சனி, 29 ஜனவரி, 2011

போரில் இரசாயன ஆயுதங்கள்! அதனை வெளிப்படுத்த முயன்றபோதே பிரகீத் காணாமல் போனார் – பிரகீத் மனைவி சந்தியா

போரின் இறுதிக்கட்டத்தில் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியமை தொடர்பான விபரங்களை சேகரித்த காரணத்தினாலேயே சிங்கள ஊடகவியலாளர் பிரகீத் கடத்தப்பட்டு காணாமல் போனதாக அவரது மனைவி பிபிசி ஊடகத்திற்கு தெரிவித்தார்.


அரசியல் பத்தி எழுத்தாளரும் காட்டூன் ஓவியராகவிருந்த பிரகீத், இரசாயன ஆயுதங்கள் தொடர்பான தனது ஆய்வறிக்கை ஒன்றை ஊடகங்களில் வெளியிட்டு அதுபற்றி வெளிநாட்டு இராசதந்திரிகளுக்கும் தெரியப்படுத்தியதை தொடர்ந்தே காணாமல் போனார் எனவும் பிரகீத்தின் மனைவி சந்தியா தெரிவிக்கின்றார்.

பிரகீத் காணாமல் போனதற்கு முன்னர் 2009 ஓகஸ்ட் மாதத்திலும் வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காலியில் நடைபெற்று கொண்டிருக்கும் இலக்கிய விழாவுக்கு தனது மூத்த மகனுடன் சென்ற சந்தியா, அங்கு வருகைதந்திருந்த சர்வதேச எழுத்தாளர்களிடமும் நூல் ஆசிரியர்களிடமும் தனது கணவனின் விடுதலைக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார்.

அந்நிகழ்வில் அவரால் விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் ”கடத்தப்பட்ட அல்லது கொல்லப்பட்ட அல்லது நாட்டைவிட்டு வெளியேற தூண்டப்பட்ட ஊடகவியலாளர்களின் மனைவி பிள்ளைகள் சார்பாக உங்களை வரவேற்கின்றேன். தமது இனஅடையாளத்தின் பேரால், கொல்லப்பட்டவர்களின் அல்லது காணாமல் போனவர்களின் குடும்பங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் குழந்தைகளின் மௌனமான அழுகுரல்கள் கொண்ட தேசத்திற்கு உங்களை வரவேற்கின்றேன்”. எனகுறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் 24 ஆம் திகதி 2010 அன்று காணாமல்போன பிரகீத் பற்றிய எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

காணாமல்போய் ஒரு வருடத்தை நினைவுகூரும் முகமாக அமைதிக்கான காட்டூன் ஓவியர்கள் என்ற அமைப்பும் எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பும் உலகம் முழுவதும் இருந்து திரட்டிய 12 காட்டூன்களை பயன்படுத்தி சர்வதேச கவனத்தை ஈர்க்கும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக