தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் தமிழ்க் கட்சிகளின் அரங்கமும் தற்போது சந்தித்திருப்பது ஒரு பயனற்ற விடயமே. இது எவ்விதத்திலும் பயன்படப் போவதில்லை. இவர்களால் தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வை பெற்றுக்கொள்ள முடியாது என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ச.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா முத்தையா மண்டபத்தில் நடைபெற்ற மனித உரிமைகள் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது:-
“இந்த இணைவில் எனக்கு உடன்பாடு இல்லை. அதனால் நான் அந்த நிகழ்வுக்குப் போகவில்லை. இலங்கையில் தமிழர்கள் என்ற ஒரு இனம் இருப்பதற்கும் அந்த இனத்தின் பிரச்சினைகள் இன்று சர்வதேச ரீதியில் கொண்டு செல்லப்பட்டதற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளே காரணம். புலிகள்தான் எங்களுடைய பிரச்சினைகளை வெளியுலகிற்கு கொண்டு சென்றார்கள் என்பதனைப் புரிந்துகொள்ள வேண்டும்.
முள்ளிவாய்க்கால் எங்களுடைய முடிவல்ல. அது எங்களுடைய ஆரம்பம். அதிலிருந்து நாங்கள் மீண்டும் எழுவோம். புலம் பெயர்ந்து வாழ்கின்ற எமது மக்கள் தான் எங்களுடைய பலம்.
அங்கு அவர்கள் நாலுபேர் கூடிநின்று ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. புலம்பெயர் தமிழர்கள் இன்று ஒன்று திரண்டுள்ளார்கள். அவர்கள்தான் இப்பொழுது எங்களுடைய உரிமைப் பிரச்சினைகளை கொண்டு செல்கின்றார்கள்” என்றார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக