இனத்துவேஷ நாடுகளின் முதுகில் எண்ணெய் தடவி சாட்டையடி போட வேண்டிய பருவம் நெருங்குகிறது..
தற்போது மேற்கு ஆபிரிக்க நாடான ஐவரிக்கோஸ்டில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான கடும் மோதல்கள் நடைபெறுகின்றன. கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற ஒருவரை பதவி ஏற விடாமல் பழைய அதிபர் மறுப்பதால் இந்த மோதல் நடைபெறுவதாக இதுவரை கூறப்பட்டு வந்தது. ஆனால் இதற்குள் மேலும் பல சூட்சுமங்கள் இருப்பதாக மேலைத்தேய ஊடகங்கள் மாலை நேரச் செய்திகள் எழுதியுள்ளன.
பிரச்சனை ஒன்று :
மேற்கு ஆபிரிக்க நாடுகளில் வருமானம் கூடிய வளமான நாடாக ஐவரிக்கோஸ்ட் இருக்கிறது. இந்த நாட்டை நோக்கி அயல் நாடுகளான மாலி, பேர்கினாபாசோ போன்ற இடங்களில் இருந்து மக்கள் வருகிறார்கள். இதனால் உள்நாட்டு மக்கள் – வந்தேறு குடிகள் என்ற கோணத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

பிரச்சனை இரண்டு :
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு எதிரான துவேஷப்போக்குடையவராக ஆட்சியை விட்டு இறங்க மறுக்கும் அதிபர் லவுறன்காக்போ இருக்கிறார். நாட்டின் வடபுலத்தே ஆதி காலம் முதல் வாழும் மக்கள் உள்ளார்கள், தென்புலத்தே அப்படி இல்லை. இதனால் நாடு இரண்டுபட்டு நிற்கிறது. துவேஷம் சிறீலங்கா போல தலைவிரித்து கூத்தாடுகிறது.
பிரச்சனை மூன்று :
புதிதாக வெற்றி பெற்ற அதிபர் அலசானா குவாற்ராராவின் பெற்றோர் பேர்கினாபாசோ பகுதியில் இருந்து குடியேறிய வெளிநாட்டவர். ஒரு வெளிநாட்டவரின் மகன் அதிபராக வர இயலாது என்று பதவி விலக மறுக்கிறார் பழைய அதிபர்.
இதனால் ஏற்பட்ட மோதல் பல்லாயிரக் கணக்கானவரை கொன்று கழுத்தறுத்து வீதிகளில் வீசிக்கொண்டிருக்கிறது. இந்த நாட்டை காலனித்துவ நாடாக வைத்திருந்த பிரான்ஸ் கைகட்டி பார்த்துக் கொண்டிருக்கிறது. விமான நிலையத்தை மட்டும் பிரான்சிய படைகள் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.
சிறீலங்காவில் முன்னர் ஜே.ஆர் தலைமையிலான ஐ.தே.க அரசு. யூலைக்கலவரத்தை நடாத்தி தமிழரை கொன்றது. தமிழரை கள்ளத்தோணிகள் வந்தேறு குடிகள் என்றுகூறி கொலை செய்தது. இதே போன்ற துவேஷ மனம் கொண்ட வக்கரித்த கூத்தாட்டம்தான் தற்போது ஐவரிக்கோஸ்டிலும் நடக்கிறது.

இப்படியான பித்தலாட்டங்களுக்கு புதியதோர் முடிவைக் காணவேண்டிய நிலையில் இன்றைய உலக சமுதாயம் இருக்கிறது. இன்று டென்மார்க் வந்து சேர்ந்துள்ள முன்னாள் பிரிட்டன் பிரதமர் ரொனி பிளேயர் கூறும்போது 20 ம் நூற்றாண்டில் இருந்து வேறுபட்ட பிரச்சனைகளுக்கு உலக சமுதாயம் முகம் கொடுக்க வேண்டிய நிலை வந்துவிட்டதென்றார். கம்யூனிசம், ஜனநாயகம், சர்வாதிகாரம், பாசிசம் ஆகிய 20ம் நூற்றாண்டு சித்தாந்தங்கள் தம்மை புதுப்பிக்க வேண்டிய பருவம் வந்துவிட்டதையும் அவர் சுட்டிக் காட்டினார். ஐவரிக்கோஸ்ட், சிறீலங்கா போன்ற இனவாதப் பாரிசவாதம் குத்திய நாடுகளை சர்வதேச சமுதாயம் முதுகில் எண்ணெய் தடவி திருத்த வேண்டிய பருவம் வந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக