செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010
கிளிநொச்சி, பொன்நகரில் மீளக்குடியமரச் சென்ற மக்களை பலவந்தமாக திருப்பி அனுப்பியது இராணுவம்.
கிளிநொச்சி, பொன்நகர் பகுதியில் மீளக்குடியமர சென்ற மக்கள் பலவந்தமாக சிறிலங்கா இராணுவத்தினரால் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். இவ்வாறு, குடியமரச் சென்ற மக்களை திருப்பியனுப்பிய சம்பவத்தால் நேற்று கிளிநொச்சியில் பதற்றம் நிலவியதாக தெரியவருகிறது. போரினால் இடம்பெயர்ந்து வவுனியா அகதி முகாம்களில் தங்கியிருந்த இந்த மக்கள் மீளக்குடியமர்த்துவதர்காக கிளிநொச்சிக்கு அழைத்து வரப்பட்டனர்.
எனினும் அவர்கள் சொந்த இடங்களில் மீளக்குடியமருவதை சிறிலங்கா இராணுவத்தினர் தடுத்தததினால் இவர்கள் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் தங்கியிருந்தனர்.
காணிகள் வடக்குமாகாணசபை வேலைத்திட்டங்களுக்காக சுவீகரிக்கப்படுகின்றன என்று கூறப்பட்டே இவர்கள் குடியமரவிடாது தடுக்கப்பட்டனர்.
இந்நிலையில், கிளிநொச்சி மத்திய கல்லூரியில் தங்கியிருந்த மேற்படி மக்கள் பொறுமையிழந்த நிலையில் நேற்று தமது காணிகளுக்குச் சென்று மீளக்குடியேறுவதற்காக காணிகளை துப்புரவு செய்துகொண்டிருந்த வேளை அங்கு வந்த சிறிலங்கா இராணுவத்தினர் மக்களை காணியிலிருந்து பலவந்தமாக வெளியேற்றினர்.
தமது சொந்த இடங்களில் தம்மைக் மீளக்குடியமர்த்துமாறு அரச அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை விடுத்து வந்த போதும் இது குறித்து யாரும் நடவடிக்கை எடுக்க வில்லை என விசனம் தெரிவித்துள்ள மக்கள்.
தம்மை சொந்த இடங்களில் தம்மைக் மீளக்குடியமர்த்துமாறு கோரி வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறியிடம் மனு ஒன்றினை கையளித்துள்ளனர்.
சிறிலங்காவின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் மாரிகாலம் ஆரம்பித்திருப்பதால் மக்கள் தற்காலிக கூடாரங்களில் வாழ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் தமது காணிகள் அபகரிக்கப்படுவதை நிறுத்தி தம்மை அப்பகுதிகளில் மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக