோமேயன்றி விடயத்தை விளக்கவில்லை.
எனவே நீண்ட காலம் தொடர்ந்து விட்ட தவறை இம்முறையும் விடாமல் மிகவும் நிதானமாகச் சிந்தித்து பதிலளிக்க வேண்டும். அதிலும் அரச அதிகாரிகள் அறுபது வயதிற்குப் பின் ஓய்வு என்ற உண்மையை உள்ளத் திருத்தி தேவையில்லாப் புகழாரங்களை கூறாமல் நடுத் தெருவில் நாதியற்று நிற்கும் தமிழனத்தின் நிலையுணர்ந்து உண்மைகளைக் கூற வேண்டும்.
நன்றி - வலம்புரி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக