வியாழன், 12 ஆகஸ்ட், 2010

ஈழத்தில் சிங்கள அரசு தமிழின அழிப்பை மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது, தமிழினம் தனக்குள் மோதித் தன்னையே அழிக்கிறது.

ஈழத்தில் சிங்கள அரசு தமிழின அழிப்பை மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. தமிழரின் பூர்வீகத் தாயக மண் சிங்களப் படைகளாலும் அரசின் சிங்களக் குடியேற்றங்களாலும், அந்நிய நாட்டு முதலீடுகளாலும் பறிக்கப் பட்டு வளங்கள் சுரண்டப்படுகின்றன.

தமிழரின் வழிபாட்டிடங்கள் தோறும் புத்த மத வழிபாட்டுச் சின்னங்களும் தலங்களும் தளிர்விடுகின்றன. தமிழரின் கல்வி கலாச்சார கருத்து மற்றும் வேலை வாய்ப்பு உரிமைகள் உயர் பாதுகாப்பு வலையங்கள் என்ற காரணத்தால் முற்றாக மறுக்கப்படுகின்றன. போரினால் வெளியேற்றப்பட்ட மக்களை வடக்கு கிழக்கு அனைத்துப் பகுதிகளிலும் மீளக் குடியேற விடாது இராணுவ மற்றும் அவசரகால விதிச் சட்டங்கள் தடுக்கின்றன.

இவை அனைத்தும் அப்பட்டமான இன அழிப்பு மற்றும் மனித உரிமை மீறல் என்பது உலகமே அறியும். ஆனால் எவரும் தவறு எனச் சுட்டிக் காட்டவோ அல்லது தட்டிக் கேட்கவோ முடியாத நிலை இருக்கிறது. தமிழர் தரப்பில் பேசும் தார்மீக கடமை கொண்டுள்ள தமிழர் தேசியக் கூட்டமைப்பு அரசின் சட்டப் பிடிக்குள் பாம்பின் வாய்த் தேரை போல் திக்குத் திணறித் தவிக்கிறது.

உலக நாடுகள், சீன இந்தியத் தலையீடுகள் காரணமாகவும் பூகோள இராணுவ கேந்திர நலன்கள் வணிக நலன்கள் சார்ந்தும் சிங்கள அரசின் சகல செயற்பாடுகளையும் பயங்கரவாதத்துக்கு எதிரான அரசின் நியாயமான (?) நடவடிக்கைகளே என பாராமுகமாக உள்ளன.

சில அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அயரா முயற்சியால் தமிழருக்கு எதிரான அராஜக அடக்கு முறை, இன அழிப்பு போர், மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் என்பன சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு நீதி வழங்க வேண்டும் என்பதில் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றன.

சில சிங்கள மனித உரிமை ஆர்வலர்களே இம்முயற்சியில் ஈடுபடும் போது புலத்தில் உள்ள தமிழ் மக்களின் அமைப்புகள்  தனக்குள் பெரும் உட்பூசலை வளர்த்து புலம் பெயர் மக்களை ஆக்க பூர்வமாக அரசியல் முன்னெடுப்புகளில் வழி நடக்தாது காலத்தை வீணடித்து வருகிறது.

முதலில் தேசியத் தலைவர் இருக்கிறார் இல்லை என்று மக்களைக் குழப்பிப் பட்டி மன்றம் நடாத்தி கே.பீ.யின் தலைமையை எதிர்த்தனர். தலைமைப் போட்டியின் விளைவாக கே.பீயைக் கொழும்பு அரசு கைது செய்துவிடும் அளவுக்கு தமது செயற்பாடுகளை முன்னெடுத்தனர்.

நாடு கடந்த தமிழீழ அரசமைப்புப் பணிகளைச் செய்து வரும் உருத்திரகுமாரனுக்குப் பாரிய தடைகளை ஏற்படுத்திய படியே வட்டுக் கோட்டைப் பிரகடனம் என்ற துருப் பிடித்த வாளைத் தூக்கிப் பிடித்து கூத்தாடினர். மக்களின் ஆணையைப் பெற்றுக் கொண்ட வட்டுக் கோட்டைப் பிரகடனம் இப்போது எந்தக் கோட்டைக்குள் தூங்கிக் கிடக்கிறது ? அதன் அடுத்த நடவடிக்கை என்ன என்பதை எவரிடம் கேட்டு அறிவது?

இலங்கை இந்திய அரசுகள் முக்கியமாகப் பயப்படுவது நாடு கடந்த தமிழீழ அரசுப் பிரகடனமும் அதன் வளர்ச்சியும் என்பது இவர்களுக்குத் தெரியாத ஒன்று எனக் கூறிவிட முடியாது. இதற்கு எதிர்ப்பாகச் செயற்படுவோரின் பின்னணியில் நன்கு படித்த சிலரும் உள்ளனர். சிறந்த இணையத்தளமும் ஆங்கிலத்தில் புலமை கொண்ட ஆசிரியர் குழுவும் உள்ளது. தமிழர் நலனுக்காகப் பயன்படுத்தப் வேண்டிய இத்தகைய திறமை தமிழினத்தின் அழிவுக்கு உதவுவது மிகக் கேவலமான நிலையாகும்.

இதனை உணர மறுத்து இந்த பகுதியினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் அபிமானிகள் என்ற நிலையில் நிலைமையைச் சீர்தூக்கிப் பாராது இருப்பது பெரும் விசனத்துக்கு உரியது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரும் அவரது குடும்பமும் எண்ணற்ற மாவீரர்கள், பொது மக்கள் கொடுத்த விலையும் தியாகமும் தமிழ் மக்கள் பட்ட படுகின்ற துன்ப துயரங்களையும் இவர்கள் சிந்திக்கத் தவறுவது மன்னிக்க முடியாத குற்றம்.

இன்று இவர்கள் கே.பீயை ஒழித்து விட்டதுடன் நிற்கவில்லை. இவர்களின் அடுத்த இலக்கு திரு. உருத்திரகுமாரன் என்பதை மிக எளிதாக உணர முடியும். அதன் முன் முயற்சியாகவே உருத்திரகுமாரன் கே.பீயின் வழிகாட்டலில் சிங்கள அரசின் வேலைத் திட்டத்தில் இயங்குகிறார் என்ற கூச்சல்.

இவர்கள் அத்துடன் நில்லாது நாடு கடந்த அரசை ஜீ.ரீ.வீ. ஆதரிப்பதால் அது ஒரு துரோகிகளின் ஊடகம் என்ற பொய் பிரசாரத்தின் மூலம் இதே குழவினர் சுவிஸில் தொடங்கும் புதிய தொரு தமிழ் தொலைக் காட்சிச் சேவைக்கு தமிழரை இழுக்கும் பணியில் இறங்கி உள்ளனர்.

நாடுகடந்த தமிழீழ அரசு, அதற்கு ஆதரவான தமிழ் மக்களின் துன்ப துயரங்களை வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டுக் ,காட்டியும் உணர்வாலும் உறவாலும் புலம் பெயர் தமிழ் மக்களுடன் இரண்டறக் கலந்து விட்ட ஜீ.ரீ.வீ. தொலைக் காட்சியையும் ஒழித்துக் கட்டிவிடும் வகையில் செயற்படுவது அப்பட்டமாகத் தெரிகிறது.

முன்னர் இவர்கள் நாடுகடந்த தமிழீழ அரசு சர்வதேச முதலாளித்துவ ஆதிக்கத்துக்கு தமிழினத்தை அடகுவைக்கும் முயற்சி எனப் பிரச்சாரப் படுத்தி அந்தப் பொய்ப் பிரச்சாரம் தமிழ் மக்களிடையே எடுபடாமல் போனதை தமிழ் மக்கள் மறந்துவிட மாட்டார்கள்.
தலைவர் இருக்கிறார் இல்லை என்ற இவர்களின் தலைமைப் பதவிப் போட்டியில் தமிழரின் வானொலியாக விளங்கிய அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (ஐ.பீ.சீ) பல மாற்றங்களைக் கண்டு பிரபல ஒலி பரப்பாளர்கள் ஓரம் கட்டப்பட்டதும் வெளியேற்றப்பட்டதும் தமிழ் மக்கள் அறிந்ததே.

புலத்தில் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக எந்த வித அரசியல் செயற் பாட்டிலும் ஈடுபடுத்தாது மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியும் சிங்கள அரசின் அனைத்துக் கொடுமைகளையும் தமிழினம் மௌனமாக அங்கீகரிக்கிறது என்ற தோற்றப் பாட்டை வெளிப்படுத்தவும் இவர்களின் பதவிப் போட்டிதான் காரணம் என்பதில் சந்தேகமில்லை.

இப்போது எமக்குத் தேவை யார் துரோகி என்ற ஆய்வு அல்ல மாறாக யார் என்ன செய்கிறோம் என்ன செய்யப் போகிறோம் எவர் என்ன பேசுகிறார் என்ற சுய விமர்சனம் மட்டுமே காலத்தின் கட்டாயமாக உள்ளது. நாடு கடந்த அரசு அமைப்பை தொடர்வதா இல்லையா? தாயக மக்களின் விடுதலை அவர்களுக்கான நீதி விசாரணை நிவாரணம் இவைக்கான நடவடிக்கை என்ன எடுத்தோம்?

ஏன் இதுவரை எடுக்கவில்லை? சில தமிழர் பேரவைகள் முடக்கப்பட்டது ஏன்? ஐ.நா. மற்றும் மனித உரிமை அமைப்புகளுடன் சிறப்பாக தொடர்புகளை ஏற்படுத்தி தமிழர் பிரச்சனையை முன்னெடுத்த சுவிஸ் தமிழர் பேரவை முடக்கப் பட்டதால் ஈழத் தமிழர் பிரச்சனை வெளியே கேட்க முடியாதபடி செய்தவர்கள் எப்படி மற்றவரைத் துரோகிகள் எனலாம் ?

முடிவாக இந்திய முன்னாள் இராணுவத் தளபதி ஹரிகரன் அண்மையில் தமது ஆய்வில் கூறிய சில வரிகளை கவனத்தில் எடுப்பது அவசியமாகிறது.
இத் தருணத்தில் காலியில் இடம் பெற்ற கடல் பாதுகாப்பு மாநாட்டில் பாதுகாப்புச் செயலர் கொட்டபாயா ராஜபக்ஷ தெரிவித்த கருத்து. “நாம் தனித்தனியாக எவ்வளவு பலமுள்ளவராக இருப்பினும் பரவாயில்லை, நாம் தனியாக உள்ளவரைக்கும் கடல் கடந்த அரசு சாராச் செயற் பாட்டாளர்களின் நடவடிக்கைகளால் ஏற்படும் ஆபத்துகளுக்கு நாம் வலு அற்றவர்களாகி விடுவோம்”.

மீண்டும் ஹரிகரன் வரிகளில் சில. “ஸ்ரீலங்காவினால் புலம் பெயர் தமிழரைத் தமிழீழ ஆதரவுக்கான காரணியில் இருந்தும் வன்முறைக்கு உயிர் கொடுக்காமல் செய்ய முடியுமா”?

இதற்கான பதிலை இலகுவாகச் சொல்லிவிட முடியாது.
புலத்துத் தமிழர் ஆயுதப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றினர் என்பதை உதாசீனப்படுத்த முடியாது. அவர்கள் அடிப்படையில் இரு தளத்தில் உள்ளனர். ஓன்று கடந்த கால கசப்பான அனுபவத்தால் ஏற்பட்ட உணர்வு நிலை. இவர்கள் தமது உறவுகளுக்கு நேர்ந்த கதியால் கலங்கிப் போயுள்ளனர்.

மற்றைய தளத்தினர் தமிழரின் அடையாளம் தமிழீழம் என்பவற்றைப் பேணுவதில் கொள்கையால் ஆழமாக பற்று உறுதி கொண்டவர்கள். இவர்களின் தொடக்கப் புள்ளி தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்துக்கும் முற்பட்டது. வரலாற்றுக்கால அனுபவத்தால் இவர்கள் சிங்களவர்களின் அரசியல் உட்கிடக்கைகளில் ஆழமான சந்தேகம் கொண்டுள்ளவர்கள்.

புலம் பெயர் தமிழினமே ஒன்றை மட்டும் நினைவுபடுத்த வேண்டி உள்ளது. 1920ல் யாழ்பாணத் தமிழ் வாலிபர் சங்கம் எழுப்பிய தமிழரின் சுதந்திரக் குரலை கொழும்பில் ஒரு தொகுதியில் போட்டியின்றித் தெரிவாகும் ஆசையில் சேர் பொன்னம்பலம் அருணாசலம் சிங்களவருக்கு துணைபோய்க் கெடுத்தார்.

பின்னர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் சுந்தரலிங்கத்தைக் காட்டி தாமே முன்னெடுத்த தமிழர் போராட்டத்தைக் கை விட்டார். அவரிடமிருந்து பிரிந்து தந்தை செல்வர பல முறை ஏமாற்றப்பட்டு கைவிட்ட நிலையில் பிரபாகரன் அவர்கள் தமிழர் விடுதலைப்போராட்டத்தை முன்னெடுத்து எடுத்து வந்தார். இன்று தலைமைப் போட்டியால் கூறுபட்டுப் போகும் நிலையை எப்படி சமாளிக்கப் போகிறோம்? ஓருவரை ஒருவர் துரோகி எனக் கூறுவதால் சுதந்திரம் பெற்றுவிட முடியுமா?

- த. எதிர்மன்னசிங்கம் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக