செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

ஈழத்தமிழர் என்ற தவறான தகவலால் விசா மறுப்பு: 90 வயது மூதாட்டி வழக்கு

ஈழத் தமிழர் என்ற தவறான தகவலால் விசா மறுக்கப்பட்டதால் அமெரிக்காவில் வாழும் மகனை பார்க்க முடியாமல், விசா'வுக்கு அனுமதி கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மூதாட்டி மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை ஐகோர்ட்டில் நாகை மாவட்டம், போரவச்சேரியைச் சேர்ந்த பாப்பாம்மாள் (வயது 90) தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:

எனது மகன் முத்துவேல் செல்லையா இயற்பியல் பட்டம் முடித்துவிட்டு புனே வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றினார். பின்னர் அமெரிக்காவில் உள்ள மெரிலேண்ட் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு முடித்துவிட்டு, வாஷிங்டனில் உள்ள வானிலை முன்னறிவிப்பு மையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றுகிறார்.

அங்கு ஒரு தமிழ்ப் பெண்ணை திருமணம் செய்துவிட்டு, 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அவருக்கு அந்த நாட்டின் சேவை விருதுகள் கிடைத்துள்ளன. 1992 ம் ஆண்டு தமிழ்ச் சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் 1997 ம் ஆண்டு  முல்லை இதழ்' என்ற பத்திரிகையின் ஆசிரியர் என்ற முறையில் இந்தியாவுக்கு வந்து பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் அப்போதைய மத்திய மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் கலந்து கொண்டார்.

இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் என்று அந்த கூட்டத்தில் முத்துவேல் பேசினார். இதை குறிப்பிட்டு பத்திரிகை ஒன்றில் கட்டுரை எழுதிய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி, எனது மகனை ஈழத் தமிழர் என்று குறிப்பிட்டு பல குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் 2002 ம் ஆண்டில் முடிந்த இந்தியாவுக்கான  விசா'வை, 2012 ம் ஆண்டுவரை நீட்டித்துள்ளார். ஆனால் இந்த  விசா'வை திடீரென்று வாஷிங்டன்னில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் ரத்து செய்துவிட்டனர். இதனால் அவன் இந்தியாவுக்கு வந்து என்னை பார்ப்பதற்கு தடை ஏற்பட்டுள்ளது.

அவர் வெளிநாட்டில் வாழும் இந்தியர். ஈழத் தமிழர் என்று கூறப்பட்ட தவறான தகவலால்  விசா' மறுக்கப்படுகிறது. எனக்கு 90 வயதாகிறது. கண்கள் சரிவர தெரியவில்லை. காது கேட்கவும் இல்லை. போனில் கூட முத்துவேலுடன் பேச முடியவில்லை.

அவரைப் பார்த்து 13 ஆண்டுகள் ஆகிறது. எனவே இந்த கடைசி காலத்திலாவது என்னை முத்துவேல் வந்து பார்ப்பதற்கு வசதியாக  விசா' அனுமதி வழங்க தூதரக அதிகாரிகளுக்கு ஆணையிடும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்த மனுவை நீதிபதி பி.ஜோதிமணி விசாரித்தார். இந்த மனுவுக்கு இன்னும் ஒரு வாரத்தில் பதிலளிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சக செயலாளர், குடி பெயர்ப்பு அதிகாரி ஆகியோருக்கு நோட்டீசு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக