திங்கள், 1 நவம்பர், 2010

வ - குவாட்டர் கட்டிங் - தமிழ்ப் பெயரா?...

தி.மு.க வெற்றி பெற்றதும் அறிவித்த முக்கியமானவற்றில் தமிழ் படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்பதுதான். தமிழ்த் திரைத்துறையினர் உடனே கலைஞரை பல்லக்கில் தூக்கி வைத்து புகழ்பாடினர். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த அறிவிப்பால் கோடம்பாக்கத்தில் பரம ஏழைகளான சாப்பாட்டுக்கே சிரமப்பட்ட தயாரிப்பாளர்களும், கதாநாயகர்களும் அதன்பின்தான் தங்கள் வறுமை நிலையில் இருந்தே மீண்டார்கள். இதற்குள் தமிழகத்தின் விடிவெள்ளி சூப்பர் ஸ்டார் நடித்த "சிவாஜி" படம் பெயரிடபட்டுவிட்டது. இதற்க்கு வரிவிலக்கு உண்டா என பத்திரிகை உலகம் கவலைப்பட்டு எழுதியபோது சிவாஜி என்பது பெயர்ச்சொல் எனவே அதனை தமிழ்பெயராக ஏற்றுக்கொள்ளலாம் என தமிழ் கூறும் நல்லுலகை காப்பாற்றினார் கலைஞர்.

கலைஞரை தூக்கிவைத்து கொண்டாடிய திரையுலகத்துக்கு பின்னால்தான் புரிந்தது, கலைஞர் திட்டமிட்டே வரிவிலக்கை கொண்டுவந்தார் என்பது, தற்போதைய தமிழ் திரையுலகை மொத்தமாக ஆட்சி செய்வது கலைஞர் குடும்பத்தினர்தான். அதனால் தங்கள் குடுமபதினர் நலனுக்காகவே வரிவிலக்கை கொண்டுவந்ததை அறிந்த கோடம்பாக்கத்தினர் வெளியில் சொல்லிக்கொள்ள முடியாமல் புழுங்கினர். சென்ற வார ஆனந்த விகடனில் இயக்குனர் அமீர் வெளிப்படையாகவே இனி கோடம்பாக்க கதவுகள் ஊரிலிருந்து கனவுகளோடு வரும் இளைஞர்களுக்கு திறக்காது என பேட்டியளித்தார். இவ்வளவுக்கும் அவரின் அடுத்த படத்தை தயாரிப்பவர் தென் சென்னையின் தி.மு.க மாவட்ட செயலாளர் அன்பழகன். சமீபத்தில் நடந்த இயக்குனர்கள் சங்கத்தின் விழாவுக்கு கலைஞரை அழைப்பதற்கு நிறைய இயக்குனர்கள் விருமபவில்லை என்று செய்தி கசிந்துள்ளது. கூடிய விரைவில் தேர்தல் வர இருப்பதாலும், நிறைய இயக்குனர்கள் அ.தி.மு.க அனுதாபியாகிவிட்டதாலும் இந்த மாற்றம்.

விசயத்துக்கு வருவோம் "வ- குவாட்டர் கட்டிங்'" படத்திற்கு தெரிந்தே முதலில் குவாட்டர் கட்டிங் எனப் பெயர் வைத்தனர். படம் இசைவெளியீட்டு விழாவுக்கு முன்னர்தான் "வ" என்ற தலைப்பை வைத்து அதன் கீழே குவாட்டர் கட்டிங் என எழுதினார்கள். இன்றுவரைக்கும் ஊடகங்களில் "வ- குவாட்டர் கட்டிங்" என்றே விளம்பரம் வருகிறது. அதிலும் கலைஞர் தொலைக்காட்சி, இசையருவி. சிரிப்பொலி போன்ற கலைஞரின் குடும்பத்துக்கு சொந்தமான தொலைகாட்சிகளில் அதிகம் விளம்பரம் செய்யப்படுகிறது. இப்படி இருக்க சமீபத்தில் வெளிவந்த "ஒச்சாயி" திரைப்படத்துக்கு அது தமிழ்ப் பெயர் இல்லையென்று வரிவிலக்கு அளிக்க மறுத்துவிட்டது தமிழக அரசு. ஒச்சாயி என்பது தென்தமிழகத்தில் குலதெய்வமாக வழிபடும் கடவுளின் பெயர். இதற்க்கு திருமாவளவன் ஆதரவு தெரிவித்த பிறகும் அரசு தன் கொள்கையை விட்டுக்கொடுக்கவில்லை. அந்தப்படம் வெளிவந்து சரியாக ஓடக்கூட இல்லை.

சிவாஜி, பாஸ் என்கிற பாஸ்கரன், வ குவாட்டர் கட்டிங் போன்ற தூய தமிழ்ப் பெயர்களுக்கு வரிவிலக்கு அளிக்கிற தமிழக அரசு. தாங்கள் வரிவிலக்கு அளிப்பதில் பாரபட்சம் காட்டுவதில்லை, அதற்க்கென்று தனியாக அரசு செயலாளர் இருக்கிறார். அந்த துறையினர்தான் முடிவு செய்கிறார்கள் என இன்று விளக்கம் வெளியிட்டுள்ளது. எனகென்ன சந்தேகம் என்றால் இந்த துறையே தமிழக அரசின் கட்டுப்பாட்டில் வராதா என்ன?.

செம்மொழி மாநாட்டுக்கு முன்பு தமிழில் பெயர்ப்பலகை வைக்கவேண்டும் என தீர்மானம் கொண்டுவந்து அதனை கட்டாயமாக கடைபிடிக்க வைத்தார்கள். அதற்கான தமிழ்ப் பெயர்களையும் தேர்ந்தெடுத்து தந்தார்கள் சென்னையில் பெரும்பாலான இடங்களில் தூய தமிழ்ப் பெயர்களில் கடைகளின் பெயரைப் பார்க்கிறபோது மனதிற்கு நிறைவை அளித்தது. ஆனால் அதக்குபின் அந்த கடுமை என்ன ஆனது என்று தெரியவில்லை, மற்ற மாவட்டங்களில் இன்னும் அது செயலுக்கு வரவில்லை. கோடிக்கணக்கில் பணம் செலவழித்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் திரை அரங்குகளின் முதலாளிகள் வரி கட்ட வேண்டாம் என்று சொல்வதும். டாஸ்மாக்கை திறந்து வைத்துவிட்டு ஆரோக்கியத்துக்கு உதவும் கள்ளுக்கடைகளுக்கு அனுமதி தராமல் இருப்பதும் தமிழகத்தை எந்த வகையில் மேம்படுத்தகூடும்  என்று தெரியவில்லை.

தமிழக அரசு திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிப்பதே நியாயமான விசயம் இல்லை. அதுவும் ஒரு தொழில் என்று வரும்போது அதற்கான அரசாங்க வரியை வசூலிப்பதுதான் நியாயம். ஒரு அரசு வேலை செய்யும் அல்லது தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கும் நபரின் சம்பளம் தரும்போது வரியைப் பிடித்துக்கொண்டுதான் தருகிறார்கள். இவர்கள் யாரும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கவில்லை, சம்பாதிக்கவும் இல்லை. அப்படி இருக்க கோடிகள் புரளும் துறையான சினிமாத்துறைக்கு மட்டும் வரிவிலக்கு தருவது ஒருதலைபட்ச்சமானது.

இப்போது சொல்லுங்கள் வ குவாட்டர் கட்டிங் தமிழ்ப் பெயரா?..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக