கிழக்கு மாகாணத்திலுள்ள இந்து ஆலயங்கள் அரசாங்கத்தினால் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருவதாகவும் அந்த இடங்களில் பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்து ஆலயங்கள் தொடர்ந்தும் அழிக்கப்பட்டு வரும் நிலையில் பாரம்பரிய தமிழர்களுக்கான நிலங்களை இராணுவத்தினர் கைப்பற்றி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
திருகோணமலை ‐ மூதூர் பிரதேசத்திலுள்ள கங்குவேலி சிவன் ஆலயம், வெருகல் பால முருகன் ஆலயம், வெருகல் கல்லடி கிராமத்திலுள்ள நீலியம்மன் ஆலயம் என்பன உடைக்கப்பட்டு அந்த இடங்களில் பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.
பூர்வீக தாயக நிலங்கள் மற்றும் தமிழர்களின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க இடங்கள் இவ்வாறு மூன்று தசாப்தகாலமாக அழிக்கப்பட்டு வருவதுடன் மக்கள் சொல்லணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.
இதன் மூலம் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தைச் செலுத்த அரசாங்கத்தரப்பு முற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த காலப் போரில் வடக்கு கிழக்குப் பகுதிகளில் சேதமடைந்த நூற்றுக் கணக்கான ஆலயங்கள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
தமிழ் நிலங்களில் சிங்களக் குடியேற்றங்களை அமைப்பதுடன் பௌத்த ஆலயங்களை நிர்மாணிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இந்து அமைப்புக்கள் உள்ளிட்ட பல அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் யோகேஸ்வரன் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக