சனி, 18 டிசம்பர், 2010

துன்புறுத்தல்களை மேற்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் சிறீலங்காவுக்கு இரண்டாவது இடம்! - பிரித்தானியாவை தளமாகக் கொண்ட மருத்துவ அமைப்பு

  உலக நாடுகளில் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் துன்புறுத்தல்களில் சிறீலங்கா இரண்டாவது இடத்தில் உள்ளதாக பிரித்தானியாவை தளமாகக் கொண்ட மருத்துவ அமைப்பு தனது 2009 – 2010 ஆம் ஆண்டுக்கான ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

   அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:



   மக்கள் மீது துன்புறுத்தல்களை மேற்கொண்டுவரும் நாடுகளின் தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த வருடம் (2009) மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் ஈரானில் 327 துன்புறுத்தல்களும், சிறீலங்காவில் -199 துன்புறுத்தல்களும், ஆப்கானிஸ்த்தானில் – 189 துன்புறுத்தல்களும், கொங்கோ குடியரசில் -112 துன்புறுத்தல்களும், சிம்பாபேயில் – 109 துன்புறுத்தல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

   ஏனைய நாடுகளில் இடம்பெற்ற துன்புறுத்தல்கள் இவற்றை விட குறைவானவை. சிறீலங்காவில் போர் நிறைவடைந்தபின்னரும், தமிழ் மக்கள் பெருமளவில் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டுள்ளனர்.

   அவர்களில் பலர் இரகசிய முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு உணவோ, நீரோ வழங்கப்படுவதில்லை. இடம்பெயர்ந்த மக்களில் பெருமளவானோர் பாலியல் வன்முறைகளுக்கும், பல்வேறு துன்புறுத்தல்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.

   நெருப்பால் சுடுதல், அடித்தல், நீருனுள் அமிழ்த்துதல் போன்ற துன்புறுத்தல்கள் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அது தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக