

அரபுலகில் அதி கூடிய மக்கட்தொகையைக் கொண்ட எகிப்தில் உள்நாட்டுக் குழப்பங்களுக்கு குறைவில்லை. நீளமான நைல்நதியின் செழிப்பான மண்வளம் கொண்ட விவசாய நாடான எகிப்து, ஒருகாலத்தில் முழு ரோம சாம்ராஜ்யத்திற்கும் தானிய ஏற்றுமதி செய்தது. கிளியோபாட்ரா ஆண்ட காலத்திலும் எகிப்திய மக்கள் உணவுக்காக கலகம் செய்துள்ளனர். அப்போது கிளியோபாட்ரா தானியக் களஞ்சியத்தை திறந்து மக்களுக்கு உணவளித்தார். சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு பின்னர், எகிப்திய மக்கள் உணவுக்கலவரத்தில் ஈடுபடுகின்றனர். அன்றைய கிளியோபாட்ராவின் தாராள மனம், இன்றைய முபாரக்கிடம் இல்லை. ஒரு வல்லரசாக வரவேண்டிய எகிப்தை ஒட்டச் சுரண்டிய முபாரக்கும், ஆளும் கும்பலும், சேர்த்த சொத்துகளை பாதுகாப்பதில் குறியாக உள்ளனர்.
எகிப்தில் மக்கள் எழுச்சி திடீரென தோன்றி விடவில்லை. கடந்த சில வருடங்களாகவே உணவுப்பொருள் விலையேற்றம், அரச மானியக் குறைப்பு காரணமாக கலவரங்கள் ஏற்பட்டுள்ளன. மக்களின் தார்மீக கோபத்தை திசை திருப்பி விடுவதற்காக வகுப்புவாதக் கலவரங்களை அரசு தூண்டி விட்டது. எகிப்தில் சிறுபான்மையினரான கிறிஸ்தவர்களின் வழிபாட்டு ஸ்தலங்கள் "இனந்தெரியாதோரின்" வெடி குண்டுத் தாக்குதலுக்கு இலக்காயின. இதைத் தொடர்ந்து உணர்ச்சிவசப்பட்ட கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் கலவரத்தில் இறங்கினர். அரசு தாக்குதல்களுக்கு "அல்கைதா" காரணம் எனக் கண்டுபிடித்து சிலரைக் கைது செய்தது. அரபுலகை குலுக்கிய துனிசியா புரட்சி மட்டும் இடம்பெற்றிரா விட்டால், எகிப்தில் மதக்கலவரங்கள் தொடர்ந்திருக்கும். மதவாதிகளும், இனவாதிகளும் தமது அரசியல் ஆதாயங்களுக்காக மக்களை பிரித்து வைத்திருக்கவே விரும்புவர். இறுதியில் பொருளாதாரப் பிரச்சினை அவர்களை ஒன்றிணைத்து விடும். எகிப்தின் மக்கள் எழுச்சியில் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் தோளோடு தோள் சேர்ந்து புரட்சியை நோக்கி வெற்றிநடை போடுகின்றனர்.
எகிப்தின் சினாய் பாலைவனப் பகுதியில் வாழும் பெதூயின் மக்கள், இன்னொரு ஒடுக்கப்பட்ட இனமாகும். உண்மையில் அரபுக்களின் முன்னோரான பெதூயின்கள் இப்போதும் நாடோடி வாழ்க்கை வாழ்வதால், கீழானவர்களாக கருதப்படுகின்றனர். சுயெஸ் கால்வாய்க்கும் இஸ்ரேலுக்கும் நடுவில் அமைந்திருப்பதால் சினாயின் கேந்திர முக்கியத்துவம் குறைத்து மதிப்பிடத் தக்கதல்ல. சினாய் பாலைவனம் வெறும் மணல்மேடுகளை மட்டும் கொண்டதல்ல. கரடுமுரடான மலைக்குன்றுகளும் வாழ்வதற்கு ஏற்ற இடங்களல்ல. அரசும் பாராமுகமாக இருப்பதால், பெதூயின் மக்கள் வாழ்வாதாரம் தேடி கடத்தல் தொழிலில் ஈடுபட்டனர். சினாய்க்கு அருகில் தான் பாலஸ்தீன காசா பகுதி இருக்கிறது. இஸ்ரேலினால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட காசாவுக்கு பொருட்களை கடத்தி சென்று பணக்காரர் ஆனவர்கள் பலர். இஸ்ரேலின் நிர்ப்பந்தத்தால் காசா எல்லையை எகிப்திய படைகள் மூடி விட்டன. இருப்பினும் சுரங்கப்பாதை அமைத்து கடத்துகிறார்கள்.
IPS செய்தியாளர் முஹமட் ஒமார் வழங்கிய தகவல்களைக் கொண்டு பார்க்கும் பொழுது, புரட்சி எந்தளவு தூரம் முன்னேறிக் கொண்டிருக்கின்றது என்பது தெளிவாகின்றது. சினாய் பகுதி நகரங்கள் புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெதூயின் இளைஞர்கள் போலிஸ் நிலையங்களை ஆக்கிரமித்துள்ளனர். காவல்துறையில் கடமையாற்றியவர்கள் சீருடை களைந்து ஆர்ப்பாட்டக்காரருடன் சேர்ந்து கொள்கின்றனர். பெதூயின் இளைஞர்கள் கைகளில் ஆயுதங்கள் காணப்படுகின்றன. அந்த ஆயுதங்கள் எப்படிக் கிடைத்தன என்பது யாருக்கும் தெரியாது. மலைப்பாறைகளை கொண்ட பாலைவனப் பிரதேசம் என்பதால், அரசு அங்கே சிறைச்சாலைகளை கட்டியிருந்தது. புரட்சியாளர்கள் சிறைகளை உடைத்து கைதிகளை விடுதலை செய்துள்ளனர். போலிஸ், சிறைக்காவலர்கள் சிறையுடைப்பை தடுக்கவில்லை. சிலநேரங்களில் அவர்களாகவே கதவுகளை திறந்து விட்டுள்ளனர். கடத்தல் குற்றங்களுக்காக சிறையில் இருந்த காசா பாலஸ்தீனர்கள் பலர் எந்தப் பிரச்சினையுமின்றி வீடு திரும்பியுள்ளனர். காசாவுடனான எல்லையும் திறந்து கிடக்கின்றது. எகிப்திய பாதுகாப்புப் படைகள் பின்வாங்கி விட்டனர். ஹமாஸ் தற்போது எல்லையை பாதுகாக்கும் பொறுப்பை எடுத்துள்ளது.

எகிப்தில் புரட்சியை வழிநடத்தும் சக்தியான முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின், சகோதர அமைப்பு தான் ஹமாஸ். தற்போதைய குழப்பகரமான சூழலில் இரண்டும் தம்மை பலப்படுத்தி வருகின்றன. எகிப்தில் விரைவில் இஸ்லாமிய புரட்சி ஏற்படும் சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. ஈரானில் ஏற்பட்ட இஸ்லாமியப் புரட்சி அமெரிக்காவையும், இஸ்ரேலையும் கிட்ட நெருங்க முடியாத நிலைக்கு கொண்டு வந்தது. எகிப்தும் அந்தப் பாதையில் செல்கின்றது. எகிப்தில் இஸ்லாமியப் புரட்சி என்பது அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் கெட்ட சகுனமாகவே அமையும். முஸ்லிம் சகோதரத்துவக் கட்சிக்கே அதிகளவு எகிப்தியர்கள் ஆதரவளிப்பதால், சுதந்திரத் தேர்தல் நடத்தப்பட்டாலும் அந்தக் கட்சியே வெல்லும். இதனால் ஆட்சி நடத்த முடியாமல் பலவீனப்பட்டுப் போயுள்ள முபாரக்கை கைவிடும் அமெரிக்கா வேறொரு தலையை தேடுகின்றது. இன்னொரு மேற்குலக சார்பு ஜனாதிபதி, அல்லது கூட்டரசாங்கம் என்பனவே அமெரிக்காவின் தெரிவாக உள்ளது. எகிப்தை அவ்வளவு இலகுவாக புறக்கணிக்க முடியாது. இஸ்ரேலுக்கு அடுத்ததாக எகிப்து அதிகளவு அமெரிக்க நிதி, இராணுவ உதவியைப் பெறுகின்றது. இதிலிருந்தே எகிப்து எந்தளவுக்கு அமெரிக்காவுக்கு முக்கியமானது என்பது தெளிவாகும்.
எகிப்தில் ஏற்படப்போகும் புரட்சி, பிற அரபு நாடுகளிலும் எதிரொலிக்கும். இப்போதே ஜோர்டான், ஏமன் போன்ற நாடுகளில் தன்னெழுச்சியான மக்கள் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. ஏமனில் சர்வாதிகாரி சலேயை அப்புறப்படுத்துவதற்கான போராட்டம். ஜோர்டானில் பொருளாதார நெருக்கடிக்கு எதிரான போராட்டம். (ஜோர்டானில் ஏற்கனவே ஜனநாயகப் பாராளுமன்றம் இயங்குகின்றது.) சவூதி அரேபியாவும் தளம்பல் நிலையில் உள்ளது. மத்திய கிழக்கில் நடைபெறும் மாற்றங்கள், அங்கே அமெரிக்காவின் மேலாதிக்கம் தளர்வதைக் காட்டுகின்றது. குறிப்பாக இஸ்ரேலுடன் சமாதானமாக விட்டுக் கொடுத்து வாழும் ஜோர்டான், எகிப்து போன்ற அயல் நாடுகளில், இஸ்ரேலிய எதிரிகள் ஆட்சிக்கு வரும் சாத்தியம் உண்டு. இதனால் இஸ்ரேல் மேலும் நெருக்கடிக்கு உள்ளாகும். நிலைமை இப்படியே தொடர்ந்தால், அமெரிக்க ஏகாதிபத்தியம் இஸ்ரேலைக் கைவிட்டு விடும். சர்வதேச அரங்கில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மாறி வருகின்றது. எதிர்கால வல்லரசான சீனாவுடனும், பொருளாதார வளர்ச்சி காணும் இந்தியா போன்ற நாடுகளுடனும் நட்பை அதிகரிக்கவே அமெரிக்கா விரும்புகின்றது. மத்திய கிழக்கின் எண்ணெய் இருப்பு குறைந்து செல்லும் வேளை, மத்திய ஆசியாவில் உற்பத்தி பெருகியுள்ளது. இதனால் இஸ்ரேலைக் கைக்குள் போட்டுக் கொள்ள வேண்டிய பொருளாதார தேவையும் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக