சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பிரட்றிகா ஜான்ஸ் ஐ படுகொலை செய்ய அரச உயர் மட்டத்தில் சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்று அதிரடிச் செய்தி ஒன்றை பிரசுரித்துள்ளது ஸ்ரீலங்கா கார்டியன் இணையத் தளச் செய்தி நிறுவனம்.
”பாதுகாப்பமைச்சின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் இரகசியமாக கொழும்பில் மிகவும் இரகசியமாக கூடி இருக்கின்றார்கள். சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் பிரட்ரிகாவைப் படுகொலை செய்கின்றமை குறித்து இதில் ஆராய்ந்துள்ளார்கள்.
இக்கொலையை மேற்கொள்கின்றமை மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்தலாம் என்பது அவர்களின் யோசனை. பொன்சேகா மீதும் பொன்சேகா தரப்பினர் மீதும் இப்படுகொலைப் பழியை சுமத்துவது இதில் ஒன்று.
வெள்ளைக் கொடி விவகாரம் சம்பந்தப்பட்ட பொன்சேகாவின் வழக்கில் குற்றப்புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாருக்கு பிரச்சினையாக இருக்கும் பிரட்ரிகாவை பழிவாங்குகின்றமை இரண்டாவது. கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வெள்ளைக் கொடி விவகாரம் சம்பந்தப்பட்ட வழக்கு இடம்பெற்று வருகின்றது.
இவ்வழக்கில் பிரட்ரிகா எப்படி குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாருக்கு பிரச்சினையாகின்றார்?. வெள்ளைக் கொடி விவகாரம் சம்பந்தமாக பொன்சேகாவைப் பேட்டி கண்டவர் அவர்.
எனவே பொன்சேகாவை பேட்டி கண்டபோது குறிப்புக்கள் எடுத்துக் கொண்ட குறிப்பேட்டைவழக்குத் தேவைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாரிடம் பிரட்ரிகா ஒப்படைத்திருந்தார்.
எனவே இவ்வழக்கின் முக்கிய தடயங்களில் ஒன்றாக இக்குறிப்பேடு உள்ளது. பொன்சேகாவை பேட்டி கண்டமை தொடர்பாக மன்றில் ஆஜராகி சாட்சியம் வழங்க வேண்டும் என்று பிரட்ரிகாவுக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அவர் ஆஜராகி சாட்சியம் வழங்கினார். குறிப்புப் புத்தகம் அவரின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இது தானா பொன்சேகாவைப் பேட்டி கண்டபோது குறிப்புக்களை எழுதிய குறிப்புப் புத்தகம் என்று நீதிமன்றம் வினவியது.
அதற்கு ஆம் என்று கூறிய பிரட்ரிகா பெரிய ஒரு குண்டை நீதிமன்றில் தூக்கிப் போட்டார். குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாரிடம் குறிப்புப் புத்தகத்தை ஒரு சிறிய கிழிசல் கூட இல்லாமல் ஒழுங்காகக் கொடுத்திருந்தார் என்றும் ஆனால் அவர்கள் குறிப்புப் புத்தகத்தைத் துவம்சம் செய்து விட்டார்கள் என்றும் மன்றில் தெரிவித்து விட்டார்.
அதாவது இக்குறிப்புப் புத்தகத்தை கிழித்து இருக்கின்றார்கள் என்று குற்றஞ்சாட்டினார். நீதிமன்ற விடயத்தை இவ்வளவுடன் நிறுத்துவோம். அரசின் பிரதி அமைச்சர்களில் ஒருவரான மேர்வின் சில்வா அண்மையில் இப்படிச் சொல்லி இருந்தார்.
”சண்டே லீடரின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை பொன்சேகாதான் கொன்றார் என்று நிரூபிக்கின்றமைக்கு என்னிடம் ஆதாரங்கள் உண்டு.” மேர்வின் சில்வா வெள்ளைக்கொடி விவகார வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளில் ஒருவர் ஆவார்.”


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக