ஞாயிறு, 23 ஜனவரி, 2011

இன்று சுபாஸ் சந்திரபோஸ் பிறந்த தினம்: தேசியத்தலைவரும் சுபாஸ் சந்திரபோஸ் அவர்களும்

இந்திய மக்களால் மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்க்கு எதிராக தாக்குதல் நடத்தியவர்.

இவர் 1945 ஓகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக கருதப்பட்டாலும், அவர் அப்போது இறக்கவில்லை என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. அவர் ரஷ்யாவிற்கு சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு சன்னியாசியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன.

1945 ஆம் வருடம் ஓகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 20 வரை எந்த விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது போல் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்கு வலுவூட்டியுள்ளது. இந்திய அரசால் நியமிக்கப்பட்டு இதைப்பற்றி விசாரித்து வரும் முகர்ஜி கமிஷன், தன் இறுதி அறிக்கையை 2005 நவம்பரில் வெளியிடும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் எந்த முடிவும் இல்லாமல் போனது.

சுபாஷ் சந்திர போஸ் 1897 ஆம் வருடம் இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில்லுள்ள கட்டாக் என்ற இடத்தில் பிறந்தார். இவரது தந்தையார் ஜானகிநாத் போஸ். போஸ் ராகின்சேவ் காலேஜ் ஸ்கூல் - கட்டாக், ஸ்காடிஷ் சர்ச் ஸ்கூல், கல்கட்டா மற்றும் பிட்ஷ்வில்லியம் காலேஜ் ஆகிய இடங்களில் படித்தார். 1920 இல் இந்திய மக்கள் சேவை படிப்புக்கான நுழைவுத்தேர்வில் பங்கேற்ற அவர் இந்தியாவிலேயே நான்காவதாக வந்தார். எனினும் ஏப்ரல் 1891 இல் மதிப்புமிக்க இந்திய மக்கள் சேவையிலிருந்து வெளியேறிய அவர் இந்திய சுதந்திர போரட்டத்தில் பங்கேற்றார்.


நேதாஜி குறித்து தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் கூறியதை இங்கு பாருங்கள்.

‘சிறுவயது முதல் இந்திய விடுதலைப்போராட்ட வரலாறுதான் என்னைக் கவர்ந்திருந்தது. இநதப் போராட்டத்தில் நேதாஜி அவர்கள் கொண்டிருந்த பங்கு என்னை ஆழமாகத் தொட்டது.

‘சுபாஸ் சந்திரபோஸின் வாழ்க்கை என்னைக் கவர்ந்தது. அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் நூல் வடிவில் வந்தன. அவற்றை படித்தேன். அவை அப்படியே என் நெஞ்சில் படிந்தன. கடைசித்துளி இரத்தம் இருக்கும்வரை என் மண்ணுக்காக நான் போராடுவேன். என்ற நேதாஜியின் வீரஉரையை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். நினைவிற்கு வரும்போதெல்லாம் இந்தச் சொற்கள் என் நெஞ்சை சிலிர்க்க வைத்தன,’- என்று தேசியத் தலைவர் குறிப்பிட்டிருந்தார்.

1982ம் ஆண்டு தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மதுரையில் பழ நெடுமாறன் அவர்களின் இல்லத்தில் தங்கியிருந்தபோது மதுரை YMCA மண்டபத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அவர்கள் இந்திய சுதந்திர அரசாங்கத்தின் பிரகடனத்தை 1943ம் ஆண்டு அறிவித்ததை நினைவு கூரும் நிகழ்ச்சி அது. இந்திய தேசிய இராணுவத்தைச் சேர்ந்த மகளிர் பிரிவுத் தளபதி கப்டன் இலட்சுமி அவர்கள் அந்த விழாவில் சிறப்புரை ஆற்ற இருந்தார். அந்த விழாவில் பேசுவதற்காக பழ நெடுமாறன் அவர்களும் அழைக்கப்பட்டு இருந்தார். அந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பழ நெடுமாறன் அவர்கள் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தபோது தலைவர் பிரபாகரன் தானும் அந்த விழாவிற்கு உடன் வருவதற்கு விருப்பம் தெரிவித்ததால் அவரையும் அழைத்துக் கொண்டு பழ நெடுமாறன் அவர்கள் வை.எம்.சி.ஏ மண்டபத்திற்கு சென்றார்.
விழா மண்டபத்தில் நேதாஜி அமைத்த இந்திய தேசிய இராணுவத்தின் வீரர்கள் ஏராளமாக கூடியிருந்தார்கள். தலைவர் பிரபாகரனை முன்வரிசையில் வந்து அமரும்படி கேட்டுக் கொண்டபோது அவர் அதனை மறுத்துவிட்டு பின்னால் இருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்து கொண்டு நிகழ்ச்சியை உன்னிப்பாக கவனித்தார்.
கப்டன் இலட்சுமி மேடைக்கு வந்தபோது அனைவரும் எழுந்து நின்று நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தின் கீதத்தை உரத்த குரலில் பாடினார்கள். அப்போது கப்டன் இலட்சுமியின் விழிகளிலும் கூடியிருந்த வீரர்களின் விழிகளிலும் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதனையும் தலைவர் பிரபாகரன் கவனித்தார்.
நிகழ்ச்சி முடிந்து தேசியத் தலைவர் பிரபாகரனும், பழ நெடுமாறனும் திரும்பியபோது அந்த நிகழ்ச்சியைப் பற்றி மனநெகிழ்வுடன் தலைவர் பிரபாகரன் பேசிக்கொண்டு வந்தார்.
“அண்ணா! இந்த வயதான காலத்திலும் கூட அந்த வீரர்கள் நேதாஜியைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் எப்படி நெகிழ்ந்து போகின்றார்கள் என்பதைப் பார்த்தபோது நான் உருகிப் போனேன். அவர்களை எப்படி நேதாஜி உருவாக்கியிருக்கின்றார் என்பது போற்றத் தக்கதாகும்”. என்று தலைவர் பிரபாகரன் மனநெகிழ்வுடன் பழ நெடுமாறன் அவர்களுக்குக் கூறினார்.

கடைசியாக ஒரு தகவல். மிகச் சிறந்த சுதந்திரப் போராட்டத் தலைவரான நேதாஜி சுபாஸ் சந்திரபோஸை பெற்றெடுத்த அந்த தியாகத் தாயின் பெயர் என்ன தெரியுமா அவரது பெயர் பிரபாவதி தேவி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக