எமது ஆயுதப் போராட்டத்தை ஒடுக்குகிறோம் என்று சொல்லி அரசு எமது சமூக வாழ்வை நிர்மூலமாக்கியுள்ளது என்று சூழலியலாளர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
சுவிஸ் சூரிச் சிவன் கோவில் சைவத் தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் 'மண் சுமந்த மேனியர்' எனும் தொனிப்பொருளிலான போரினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான அன்புக்கரம் கொடுக்கும் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ்.வடமராட்சி திக்கத்தில்; நடைபெற்றது இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாம் இன்று வீழ்ந்து கிடக்கின்றோம். ஆனால், நாம் ஆயுத ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளோமே தவிர, தோற்றுப்போன சமூகம் அல்ல என்பதை நினைவிற் கொள்ளவேண்டும்.
ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டபின்பும், எங்களது பயணத்துக்கு வேறு கதவுகள் இருக்கின்றன. நாம் மீண்டும் நிமிர்தெழுவோம்.
எமது போராட்டத்திற்கு தம் பாரிய பங்களிப்புக்களை நல்கி வந்த எமது புலம் பெயர் உறவுகள், அவலத்துக்கு ஆட்பட்டுள்ளபோதும், உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
1980களின் தொடக்கத்தில் இராணுவக் கெடுபிடிகளினால் எமது இளைய தலைமுறையினர் வெளிநாடுகளுக்குப் புலம் பெயரத் தொடங்கினார்கள்.
இளைஞர்கள் வடக்கு கிழக்கில் இருந்தால் தானே, ஆயுதப் போராட்டத்தில் இணைந்து கொள்வார்கள் என்று அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு வசதியாக அப்போதைய அரசாங்கம் கட்டுநாயக்கா விமான நிலையத்தின் கதவுகளை அகலத் திறந்துவிட்டது. அது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்பதை இலங்கை அரசு விரைவிலேயே உணர்ந்து கொண்டது.
புகலிடத் தமிழர்கள் தங்கள் வியர்வையைக் காசாக்கி இங்கு அனுப்பிவைத்தார்கள். அந்த உதவியைக் கொண்டு தான் நாம் போராடினோம்.
அந்த உதவிகளால் தான் நாம் இன்று தப்பிப்பிழைத்தும் இருக்கிறோம். அதன் தொடர்ச்சியாகவே, இப்போது சூரிச் சைவத் தமிழ்ச் சங்கம் தனது உதவுங்கரங்களை போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு நீட்டியுமுள்ளது.
இது அவர்கள் பனியில் விறைத்தபடி இரவு பகலாக உழைத்து அனுப்புகின்ற பணம். இந்தப் பணம் வீணாகிப் போய்விடாமல் உரிய பயனாளிகளைச் சென்றடைய வேண்டும். அதே சமயம், தொடர்ச்சியாக இது போன்ற உதவிகளையே நம்பி வாழும் சமூகமாக நாம் நீடிக்கவும் கூடாது.
அரசாங்கம், எம்மை எப்போதும் பிறர் தயவிலேயே தங்கி வாழும், தோற்றுப் போன மனோ நிலையில் வைத்திருக்கவே விரும்புகிறது. அப்போது தான், நாம் எமது அரசியல் பிரச்சினைகள் குறித்து பேசாது வாய்மூடி மௌனிகளாக இருப்போம் என்று எதிர்பார்க்கிறது.
அதற்கு இடம் கொடாது, உளவியல் ரீதியாக எம்மைத் தயார் செய்து கொண்டு மீண்டும் நிமிர்ந்தெழ வேண்டும். தோற்றுப்போன சமூகம் அல்ல நாம் என்பதை நிரூபிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக