வெள்ளி, 4 மார்ச், 2011

அமெரிக்கா... ஏதோ செய்யப் போகிறது

சர்வதேச நியமங்களுக்கு அமைவாக போர்க்குற்ற விசாரணைகள் இலங்கையில் மேற்கொள்ளப்படவேண்டும் என அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசுகளும் விடுதலைப் புலிகளும் பேச்சுக்கள் நடத்தியபோது- யுத்தம் புரிந்தபோ தெல்லாம் அதிகம் அலட்டிக்கொள்ளாத அமெரிக்கா, இப்போது இலங்கை மீது அதிக கரிசனை காட்டிவருவது இங்கு நோக்குதற்குரியது.

வன்னி யுத்தம் நடைபெற்றபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை அரசு ‘கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு’ ஒன்றை நியமித்து விசாரணைகளை மேற் கொண்டது. உலக நாடுகளையும் ஐ.நா.சபையையும் சமாளிக்கும் வகையில் அந்த விசாரணைகள் இடம்பெற்றாலும் அதனை சர்வதேசம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை இலங்கைக்கான அமெரிக்காவின் மீள்அறிவுறுத்தல் நிரூபித்துள்ளது.

அதேவேளை சர்வதேச அரங்கில் நாடுகள் சிலவற்றின் ஆட்சித் தலைமைகள் சந்திக்கும் பிரச்சினைகளிலும், அந்த ஆட்சி அதிகாரத் தை அகற்றுவதிலும் அமெரிக்காவின் பங்கு காத்திரமாக இருப்பதை மறுப்பதற்கில்லை. இதன்காரணமாக மக்களின் எதிர்ப்பை சந்தித்துள்ள வெளிநாடுகளின் அரசியல் கள நிலைமைகளை இலங்கையுடன் ஒப்பிட்டு நோக்கும் அளவிற்கு உலக அரசியல் திசைதிரும்பியுள்ளது. நிலைமை இதுவாக இருக்கும்போது இலங் கையின் போர்க்குற்ற விசாரணைகளை சர்வ தேச நியமங்களுக்கு அமைவாக மேற் கொள்ள வேண்டும் என அமெரிக்கா கூறியிருப்பது சாதா ரண விடயமன்று.

விடுதலைப் புலிகளுடனான யுத்த வெற்றிக்குப் பின்னர் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் இலங்கை அரசு அசமந்தமான அணுகு முறையையே பின்பற்றி வந்துள்ளது. விடுதலைப் புலிகளை தோற்கடித்த பின்னர் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணப்படும் என்றே யுத்தத்திற்கு முன்னரும் யுத்தம் நடந்து கொண்டிருந்தபோதும் இலங்கை அரசு கூறி வந்தது. ஆனால் யுத்தம் வெற்றியில் முடிபடைந்த பின்னர் அரசின்போக்கு மாற்றமடைந்தது. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்ற சர்வதேச நம்பிக்கை பலவீனப்பட்டபோது போர்க் குற்ற விசாரணைக்கான அழுத்தம் வலுப் பெற்றுள்ளது.

இதன் அடுத்த கட்டம் அமெரிக்காவின் தலையீடாக இருக்கும். அதற்கான பூர்வாங்கக் கிரிகைகளே அமெரிக்கா விடுக்கின்ற எச்சரிக்கை ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக