மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய நிருவாகசபை உறுப்பினர்கள் மீதான தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்கள அதிகாரிகள் சிலரின் கெடுபிடிகள் தொடர்பாக நேரடிக் கவனத்திற்கு கொண்டு வருவதுடன் இவ்வாறான பிரச்சினைகள் எதிர்காலத்தில் இடம்பெறாமல் தடுத்து நிறுத்துமாறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் எழுதிய கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
குறிப்பிட்ட ஸ்ரீ தாந்தாமலை முருகன் ஆலய நிருவாக சபை உறுப்பினர்களும் ஏனைய பக்தர்களும் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வந்த தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்கள அதிகாரிகள் சிலரால் "எக்காரணம் கொண்டும் ஆலய வளாகத்தினுள் உள்நுளையக்கூடாது" என துன்புறுத்தப்பட்டதை தொடர்ந்து எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இச்சம்பவம் கடந்த 16.12.2010 ஆம் திகதி மாலை இடம்பெற்றுள்ளதுடன் இவ்வாலய வளாகம் கொக்கட்டிச்சோலை (மட்டக்களப்பு மாவட்டம்) நிலைய நியாயாதிக்க பிரதேசத்திற்குள் வருகின்ற போதிலும் அவர்களால் இவ்வாலய நிருவாக்தினர் அம்பாறை பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதனால் உள்ளூர் வாசிகளும் ஆலய நிருவாக சபை உறுப்பினர்களும் பெரும் அச்சமும் கவலையும் கொண்டுள்ளனர்.
இந்த ஆலயம் பல நூற்றாண்டுகளாக தமிழ் மக்களால் பூசிக்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புராதன இந்து ஆலயமாகும். கடந்த 1959.03.13 ஆம் திகதி வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பின் மூலம் இது உறுதிசெய்யப்பட்டதுடன் இந்த ஆலயமும் இதனைச் சூழ்ந்துள்ள 25 ஏக்கர் நிலப்பரப்பும் இந்துக்களின் புனித பிரதேசமெனவும் இதன் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே இயலுமானவரை விரைந்து. இயல்பு நிலை நிலவுகின்ற பகுதியில் தற்போது வாழ்ந்துவரும் மக்களின் அமைதியான வாழ்வுக்கு அச்சுறுத்தலாக அமையும் அவ்வாறான அதிகாரிகளின் குறுக்கீடுகளை தடுத்து நிறுத்துமாறும். எக்காரணம் கொண்டும் இந்துக்களின் இந்த புனித ஆலயத்தில் தொல்பொருள் ஆராய்ச்சி அதிகாரிகள் அல்லது தொல்பொருள் ஆராய்ச்சியை மேற்கொள்வதை தடுத்து நிறுத்துமாறும் வேண்டிக்கொள்கின்றேன். என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக