சனி, 14 ஆகஸ்ட், 2010
செஞ்சோலைக்காப்பக குழந்தைகள் மீதான படுகொலையின் 4 வது ஆண்டு பிரான்சில் நினைவு வணக்கம்
வல்லிபுனம் கிராமத்தில் அமைந்திருந்த “ செஞ்சோலை வளாகத்தின் மீது சிங்கள அரசின் குண்டுவீச்சு விமானங்கள் நடாத்திய கோழைத்தனமான குண்டு வீச்சில் கொல்லப்பட்ட 63 உயிர்களுக்கும் பிரான்சு நாட்டில் செவரோன் மாநகரத்தில் தமிழீழ மக்களின் படுகொலை நினைவாக அமைக்கப்பட்ட நினைவுக்கல்லின் முன்பாகவும், மரங்களின் முன்பாகவும் தமிழினப்பற்றாளர்களால் 14ம் திகதி காலை 10:30 மணிக்கு மாவீரர் குடும்பத்தைச்சேர்ந்தவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றிவைக்க குழந்தைகள், இளையவர்கள், பெரியவர்கள் என சாவடைந்த 62 குழந்தைகளுக்கும், குழந்தைகளுடன் தந்தையராக இருந்து உயிரை விட்ட ஐயா அவர்களுக்குமென 63 சுடர்களும், மலர்களும் கொண்டு வணக்கம் செலுத்தியிருந்தனர்.
வாழ வேண்டிய இளங்குருத்துக்கள் இடையிலேயே கயவர்களின் கோழைத்தனமான, மிலோச்சத்தனமாக குண்டு வீசி கொல்லப்பட்டதானது மனிதநேயமற்றவர்களால் கூட ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும்;. மனித நேயம் என்பது மானிடராக பிறந்த ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய தொன்றாகும்.
மனிதனை விட ஓரறிவு குறைந்ததாக கூறப்படும் விலங்குகளும், மிருகங்களும் கூட அதை கடைப்படிக்கின்றன இன்று. மனிதமும், மனித நேயமும் இனம், மதம், நிறம், மொழி என்பதற்கு அப்பாற்பட்டது என்பதை இன்றைய நிகழ்வில் காணக்கூடியதாக இருந்தது. இன்றைய நினைவுநாளில் தானும் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக குறித்த நேரம் 10 மணிக்கு முன்பாகவே பூங்காவிற்கு வந்திருந்ததுடன் சாவடைந்த குழந்தைகளுக்கு மலர்மாலை அணிவித்து, ஒளியேற்றி, மண்டியிட்டு நினைவுக்கல்லை முத்தமிட்டு கண்ணீர் துளிகளால் தனது காணிக்கையை வழங்கிய ஒரு பிரதான பிரெஞ்சுப்பெண்மணியின் மனிநேயத்தை கண்ணுற்றதும், எமது வலியின் வேதனைக்கு ஒரு ஆறுதலாக இருந்திருந்தது.
தமிழீழ மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிக்கும் இனப்படுகொலைக்கும் சர்வதேசமும் அதன் அரசும் சேர்ந்து பங்களிப்பு வழங்கியிருந்தன. ஆனால் இன்று அந்த நிலைமாறி தமிழ்மக்களின் நியாயத்திற்கு செவிசாய்கின்ற உதவ வேண்டும் என்கின்ற நிலை ஏற்பட்டு வரும் இவ்வேளையில் எமது மக்கள் அந்த உணர்வுகளை புரிந்து கொள்ளாதமையும், வேதனையை ஏற்படுத்துகின்றது ( இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறான் ஞானத்தங்கமே) என்ற வரிகளையே நினைவு படுத்துகின்றன.
எத்தனை ஆண்டுகள் ஆனாலும், தொடர்ந்து வரும் காலங்களில் சிங்களத்தின் இன அழிப்பில் சிக்குண்டு உயிர் நீத்தவர்களின் உறவுகள், உங்கள் இதயம் அமைதி பெற இவ்நினைவு கல்லறையில் ஒளியேற்றி மனஅமைதி பெறவேண்டுகின்றோம்.
எத்தனை துயர்வரினும், எமது மண்ணுக்காக மரணித்தவர்களையும், எமக்கெனவொரு உயரிய வாழ்வை ஏற்படுத்தித் தந்து தம்வாழ்வை மண்ணுக்காக, மக்களுக்காக ஈன்றளித்த மாவீரர்களையும், எமது மக்களையும் நாம் என்றுமே மறக்காது இதயக்கோயிலில் வைத்து வணங்குவோம் அவர்களின் கனவை நனவாக்க உழைப்போம், என்று இந்த நினைவு கல்லறையில் அனைவரும் உறுதியெடுத்துக்கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக