செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

ஜானகபெரேரா கொலை வழக்கின் முதன்மை குற்றம் சாட்டப்பட்ட நபர் சிறைச்சாலையில் உண்ணாவிரதம்


ஜானக பெரேரா கொல்லப்பட்ட வழக்கின் முதன்மையாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அப்துல் அமீது உமர் கத்தார் (36) என்ற இஸ்லாமியர் தனது வழக்கை அனுராதபுரத்திலிருந்து, வவுனியா உயர்நீதி மன்றத்திற்கு மாற்றக் கோரி நேற்று முதல் அனுராதபுரம் சிறைச்சாலையில் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

வவுனியாவைச் சேர்ந்த திரு. அப்துல் அமீது உமர் கத்தார், ஜானக பெரேரா என்ற சிங்கள இராணுவ மேஜர் ஜெனரல் கொல்லப்பட்ட அந்த இடத்தில் இருந்தார் என்ற காரணத்தை வைத்துக் கொண்டு, மேலும் இவருடன் 9 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் போதுமான சாட்சிகள் இல்லாத காரணத்தால் நீதிபதி இவ்வழக்கிலிருந்து 8 பேரை விடுதலை செய்தார்.

திரு. அப்துல் அமீது உமர் கத்தார் மற்றும் விடுதலைப்புலிகளின் அமைப்பில் அங்கம் வகித்த சுதாகர் (40) என்பவர் கடந்த  2009 மே மாதம் கடைசி கட்ட போரின்போது சரணடைந்து முகாமில் இருந்து வந்தவரை இவ்வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்து வைத்துள்ளனர். மொத்தம் 158 சாட்சிகள் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஜானக பெரேரா என்ற சிங்கள இராணுவ மேஜர் ஜெனரல், தமிழின அழிப்புக்கு துணை போனதால், 06ம் தேதி அக்டோபர் மாதம் 2008ம் ஆண்டு அனுராதபுரம் பழைய பஸ் நிலையத்திற்கு அருகாமையில் காலை 8.45 அளவில் ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய கிளையொன்றின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டபோது தற்கொடை குண்டுதாரியால் கொல்லப்பட்டார்.

தமிழினப் படுகொலையில் முக்கியமாக கருதப்படும் செம்மணி புதைகுழிக்கு காரணகர்த்தாவாக இருந்து வந்த ஜானக பெரேராவை செம்மணி புதைகுழியின் தந்தை என தமிழர்கள் சொல்லி வந்தனர். அத்தோடு, இவர் கிருசாந்தி என்ற தமிழ் மாணவியின் கொலைக்கு துணை நின்றவர் என்பதும், 1995ஆம் ஆண்டு, விடுதலைப்புலிகளின் பெண்கள் போராளிப்படை மணலாற்றுப் பகுதியில் நடந்த போரின்போது, சுமார் 200 விடுதலைப்புலி பெண் போராளிகளை மயக்க வாயு செலுத்தி அனைவரையும் உயிரோடு பிடித்து, அவர்களை சிங்கள இராணுவத்தினரின் காம இச்சைக்கு உட்படுத்திய பின்னர், அப்பெண் போராளிகளின் மர்ம உறுப்புகளில், கூரிய குச்சிகளை அடித்து, உலக போரியல் நடைமுறைக்கு எதிரான செயலை செய்தவர்தான் இந்த ஜானக பெரேரா என்ற சிங்கள இராணுவ மேஜர்.

மனித நேயமற்ற ஜானக பெரேராவை பழி எடுக்க தற்கொடை குண்டுதாரி ஒருவரால் அன்று கொல்லப்பட்டார். கொல்லப்பட்டவர்களில் மூன்று வழக்குரைஞர்களும் அடங்குவர். இதனால் தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள அப்துல் அமீது உமர் கத்தார் என்பவருக்கு அனுராதபுர வழக்குமன்றத்திற்கு ஒரு வழக்குரைஞர்கள் யாரும் வழக்கை ஏற்று நடத்த முன்வர மறுத்து வருகின்றனர். அத்தோடு, பிற இடங்களில் இருந்து இவ்வழக்கில் வழக்காட எந்த ஒரு வழக்குரைஞர்களையும் வர அனுமதிக்கப்படுவதில்லை. இதனால், குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு நீதி பெற முடியாத சூழல் நிலவி வருகிறது.

தற்போது வழக்கு அனுராதபுரம் உயர்நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இங்குள்ள சிங்கள பெண் நீதிபதியோ, மனித உரிமைகளை மதிக்காத இலங்கை வரலாற்றில் அதிகமான தூக்கு தண்டனை அளித்து வந்திருக்கிறார். இலங்கையில் சுழல் காரணத்தைக் காட்டி, ஒரு நீதிபதியால், சாட்சிகளின் குற்றச்சாட்டுகள் எடுபாடாமல் போனாலும், தண்டனையை வழங்க முடியும். இப்படிப்பட்ட நீதிபதி ஒருவரால், தமிழர்களுக்கு நேர்மையான நீதி கிடைக்கும் என்பது அய்யமே.

இக்காரணங்களால், கடந்த 27.06.2010 அன்று அப்துல் அமீது உமர் கத்தார் தனது வழக்கை வவுனியாவுக்கு மற்ற கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டார். அப்போது, சிறைத்துறை எஸ்.பி.யாக இருந்து வரும் அதிகாரி திரு. அனுரட டி. சில்வா மற்றும் முதன்மை ஜெயிலர் திரு. தாமினி சிக்காவா என்பரும், திரு. அப்துல் அமீது உமர் கத்தாரிடம் வாக்குமூலத்தையும், கோரிக்கையையும் எழுத்து மூலம் வாங்கி நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்து கோரிக்கையை நிறைவேற்றுகிறோம் என்று சொன்னதால், அன்று உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.

இதற்கிடையில் இம்மாதம் 15ம் தேதி நீதிமன்றத்திற்கு சென்று வந்த திரு. அப்துல் அமீது உமர் கத்தாரிடமிருந்து எந்தவொரு மனுவும் சிறைத்துறை மூலம் வரவில்லை என்ற செய்தி கிடைத்துள்ளது. இதையடுத்து, அன்றே சிறைத்துறை அலுவலகத்தில் இன்றும் அமீதின் கையெழுத்திடப்பட்ட விண்ணப்பங்கள் கோப்புக்குள் இருப்பதை பார்த்து, சிறைத்துறை அலுவலர்களை கேட்டதும், விண்ணப்பங்களின் நகல்களை தாங்கள் நீதிமன்றத்திற்கு அனுப்பி உள்ளதாய் பொய்யான செய்தியை சொல்லியுள்ளனர். இதில் மனமுடைந்த திரு. அப்துல் அமீது உமர் கத்தார், நேற்று முதல் (16.08.2010) சாகும் வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார்.

உண்மை நீதி வேண்டி தமிழர்கள், சிங்கள சிறைகளில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருவது தற்போதைய இலங்கை அரசு தமிழர்கள் மீதான காழ்ப்புணர்ச்சியை எடுத்துரைப்பதாய் உள்ளது. உலக மனித உரிமை அமைப்புக்களும் இவைகளை கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக