ஞாயிறு, 20 மார்ச், 2011

போர்க் குற்றம் பற்றிய ஐ.நா. அறிக்கை அடுத்தவாரம் வெளியீடு: அச்சத்தில் மகிந்த அரசு

இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றுள்ள மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர்கள் குழுவின் அறிக்கை மிகவும் கடினமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பதையிட்டு இலங்கை அரசாங்கம் உயர் மட்டத்தில் தீவிரமாக ஆராயப்பட்டுவருவதாகத் தெரிவிக்கின்றது.

"இந்த அறிக்கை அனேகமாக முழுமையாக்கப்பட்டுவிட்டது. இலங்கை தொடர்பில் இது சற்று கடுமையானதாகவே இருக்கும். போரின் இறுதிப்படுதியில் இடம்பெற்ற சம்பங்கள் தொடாபாக பக்கச்சார்பற்ற - சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்பதை இது வலியுறுத்துவதாக அமையலாம்" எனத் தெரிவித்த மேற்கு நாட்டு இராஜதந்திரி ஒருவர், இந்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தும் ஐரோப்பிய ஒன்றியம், அதன் மூலமாகவே அனைவரும் விசாரணை அறிக்கையின் விபரங்களை அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும் எனவும் சுட்டிக்காட்டியிருப்பதாகக் கூறினார்.

இம்மாத இறுதிக்குள் ஒரு பொது அறிக்கையாக இது நிபுணர்கள் குழுவினால் ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்படவிருப்பதாகவும், இதனை பகிரங்கமாக வெளியிடுமாறு ஐ.நா. சபையை ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுக்கொள்ளவிருப்பதாகவும் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. அதேவேளையில், இந்த அறிக்கையைப் பகிரங்கமாக வெளியிடுவதா அல்லது இரகசிய அறிக்கையாக வைத்திருப்பதா என்பதையிட்டு ஐ.நா. இதுவரையில் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கின்றது.

போர்க் குற்றங்கள் தொடர்பாக பெருமளவு ஆதாரங்கள் ஐ.நா. நிபுணர் குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், இலங்கை அரசுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலேயே இந்த அறிக்கை அமைந்திருக்கும் எனக் கருதப்படுகின்றது. இந்த நிலையிலேயே இலங்கையின் சட்டமா அதிபர் மோஹான் பீரிஸ் தலைமையிலான ஒரு குழுவினர் நியூயோர்க் சென்று ஐ.நா. நபுணர் குழுவினருடன் இரகசியச் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இந்தச் சந்திப்பை இரகசியமாக வைத்திருப்பதற்கே இரு தரப்பினரும் விரும்பியிருந்த போதிலும், கொழும்பு ஆங்கில வாரப் பத்திரிகை ஒன்று இச்செய்தியை வெளியிட்டு அம்பலப்படுத்தியது.

நிபுணர்குழுவின் அறிக்கை இலங்கைக்கு மிகவும் பாதகமானதாக அமையும் என்பது உறுதியாகியுள்ள நிலையில், அதனைப் பகிரங்கப்படுத்தாமல் பாதுகாப்பதற்கான முயற்சிகளிலேயே இலங்கை அரசாங்கம் முழுமூச்சாக ஈடுபட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. இல்லையெனில் இதனைப் பகிரங்கப்படுத்துவதற்கு முன்னதாக அறிக்கையை தமக்குத் தர வேண்டும் எனவும் இலங்கை அரசின் சார்பில் கேட்கப்பட்டிருப்பதாகாத் தெரிவிக்கப்படுகின்றது.

மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் நிபுணர் குழு தனது அறிக்கையை ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் கையளிக்கும் எனவும், அதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர் மாநாடு ஒன்று நியூயோர்க்கில் நிபுணர் குழுவால் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதில் தமக்கு பாதகமான நிலை ஏற்படும் என்பது உறுதியாகியுள்ள நிலையில் இதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பதையிட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உயர் இராஜதந்திரிகளுடன் ஆராய்வதாகத் தெரிகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக