வெள்ளி, 1 ஏப்ரல், 2011

போர்க்குற்றவாளி ராஜபக்சேவை இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது


போர்க்குற்றவாளி ராஜபக்சேவை மீண்டும் மீண்டும் சிவப்புக் கம்பளம் விரித்து இந்தியாவுக்கு அழைப்பதா? என்னை கொழும்பு விமான நிலையத்திலேயே திருப்பியனுப்பிய அவர், எந்த முகத்தை வைத்துக் கொண்டு இந்தியாவுக்கு வருகிறார், என கேள்வி எழுப்பியுள்ளார் திருமாவளவன்.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியா-இலங்கை, நாடுகளுக்கிடையிலான உலகக் கோப்பை இறுதி கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியைப் பார்த்து ரசிப்பதற்கு சிங்கள இனவெறி அதிபர் ராஜபச்சே ஏப்ரல் 2-ந் தேதி மும்பை வர இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த கொலைவெறியன் ராஜபக்சே இந்தியாவுக்கு மீண்டும் மீண்டும் வருகை தருவது தமிழ்ச் சமூகத்தை வேதனைப் படுத்துவதாகும்.
பிரபாகரனின் தாயார் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள நான் சென்ற போது, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் என்ற நிலையிலும், இலங்கை நாட்டுக்குள்ளேயே அனுமதிக்க முடியாது என தடை விதித்து இந்திய அரசை அவமதிக்கும் வகையில் திருப்பி அனுப்பிய ராஜபக்சே இப்போது எந்த முகத்தைக் வைத்துக் கொண்டு இந்தியா வருகிறார்.
இந்திய அரசைத் தொடர்ந்து அவமதித்து வருகிற ராஜபக்சேவை அவ்வப்போது சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கும் இந்திய அரசின் போக்கு வேதனைக் குரியதாகவும் வியப்புக்குரியதாகவும் உள்ளது.
சர்வதேசப் போர்க் குற்றவாளி என உலகின் பல நாடுகள் ராஜபச்சே மீது குற்றம்சாட்டுகிற நிலையில், இந்திய அரசு மட்டும் ராஜபக்சேவை வரவேற்று ஊக்கப்படுத்துவது தமிழினத்தை மேலும் மேலும் இந்திய அரசு வஞ்சிக்கிறது என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
இந்நிலையில், தமிழின உணர்வுகளைத் தொடர்ந்து அவமதிக்கிற இந்திய அரசின் போக்கையும் விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது. அதேவேளையில், இந்திய அரசுக்குள்ள கடமையைக் காட்டும் வகையில் சர்வதேசப் போர்க்குற்றவாளி ராஜபக்சேவை இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என விடுதலை சிறுத்தைகள் வற்புறுத்துகிறது,” என்று அதில் கூறியுள்ளார் திருமாவளவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக