சனி, 14 ஆகஸ்ட், 2010
அருட் சகோதரிகளின் பராமரிப்பில் செஞ்சோலை -சிவசக்தி ஆனந்தன் சந்திப்பு
கிளிநொச்சி செஞ்சோலையிலிருந்து இடம்பெயர்ந்து தற்போது வவுனியாவில் தங்கியிருக்கும் பிள்ளைகளை வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நேரில் சென்று பார்வையிட்டு அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்துகொண்டார்.
11.8.2010அன்று காலை வவுனியா, இறம்பைக்குளம், ஹொரவப்பத்தான வீதியில் அமைந்துள்ள டொன்பொஸ்கோ சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் இந்தச் சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை நேரில் சென்று பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் அவர்களுக்குப் பொறுப்பாக உள்ள டொன்பொஸ்கோ நிறுவனத்தின் அருட்சகோதரிகள் மேரி மற்றும் மெட்டில்டா ஆகியோருடன் உரையாடி சிறுவர்களின் மனநிலை மற்றும் அவர்களின் கல்வி சம்பந்தமாகக் கேட்டறிந்துகொண்டார்.
அப்போது அவர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:
இந்தச் சிறுவர் பராமரிப்பு நிலயத்தை நடத்திவரும் அருட்சகோதரிகள் சென்னையிலுள்ள பாத்திமா தேவாலயத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் சிறுவர்கள் மற்றும் இளைஞர் பராமரிப்பில் தேர்ந்தவர்கள் என்று வவுனியா கோட்டமுதல்வர் எமிலியான்ஸ்பிள்ளை தெரிவித்தார்.
திருமணவயதை எட்டிய சில பிள்ளைகளும் இருக்கின்றனர்
இவர்கள் சிறுமிகளின் மனக்குறைகளைக் கேட்டறிந்து அவர்களை உளவியல்ரீதியாக ஆற்றுப்படுத்துவதுடன் தங்களது குடும்ப உறுப்பினர்களாகவே நடத்துகின்றனர் என்பது அவர்களுடன் உரையாடியதிலிருந்து தெரிகின்றது.
இங்கு இப்பொழுது 115 பெண்பிள்ளைகள் தங்கியுள்ளனர்.
அவ்வப்பொழுது நீதிமன்ற ஆணைகளைப் பெற்றுக்கொண்டு உறவினர்கள் வந்து சில பிள்ளைகளை அழைத்துச் செல்கின்றனர். இதுதவிர திருமணவயதை எட்டிய சில பிள்ளைகளும் இருக்கின்றனர். அத்தகைய பெண்களுக்குக் காதலர்கள் இருந்தால் அருட்சகோதரிகள் அவர்களது பெற்றோருடன் கலந்துரையாடி அவர்களது சம்மதத்தைப்பெற்று திருமணம் செய்தும் வைத்துள்ளனர்.
இவர்களது கல்விக்கென்று இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயம் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. விசேட வகுப்புகளை நடாத்தி அவர்களது கல்விமேம்பாட்டிற்கு இந்தக் கல்விநிறுவனம் ஆற்றிவரும் பணி பாராட்டத்தக்கது. இம்மாணவிகள் கணிதப் பாடத்தில் சற்று பலவீனமாக உள்ளனர். இந்தப்பாடத்தில் சிறப்பான கவனம் தேவைப்படுகின்றது.
இவர்கள் கலைத்துறையில் நல்ல ஆர்வமுள்ளவர்ளாக இருக்கின்றனர். சங்கீதம் மற்றும் நாடகத்துறையில் மிகுந்த ஈடுபாடு காட்டுவதாக அருட்சகோதரிகள் தெரிவித்தனர்.
இப்பராமரிப்பு நிலயத்தில் முன்பள்ளி தொடங்கி கல்விதராதர உயர்தர வகுப்பில் படிக்கும் மாணவிகள்வரை இருக்கின்றனர். ஒவ்வொரு பிள்ளையும் மற்ற பிள்ளையுடன் அன்புடன் நெருங்கிப்பழகி ஒருகுடும்பமாக வாழ்வதைக் காணமுடிந்தது. செஞ்சோலையில் இடம்பெற்ற குண்டுவீச்சுத்தாக்குதல் இப்பிள்ளைகளின் மனத்தில் நீங்காத வடுவாக இன்னமும் இருப்பதை அறியமுடிந்தது. சுமார் 35பிள்ளைகள் எத்தகைய உறவும் ஆதரவும் இன்றி இருக்கின்றனர் என்றும் இங்குள்ளவர்களின் கல்வி தொடங்கி அவர்கள் தமது வாழ்க்கையைத் தாமே அமைத்துக்கொள்வதுவரை அனைத்தையும் செய்வதற்குத் தாங்கள் தயாராக இருப்பதாகவும் அருட்சகோதரிகள் தெரிவித்தனர். அவர்களின் இந்த வார்த்தைகள் ஆறுதலளிப்பதாக இருந்தது.
கடந்த மாதம் கோயில்குளம் அகிலாண்டேஸ்வரி முதியோர் மற்றும் சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் உள்ள சிறுவர்களையும் சந்தித்ததாகவும் அங்குள்ள சிறுவர்களும் நன்கு பராமரிக்கப்படுவதாகவும் இங்குள்ள பிள்ளைகளுக்கு கோவில்குளம் இந்து மகாவித்தியாலயம் சிறப்பான கல்வியை வழங்கிவருவதுடன் அவர்களது தேவைகளையும் நன்கு பூர்த்தி செய்து வருகின்றது என்றும் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதவாது:
புலம்பெயர் உறவுகளும் நல்லெண்ணம் கொண்டவர்களும் இத்தகைய நிறுவனங்களுக்குத் தமது பங்களிப்பைச் செய்து இச்சிறுவர்களின் எதிர்காலத்தைப் பிரகாசம் அடையச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் வெளிநாடுகளில் வாழ்கின்ற எமது உறவுகள் வீண்செலவுகளைக் குறைத்துக்கொண்டு இத்தகைய பிள்ளைகளின் எதிர்காலத்திற்குத் தமது பங்களிப்பைச் செய்ய வேண்டியது தலையாய கடமை என்றும் தெரிவித்தார்.
கோயில்குளம் அகிலாண்டேஸ்வரி சிறுவர் இல்லம் (அருளகம்) மற்றும் சிவன் முதியோர் இல்லப்பராமரிப்பாளர் திரு ஆறுமுகம் நவரத்தினராஜா அவர்களுடன் +94776567827 என்ற தொலைபேசி இலக்கத்துடனும் வவுனியா டொன்பொஸ்கோ சிறுவர் பராமரிப்பு இல்லத்துடன் +94243248555 என்ற தொலைபேசி இலக்கத்துடனும் தொடர்புகொண்டு உங்களது பங்களிப்பைச் செலுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக