திங்கள், 24 ஜனவரி, 2011

மஹிந்தவுக்கு அமெரிக்காவில் சிகிச்சை..நாடு திரும்புவதும் தாமதம்! போர்க்குற்றவாளியை கைது செய்து விசாரணைக்குட்படுத்துமாறும் வழக்கு.

அமெரிக்கா சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, அங்குள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள எம்.டி என்டர்சன் கென்சர் சென்டர் என்ற வைத்திய சேவைகளைக் கொண்ட நிறுவனத்தில் இவர் சிகிசை பெற்று வருவதாக உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது குறிப்பிட்ட வைத்திய நிறுவனத்தில் சிகிச்சை பெற்று வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பெப்ரவரி மாதம் நான்காம் திகதி கொண்டாடப்படவுள்ள இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் வகையில் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதனிடையே சிறிலங்கா ஜனாதிபதிமஹிந்தவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது!

அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு செயற்படும் இனப் படுகொலைகளுக்கு எதிரான தமிழர் அமைப்பு இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்யவுள்ளது. யுத்தக் குற்றங்களின் அடிப்படையிலேயே இந்த வழக்கைத் தாக்கல் செய்யவுள்ளதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

2009ல் முல்லைத்தீவில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டமை, 2006ல் திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்டமை, அதே ஆண்டில் நிவாரணப் பணியாளர்கள் 17 பேர் கொல்லப்பட்டமை என்பனவற்றுக்கு நட்டஈடு வழங்கப்படவேண்டும் என்ற வகையிலேயே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களுக்கு எதிரே இலங்கை ஜனாதியதியின் அமெரிக்க விஜயத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டஙகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள ஐந்தாவது சுற்று மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ளது.

தற்போது அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ராஜபக்ஸவை கைது செய்து விசாரணைக்குட்படுத்துமாறு அமெரிக்க நீதித் திணைக்களத்துக்கு அழுத்தங்களைக் கொடுக்குமாறும் இந்த அமைப்பு புலம் பெயர்ந்தவர்களைக் கேட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக