புதன், 18 மே, 2011

மே 18


  • இன்று ஈழத்தமிழினத்தின் "கரிநாள்"
    காலத்தால் மறக்க முடியாத
    கறுப்புத்தினம்!!
    முள்ளிவாய்க்கால் மூர்க்கமான
    குண்டு மழைக்குள்
    வஞ்சகமாக முக்குளித்த
    இரண்டாவது குருதி வருடம்!!!.


    சொல்லில் வடிக்க முடியாத 

    சிறுமை கொண்டு
    இந்தியாவும் இலங்கையும்
    ஈழத்தமிழினத்துக்கு
    ஈமைக்கிரியை செய்ய முனைந்த
    வெட்கக் கேட்டின்
    இரண்டாம் ஆண்டு நினைவு நாள்.

    ஈழத்தமிழினத்தின் எதிரில் தோன்றிய

    இன்னல் மிகுந்த பெருத்த
    கரிய சுவடு.
    செறிவான குண்டு மழையால்
    நீலவானமும் நிலமும்
    நிறம் மாறிய நிமிடங்கள்.

    ஈயும் மண்புழுவும் எறும்பும்

    இயற்கை தாவரங்களும்
    எரிந்துபோன பொட்டல் வெளியில்.
    இரசாயன கலவையால்
    மானுடம் வதை கொள்ளப்பட்ட
    வரலாறு தினம்.

    நேற்றுப்போல நினைவில் ,

    நெஞ்சு வெந்து
    நினைவில் இருந்து விடுபட மறுக்கும்
    நிரந்தரமான வலி.

    மானுடம் மரணப்படுக்கையில்

    வீழ்த்தப்பட்டு
    ஈழத்து வீரத்தை உலகம்
    ஏலம் கூவிய பொழுதுகள்.

    முள்ளிவாய்க்கால்

    செயற்கை எரிமலையாய் மாற்றப்பட்டு .
    கால கொடு கயமையினால்
    கலி கொண்டு
    மானுடம் காவு கொள்ளப்பட்ட "கரிநாள்".

    சூழ்ச்சியில் சூனியத்தால்

    சுற்றி கட்டப்பட்டு
    சுவாசிக்க
    காற்றும் நுழைய முடியாத
    கனத்த பொழுதுகள்.

    இன்றும்

    நெஞ்சு கனலாக தகிக்கிறது.
    பாலுக்கு அழுத பிஞ்சுகளும்.
    பதை பதைத்த தாய்மாரும்.
    வேல் கொண்டு ஆடிய பெண்புலியும்.
    விடுதலை வேட்கை கொண்ட வீரனும்.
    வஞ்சகத்தின் வலையில்
    காவுகொள்ளப்பட்ட "கரிநாள்"

    எரிந்த சுவாலை ஓய்ந்து போனாலும். 

    தனலும்
    தகதகக்கும்
    வெப்பமும்
    காலத்தால் அழியாத கயமையும்.
    நினைவில் ஆழமாக.
    நித்திய வேதனையாக.

    இருந்தும்

    இன்று நாங்கள்
    எரிந்த சாம்பலிலிருந்து
    எழுந்து வந்துகொண்டிருக்கிறோம்.
    சாவிலும் வாழ்வோம்.
    சரித்திரம் மட்டும்தான்
    எங்களை தீண்ட முடியும்.

    தீனிக்கும் 

    திரை மூடிய புணர்ச்சிக்கும்
    வீணான வெளிச்ச விளம்பரத்துக்கும்
    நாங்கள் காலத்திலும்
    அடிபணியப்போவதில்லை.

    நாம்

    வீழுவோம் என்றா நினைத்திருந்தாய்
    வினை தந்த விழலை விட்டு
    மாழுவோம் என்று நினைத்தாயா.

    எம்

    மண் தமிழீழம் காணும்வரை
    சோருவோம் என்று நினைத்தாயா.

    ஈழத்தின் கொடி வான் உயர்ந்து

    தேசம் விடியும் வரை
    நெருப்பாகி  மாழுவேன் என்று
    வேண்டுமானால்
    நீரில் எழுதிக்கொள்.

    மூலம்அறியாமல்.. 

    என் தலைவனின்  விவேகம் அறியாமல்.
    விடுதலைப்புலிகளின் வேகம் அறியாமல்.
    காலப்பதிவில்
    காலியாகி விட்டாயே....

    நான்கு சுவர்களுக்குள் போடும் 

    சுலோகமென்றா நினைத்தாய்..
    ஈழம்
    பாழாகும் என்று நினைத்தாயோ.
    கனவென்று
    மாற்றிக்கொள்.
    தேசம் விடியும்வரை.
    திண்ணமது.
    மண் மேட்டிலிருந்தும்
    சாம்பலிலிருந்தும்
    மறுபடியும் எழுவோம்..

    வானிடை விரைந்து வந்து வழிநீளம் 

    ஷெல்லும் வீழ.
    மானிடக்குடிகள்மீது மழையென
    குண்டும் பாய-மேனிகள்
    சிதறி ரத்த வெள்ளமாய் சகதியாயினும்
    நாம் என்றும் புலியாய் நின்று-கொடியை
    நாட்டுவோம் ஈழ மண்ணில்.



    ஊர்க்குருவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக