செவ்வாய், 16 நவம்பர், 2010

பாதிக்கப்பட்ட மக்கள் மீதான வன்முறைகள் கண்டனத்திற்குரியது:- கபே தேர்தல் கண்காணிப்பு அமைப்பு.

சிறீலங்கா அரசு அமைத்துள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் மூலம் காணாமல்போன தமது உறவுகளின் நிலை தொடர்பில் அறிய முற்பட்ட பொதுமக்கள் தடுக்கப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது என சுயாதீன தேர்தல் கண்காணிப்பு அமைப்பு மற்றும் சிறீலங்கா மனித உரிமைகள் மையம் ஆகிய வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஊர்காவல்துறையில் இடம்பெற்ற அமர்வில் தமது முறைப்பாடுகளை மேற்கொள்ள வந்தவர்கள் தடுக்கப்பட்டுள்ளனர். ஊடகவியலாளர் மீதும் துன்புறத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 14 ஆம் நாள் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

ஊர்காவல்துறை பகுதியில் பெருமளவான கடத்தல்களும், படுகொலைகளும், காணாமல்போன சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. அங்கு கடந்த இரண்டு தசாப்தங்களாக ஒரு ஆயுதக்குழுவே அதிகாரத்தை கொண்டுள்ளது. குறிப்பிட்ட கட்சி ஒன்றின் அங்கத்தவர்கள் ஊடகவியலாளர்களையும், பொதுமக்களையும் மிரட்டியதை சக ஊடகவியலாளர் படம்பிடித்துள்ளார். எனினும் அவருக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆணைக்குழுவின் அமர்வில் இந்த குழுவினரும் பிரசன்னமாகியிருந்ததால் பொதுமக்கள் அச்சம் காரணமாக தமது முறைப்பாடுகளை மேற்கொள்வதை தவிர்த்துள்ளனர். சிறீலங்கா ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணைகளின் போது 2,000 முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் 400 முறைப்பாடுகள் ஊhகாவல்த்துறை பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக