தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்குப் பிரதேசத்தில் நிர்வாகச் சேவைக்குப் பெரும்பான்மை இனத்தவர்களைச் சேர்த்துக்கொள்வது மீண்டும் இனப்பிரச்சினையை வன்முறைப் போராட்டத்துக்குத் திருப்பி விடும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
வடக்கு நிர்வாக சேவைகளில் சிங்களவர்களை அதிகளவில் இணைத்துக்கொள்வது இனப்பிரச்சினையை மேலும் கூர்மைப்படுத்தி விடும் என கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். நிர்வாகச் சேவை நேர்முகப் பரீட்சைக்குத் தமிழ்மொழி மூலம் எவரும் தெரிவுசெய்யப்படாமை, வடக்கு மாகாணத்தில் நில அளவை உதவியாளர்களாகச் சிங்களவர்கள் பெரும் எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளமை ஆகியவை தொடர் அவரிடம் கேள்வி எழுப்பியபோது,.
“நிர்வாகச் சேவைக்கு ஆள்களைச் சேர்த்துக்கொண்டமை திறமை அடிப்படையாக இருக்கலாம். மேலும் நில அளவை உதவியாளர் நியமனம் குறித்து முழு விவரங்கள் எனக்குத் தெரியாது. இருந்தும் வடக்கு நிர்வாகச் சேவையில் பெரும்பான்மை இனத்தவர்களைச் சேர்த்துக்கொள்வது மீண்டும் வன் முறை சார்ந்த போராட்டங்களை ஏற்படுத்தும்.
தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் அரச வேலைகளில் கட்டாயமாகக் கணிசமான தமிழர்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டியது அரசின் கடமையாகும். இல்லாவிட்டால், இனப் பிரச்சினை வன்முறைப் பாதை நோக்கி மீண்டும் திரும்புவதற்கு இதுவே வழிவகுப்பதாக அமைந்துவிடும்” என்று பதிலளித்தார்
“வடக்கில் அண்மையில் வழங்கப்பட்ட நில அளவையாளர் நியமனங்களில் ஐந்து மட்டுமே தமிழர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஏனைய 95 நியமனங்களும் சிங்களவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளன” என்ற விடயத்தை கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் அண்மையில் ஜனாதிபதியின் அவசரக் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக