வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

ஈழத்தமிழ் அகதிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கும் கனேடிய தேசிய பத்திரிகை.

கனேடிய தேசிய ஆங்கிலப்பத்திரிகையான “நேஷனல் போஸ்ட்" என்ற வலதுசார் கொள்கையுடைய பத்திரிகை முதன் முதலில் தமிழீழ ஏதிலிகளின் கண்ணீர் மல்கிய மடல்கள் மூலமாக தனது மனக்கதவை திறந்து அவர்களுக்கு ஆதரவான கட்டுரையை பிரசுரித்துள்ளது.

அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும் என்ற பழமொழியை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது நேஷனல் போஸ்ட் பத்திரிகையின் மனமாற்றம். இந்த மனமாற்றம் எத்தனை காலம் நீடிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

நேஷனல் போஸ்ட் பத்திரிகை கடந்த பல வருடங்களாக ஈழத்தமிழருக்கு எதிரான கட்டுரைகளையே எழுதி வந்துள்ளது.
குறிப்பாக, ஈழத்தமிழர் என்றால் அவர்கள் அனைவருமே புலிகள் என்றும் அவர்களில் பலர் புலிகளிடம் ஆயுதப்பயிற்சி பெற்று கனடாவிற்குள் உட்புகுந்தார்கள் என்றும் பொய்யான கருத்துக்களை கனேடிய மக்கள் முன் வைத்து பிரச்சாரம் செய்து கொண்டுவந்தார்கள். ஸ்டீவர்ட் பெல் என்ற கட்டுரையாளர் ஈழத்தமிழருக்கு எதிரான தரக்குறைவான கட்டுரைகளையே எழுதிவந்துள்ளார்.

ஆனால், ஈழத்தமிழ் ஏதிலிகளின் மடல்களை இவரின் பந்தியூடாக கனடிய மக்கள்முன் வைக்கப்பட்டுள்ளமையானது வாய்மை எப்பொழுதும் வெல்லும் என்பதை பறைசாற்றி நிற்கின்றது.

ஆகஸ்ட் 12 (வியாழக்கிழமை) பிற்பகல் நான்கு மணிக்கு பின்னர் கனேடிய அதிகாரிகள் எம்.வி-சன்-சீ என்ற கப்பலை நெருங்கி, 59 மீற்றர் நீளமுள்ள அந்தக் கப்பலை விக்ரோறியாவிற்கு அருகேயுள்ள எஸ்குமல்ட் துறைமுகத்திற்கு வெள்ளிக்கிழமை காலை கொண்டுவந்தனர்.

பல மணிநேரங்களாக அந்த கப்பலை பரிசோதனை செய்த பின்னர், கப்பலில் வந்த 492 தமிழீழ ஏதிலிகளை இறக்கி தமது கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் தங்குமிடங்களில் வைத்து சட்டப்படி செய்யவேண்டிய பணிகளை கனடிய அதிகாரிகள் செய்துகொண்டார்கள். குறிப்பாக, இந்த கப்பலில் வந்தவர்களில் 380 ஆண்கள், 63 பெண்கள் மற்றும் 49 சிறுவர்கள் அடங்குகின்றார்கள். ஒரு குடும்பஸ்தர் (37 வயதானவர்) ஜூலை 28-ஆம் திகதி கப்பளுக்குள்ளேயே நோய் காரணமாக இறந்துவிட்டார். இவரின் உடலை கடலுக்குள்ளேயே வீசிவிட்டு பயணித்தார்கள் கனடாவின் கரையை தொட்ட இந்த ஏதிலிகள். இறந்த நபரின் மனைவி மற்றும் பிள்ளை ஈழத்தில் வசிப்பதாக கனடிய அதிகாரிகள் அறிவித்துள்ளார்கள். மேலும், கப்பலை ஓட்டி வந்த ஓட்டுனரை யாருமே காட்டிக்கொடுக்க முன்வரவில்லை என்று கனடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

இதனிடையே, கப்பல் பசிபிக் சமுத்திரத்தில் பயணிக்கும்போதும் மற்றும் கனடிய எல்லையை தொட்ட பின்னரும் கனடிய ஊடகங்கள் இந்த ஏதிலிகளுக்கு எதிராக முழக்கமிட்டார்கள். இந்த கப்பலை திருப்பி அனுப்பிவிடவேண்டும் என்று பகிரங்கமாகவே கனேடிய அரசை நிர்ப்பந்தித்தார்கள். ஆனால், கனேடிய அரசோ இவர்களின் கூக்குரலை செவிமடுக்காமல், கனடிய சட்ட திட்டங்களுக்கு அமைய தமது கடமையை செய்து தமிழீழ ஏதிலிகளை கனடிய நாட்டுக்குள் அனுமதித்து அவர்களின் புகலிட கோரிக்கையின் விண்ணபங்களை குடிவரவு நீதிபதி முன் சமர்ப்பித்து அவரின் தீர்ப்புக்காக காத்திருக்கின்றார்கள்;. இதனிடையே, கனடிய ஊடகங்களில் குறிப்பாக நேஷனல் போஸ்ட் பத்திரிகையின் மனமாற்றம் மூலம் நிச்சயம் இந்த ஈழ ஏதிலிகளின் மனுவை கேட்டறியும் நீதிபதி சாதகமான தீர்ப்பையே வழங்க வழிகோணும் என்பதே சட்டவல்லுனர்களின் கருத்து.

தமிழருக்கு எதிரான கொடுமை சிறிலங்காவில் நின்றபாடில்லை தமிழருக்கு எதிரான கொடுமைகள் சிறிலங்காவில் நின்றபாடில்லை என்று சாட்சியமாக கூறியுள்ளார்கள் தமது மடல்கள் மூலமாக நேஷனல் போஸ்ட் பத்திரிகைக்கு. ஏதோ கடந்த வருடத்துடன் போர் நின்றுவிட்டதாகவும், புலிகள் தான் பயங்கரவாதத்தை சிறிலங்காவில் நடாத்தி மக்களை கொடுமைப்படுத்தியதாக கருதி செய்திகளையும் கட்டுரைகளையும் வரையும் கனேடிய செய்தித்தாபனங்களுக்கு உண்மையின் நிதர்சனம் என்ன என்பதை தெரியப்படுத்தியுள்ளார்கள் கனடாவை வந்தடைந்து இருக்கும் ஈழ ஏதிலிகள்.
உள்ளூர் மற்றும் உலக ஊடகங்களை அனுமதிக்காமலும் பொய்ப்பிரச்சாரங்கள் மூலமாகவும் நான்காம் ஈழப் போர் கடந்த வருடம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால், உலக ஊடகங்களோ உண்மையறியாது சிறிலங்கா அரசு கொடுக்கும் செய்திகளுக்கு முன்னுரிமை தந்து உண்மைக்கு புறம்பான செய்திகளை தந்தது. சில மனித உரிமை அமைப்புக்களின் அறிக்கைகளின் பின்னர் சில உலக ஊடகங்கள் உண்மையான தகவல்களை தந்தது. ஆனால் பெரும்பான்மையான உலக ஊடக அமைப்புக்கள் ஏதோ கடந்த வருடத்துடன் தமிழரின் பிரச்சனை ஏதோ தீர்ந்துவிட்டதென்ற மாயையில்தான் இன்றுவரை இருந்து வந்துள்ளனர். ஆனால், கனடாவை வந்தடைந்திருக்கும் ஈழ ஏதிலிகள் தான் சாட்சிகளாக இருக்கின்றார்கள்.

சிறிலங்காவில் நடக்கும் படுகொலைகள் மற்றும் ஆட்கடத்தல்கள் போன்றவற்றில் இருந்து தப்புவதற்காகவே தாம் கனடா வந்தார்கள் என்று சொல்லும் இந்த ஈழ ஏதிலிகள் தமது மடல்கள் வாயிலாக தமது நன்றிகளை கனடாவுக்கு தெரிவித்துள்ளதுடன் தங்களைப் பற்றிய பொய்யான பரப்புரையை சிறிலங்கா அரசாங்கம் செய்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். “நாங்கள் போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் என்பதை கனடிய அரசும் அதன் மக்களும் நம்பும்படி கேட்டுக் கொள்கிறோம்" என நேஷனல் போஸ்ட் பத்திரிகைக்கு அனுப்பிய ஒரு கடிதத்தில் அந்த ஏதிலிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.

அனலை நிதிஸ் ச. குமாரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக