வன்னியில் மழை வெள்ளத்தின் காரணமாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக் கப்பட்டுள்ளனர். இவர்களில் 6 ஆயிரம் பேர் மீண்டும் இடம்பெயர்வைச் சந்தித்துள்ளனர். மீள்குடியேறிய மக்களில் வீட்டு வசதிகள் இல்லாதோரே அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தரப்பாள் கூடாரங்களிலும் தற்காலிக வீடுகளி லும் இருந்த மக்களே மீண்டும் இடப் பெயர்வைச் சந்தித்துள்ளனர்.
இதனால் குழந்தைகள். பெண்கள், முதியோர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். சொந்த இடத்துக்கு வந்த பின்னும் தாம் தொடர்ந்தும் அகதிகளாகவே வாழ வேண்டியிருப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.
கடந்த இரண்டு வாரங்களாக வன்னிப் பகுதியில் பெய்த பெருமழையின் காரணமாக வன்னியின் பல பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், மக்களின் குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளது. வன்னிப் பிரதேசத்தின் கிறவல் வீதிகள் முழுதாகவே சேமடைந்துள்ளன.
இதேவேளை, மக்களின் உடைமைகளும் கால்நடைகளும் அழிவைச் சந்தித்துள்ளன. மீள்குடியேறிய மக்கள் மீண்டும் அகதிகளாகப் பாடசாலைகளிலும் தேவாலயங்களிலும் பொது நோக்கு மண்டபங்களிலும் தங்கியிருக்கின்றனர். இவ்வாறு தங்கியிருக்கும் மக்களுக்கான சமைத்த உணவை பிரதேசங்களிலுள்ள கூட்டுறவுச் சங்கங்கள் வழங்கிவருகின்றன. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர உதவிப்பணிகளை மேற்கொள்வ தற்கான ஏற்பாடுகளை கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் அரசாங்க அதி பர்களும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினரும் மேற்கொண்டுள்ளனர்.
முரசுமோட்டை, கண்டாவளை, தருமபுரம், கண்ணகைபுரம், பரந்தன், குமரபுரம், தட்டுவன் கொட்டி, கரும்புள்ளியான், உமையாளபுரம், கோரக்கன்கட்டு, காஞ்சிபுரம், தொண்டமான் நகர், பொன்நகர், மருதநகர், திருநகர் வடக்கு, சங்கத்தார் வயல், சிலாவத்தை, கரைச்சிக்குடி யிருப்பு, கனராயன்குளம், அனிஞ்சியன்குளம், பாண்டியன்குளம் கிழக்கு போன்ற இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியிருந்தன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர உதவி களை சர்வதேசத் தொண்டு நிறுவனங்களும் உள்ளூர் அமைப்புகளும் மேற்கொண்டு வருகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக