வியாழன், 27 ஜனவரி, 2011

அனுராதபுரம் சிறைக் கைதிகளைக் கொல்லத் துணை நிற்கும் தமிழ் இணையங்கள்!! - சரிதம்

அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை காட்டிக்கொடுத்து படுகொலை செய்யத் தூண்டும் நடவடிக்கைகயில் தமிழ் இணையத்தளங்கள் சில ஈடுபட்டுள்ளமையை சரிதம் ஆசியர் பீடம் வன்மையாக் கண்டிக்கின்றது. வன்னி மக்களின் அழிவினை செய்தியை வெளிக்கொணர்தல் என்ற போர்வையில் மக்களின் அவலத்தினை வெளிப்படுத்தி பிரபல்யம் அடைந்த இரண்டு தமிழ் இணையத்தளங்கள் தற்போது அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளையும் காட்டிக்கொடுத்து கொன்றுவிடும் அளவிற்கு செயற்பட முற்பட்டுள்ளமை வேதனையளிக்கிறது.

நேற்றைய நாள் அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் துப்பாக்கிப் பிரயோகத் தாக்குதல் இடம்பெற்ற செய்தியை சரிதம் இணையத்தளமே முதலில் வெளியிட்டிருந்தமையை சரிதம் வாசகர்கள் அறிந்திருப்பார்கள். அந்தத் தகவல் சிறைச்சாலையில் இருந்து கைதி ஒருவர் மூலம் எமது செய்தியாளருக்கு வழங்கப்பட்டிருந்தது.

குறித்த கைதியின் குரலினை ஒலிப்பதிவுக்கு உட்படுத்தி இணையத்தில் இணைப்பது பெரிய விடயமில்லை என்பது வெளிப்படையானது. ஆனாலும் உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கும் கைதிகள் தம்மைக் காப்பாற்றுமாறு அவலப்படும் விடயத்தினை வைத்துக் கொண்டு தளத்தினை விளம்பரப்படுத்தவோ அல்லது அவர்களைக் காட்டிக்கொடுத்து கொலை செய்யவோ நாங்கள் விரும்பவில்லை.

கைதிகளின் நெருக்கடி நிலையினைப் புரிந்துகொள்ளாத அல்லது அறிந்து கொள்ளாத சில இணையத்தளங்கள் பொழுது போக்கு நிகழ்ச்சிகளின் போது செவ்வி காண்பது போன்று ‘..அதைப்பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?.’ ‘…யாராக இருக்கும் என்று கருதுகின்றீர்கள்?’ என்று கேள்வி கேட்டது மட்டுமல்லாமல் தமது கருத்தினையும் சாவின் விளிம்பில் நின்று கொண்டிருந்த கைதிகளுக்குச் சொல்லிக்கொண்டிருந்தமையை அவதானிக்க முடிந்த அதேவேளை குறித்த செவ்விகளின் போது நீண்ட நேரம் கதைக்கும் நிலையில் நாங்கள் இல்லை என்று கைதிகளே சொல்லும் அளவிற்கு குறித்த செவ்வியாளர்கள் அவர்களை வதைத்திருந்தமையை அவதானிக்க முடிந்துள்ளது.

அதேவேளை குரல்களை வித்தியாசப்படுத்தும் தொழில்நுட்பத்தில் உலகம் முன்னேறியுள்ள நிலையில் நாளுக்குநாள் வளர்ச்சி பெற்றுவருவதாக தெரிவித்து வரும் குறித்த ஊடகங்கள் கைதிகளின் குரல்களை எந்த மாறுதலும் இன்றி அடையாளம் காணும் வகையில் வெளிப்படுத்தியிருப்பது எந்த வகையில் நியாயமானது.

குறித்த இணையத்தள நிர்வாகிகள் அல்லது ஆசியர்களுக்கு பகிரங்கமாக சவால் விடுக்கின்றோம். முடியுமானால் உங்கள் தளங்களின் இலங்கையில் இருந்து செயற்படுகின்ற யாராவது ஒரு செய்தியாளரிடம் இருந்து அவர்களது குரல்களில் செவ்விகண்டு அல்லது கருத்துப் பெற்று உங்கள் தளங்களில் உங்களால் பிரசுரிக்க முடியுமா?
இலங்கையில் உள்ள அரச சார்பு ஊடகங்களின் செய்திப் பணிப்பாளர்களாகவும் செய்தியாளர்களாகவும் அரச அடையாள அட்டைகளுடன் பணியாற்றும் அவர்களாலேயே குரல்களை வழங்க முடியாத நிலையில் நான்கு சுவர்களுக்கு மத்தியில் எந்தவித குற்றச்சாட்டுக்களும் இன்றி பத்தாண்டுகளுக்கு மேலாக தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளின் குரல்களை வெளியிட்டு அவர்களைக் காட்டிக்கொடுக்க நீங்கள் முற்பட்டுள்ளமையை எந்த வகையில் நியாயப்படுத்த முற்படுகின்றீர்கள்.

இலங்கையில் உயிராபத்து, எமக்கு புகலிடம் தாருங்கள் என புலம்பெயர் நாடுகளின் கால்களில் வீழ்ந்து தஞ்சமடைந்துள்ள சில ஊடர்களும் சில வர்த்தகர்களும் கைதிகளின் அவலத்தின் மூலம் விளம்பரம் தேட முற்பட்டுள்ளமையை உயிர்களை நேசிக்கும் சாதாரண உயிரினம் எதுவும் மன்னிக்காது.

எதுவித குற்றச்சாட்டுக்களும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் மீது குற்றச்சாட்டினை சுமத்த இரண்டு விடயங்கள் மூலம் வழி செய்திருக்கின்றீர்கள்.

ஒன்று: கைதிகள் கைத் தொலைபேசிகளை கைதிகள் வைத்திருந்தமை.

இரண்டாவது: சிறையில் இருந்தவாறே புலம் பெயர் தமிழ் ஊடகங்களுடன் தொடர்பினை வைத்திருந்தமை. இந்த இரண்டு விடயங்கள் மூலமும் அவர்களின் உயிர்களைப் பறிப்பதற்கோ அளவிட முடியாத சித்திரவதைகளை மேற்கொள்ளவோ அரச படைகளுக்கு எவரும் தடை விதிக்க முடியாது.

இலங்கையில் இருந்து சுதந்திரமாக எவரும் எழுதவே முடியாத நிலையில் கைதிகள் பகிரங்கமாக குற்றச்சாட்டினை சர்வதேசத்தின் முன் சொல்வதை அரசு மன்னிக்குமா? தமிழ் ஊடகத்தின் ஜாம்பவான்களாகவும் தமிழ் ஊடகத்திற்கு முகவரி தந்தவர்களாகவும் தம்மைச் சொல்லிக்கொள்கின்ற மூத்த(?) ஊடகர்கள் இது குறித்து ஏன் அக்கறை கொள்ளவில்லை? என்ற கேள்விக்கான பதிலாக கைதிகளின் ஒலிக்குறிப்புக்களை தளங்களில் இருந்து அகற்றுவதே சாலச்சிறந்தது என்று சரிதம் ஆசியர் பீடம் கேட்டுக்கொள்கின்றது.

குறிப்பு: தனிப்பட்ட காரணங்களினால் நாங்கள் எந்த இணையத்தளங்களின் மீதும் குற்றம்சாட்ட முற்படவில்லை. தனிப்பட்ட காரணங்கள் இருந்திருப்பின் குறித்த இணையங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு எமது கண்டனத்தினை வெளிப்படுத்தியிருப்போம் என்பதை சம்மந்தப்பட்டோருக்கும் சரிதம் வாசகர்களுக்கும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

‘ஊடகங்கள் மக்களுக்கானவையே தவிர மக்களின் உயிர்களைப் பறிப்பவைக்கானவை அல்ல.’

நன்றி.

சரிதம் ஆசியர் பீடம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக