திங்கள், 16 ஆகஸ்ட், 2010

புலம்பெயர் தமிழர்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசு வகுத்திருக்கும் சாம, தான, பேத, தண்ட வியூகம் - கேணல் ஹரிஹரன்

ஸ்ரீலங்காவிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் பிரிவினைவாத போராளிகளான தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) கொள்கை சார்ந்த நினைவலைகளில் ஊறிப்போயிருக்கும் ஆற்றலைச் செயலிழக்கச் செய்வதற்காக இந்து தத்துவசாத்திரத்தில் கூறப்பட்டுள்ள நான்கு வழிகளான சாம,தான, பேத,தண்ட வழிமுறைகளைச் ஸ்ரீலங்கா அரசு கையாள்வது போல் தெரிகிறது.

சாம என்பது தர்க்க ரீதியான காரணங்களையும் இயல்பறிவினையும் பயன்படுத்தி தன்னுடைய நிலமையினை விளக்குதல்.

தான என்பது குதிரைக்கு காரட்டினைக்காட்டி முன்னகர்த்துவது போன்ற பாரம்பரிய தந்திரத்தை பயன்படுத்தி வெற்றி கொள்ள முடியாவிட்டால் அவரை விலைக்கு வாங்கு என்கிற பொறிமுறை.

பேத என்பது முன்றாவது தெரிவு, அரசியல்வாதிகளுக்கு பலவித சலுகைகளையும் வழங்கி அவர்களுக்கிடையே பிளவினை ஏற்படுத்தி ஒரு சாராரின் ஆதரவினைப் பெறுதல்.

தண்ட என்பது கடைசிக்கட்டமுயற்சியாக படைகளை பயன்படுத்துதல் (அல்லது ஒத்துவராத மறு சாராரை காரட்டைக் காட்டியும் நகராத குதிரைக்கு தடியடி கொடுத்து வழிக்கு கொண்டு வருவது போல் நடத்துவது).

சமீபத்தில் பொதுமக்கள் முன் பகிரங்கமாக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) முன்னாள் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிநிதியும் உயர்மட்ட பாதுகாப்பு கைதியுமான குமரன் பத்மநாதன் (கே.பி) விவகாரம் பற்றிய ஸ்ரீலங்கா அரசின் முக்கிய திட்டமானது பேத வியூகத்தின் ஒரு கண்ணியே ஆகும்.

இது மிகப்பெரிய புலம்பெயர் சமூகத்தை கையாள ஸ்ரீலங்கா அரசு எடுத்திருக்கும் வேட்டைத் திட்டத்திற்கு கனகச்சிதமாகப் பொருந்துகிறது. ஏற்கனவே புலம்பெயர் தமிழர்களிலிருந்து சில பிரபலமான பிரமுகர்களுடன் (இவர்கள் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள்) தொடர்பு கொண்டு செயற்பட்டதின் பயனாக அவர்கள் கே.பி உடன் கை கோர்த்து வடக்கின் மீள் கட்டுமான பணிகளிலிறங்கச் சம்மதித்துள்ளார்கள்.

இதனை கே.பி தனது சமீபத்திய ஊடக நேர்காணல்களில் உறுதிப்படுத்தியுள்ளார். அவரது கூற்றுப்படி அவரால் புதிதாக வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அரசசார்பற்ற நிறுவன (NGO) அமைப்பான வடக்குகிழக்கு புனர்வாழ்வு அபிவிருத்தி நிறுவனம் (NERDO) புனர்வாழ்வு, மீள்கட்டுமானம், மீள்குடியேற்ற பணிகளில் முக்கிய பங்கினை ஏற்பதற்கு தயார் நிலையிலுள்ளது.

பல வருட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வெளிநாட்டு தொடர்புகளினால் செல்வாக்குள்ள பல புலம்பெயர் பிரமுகர்களுடன் கே.பி வலுவான தொடர்பினை ஏற்படுத்தியிருந்தார்.அவர்களில் எல்லோருமே கே.பியின் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்றில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகள் காரணமாக ஏற்பட்டவைகளை மீளமைக்க புலம்பெயர் தமிழர்கள் ஐக்கிய அமைப்பு ஒன்றினை ஏற்படுத்தி பணிகளைத் தொடர்வதற்கான வாய்ப்பு ஒன்றை கே.பி ஒருசாரர் முன்வைத்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. கடும்போக்கு விடுதலைப் புலிகளின் அனுதாபிகள் அவரை ஒரு தேசத்துரோகி என்று நியாயப்படுத்த முயல்வார்கள்.

அரசாங்கத்துடன் ஒத்துழைக்கும் தமது செயலை நியாயப்படுத்தி கே.பி கூறுகையில், தமிழர்கள், நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சகாப்தம் முடிவடைந்த ஒரு காலகட்டத்தில் வாழ்கின்றபோது, யதார்த்தங்களை நன்கு புரிந்து கொண்டு புதிய சவால்களை எதிர்கொள்ளும் உத்திகளை மீள்நோக்கு செய்தல் அவசியம். கே.பி மேலும் கூறுகையில்” மக்களின் நலன்களில்மட்டுமே அக்கறை உள்ளது, முக்கியமாக சிறுவர்கள், தற்காத்துக்கொள்ள வழியின்றி முடமாக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய நிதியுதவி போன்றவை, மக்கள் யுத்தத்தினால் சலிப்படைந்து விட்டார்கள், அவர்களது துயர் துடைக்க எடுக்கப்பட வேண்டிய ஒவ்வொரு முயற்சியும் அரசியற் கலப்படமற்ற தூய்மையான மனிதாபிமான முயற்சியாக இருத்தல் வேண்டும்.”

இது அப்பட்டமான உண்மை. கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடி உயரப் பறந்து கொண்டிருந்த போது அவர்களின் ஆதரவாளர்களிடத்தில் இத்தகைய தர்க்கரீதியான காரணங்கள் நல்லபடியாக ஏற்கப்படவில்லை. ஆனால் இடர்சூழ்ந்த இந்த நேரத்தில் கே.பி போன்றதொரு மூத்த தலைவரிடமிருந்து வெளிவரும் இவ்வாறான வார்த்தைகள் நிச்சயமாக அவர்களின் மனங்களில் குறைந்த படசம் ஒரு இரண்டாவது சிந்தனையையாவது தோற்றுவிக்கும்.

அவரது நேர்காணலின்போது கே.பி கூறியவை சாதாரண இயல்பறிவுக்கும், இன்றைய நடைமுறைக்கும் ஏற்ற கருத்துக்கள். அல்- குவைவதா அமெரிக்கா மீது நடத்திய தாக்குதலும் அதைத்தெடர்ந்து, ஜிகாத் பயங்கரவாதத்திற்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்த போரும் உலகஅரசியல் தலைவர்களிடையே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு (எதிரான மனப்போக்கைத் தோற்றுவித்ததே தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்விக்கு மூலகாரணமாக இருந்தது.

தடுப்புக்காவலையும் மீறி அதிகரித்து வரும் கேபியின் பகிரங்க பிரசன்னங்கள், தமிழ் அரசியல் தலைவர்களிடையே ஒருவித மனஉளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. தங்கள் நிலையை ஸ்திரமற்றதாக்க ராஜபக்ஸ முயற்சிக்கும் தந்திர விளையாட்டே இது என அவர்கள் கருதுகிறார்கள .

கே.பி ஒரு சாதாரண கைதியாக இல்லாமலிருப்பது சிலவேளை அவர்களது இந்த அச்சத்துக்கு காரணமாக இருக்கலாம், பிரபாகரனின் உள்ளக அமைச்சின் முக்கிய அங்கத்தவரான ஒருவர், அவரது ஏனைய சகாக்கள் சட்ட நடவடிக்கையினை எதிர்நோக்கும்போது இவர் மட்டும் ‘குவான்டனாமா பே (Guantanamo Bay)’ யின் ஸ்ரீலங்கா பதிப்பான தடுப்புக்காவல் சிறையில் தனது பாதங்களை குளிர வைத்து சொகுசாக வீற்றிருக்கிறார். மலேசியாவில் நிகழ்ந்த அவரது கைதும் ஸ்ரீலங்காவிடம் அவர் ஒப்படைக்கப்பட்ட விதமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின் நிகழ்ந்த பரபரப்பான ஒரு பெரிய கதை.

ஆனால் அவரது முதல்வருட தடுப்புக்காவல் சிறைவாசம் முடியுமுன்னரே மாயமனிதர் போன்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயத கொள்வனவாளர் பீனிக்ஸ் பறவைபோல் புலிப்போராளிகளின் சாம்பலில் இருந்து உயிர்த்தெழுந்து அரசியல் பெருவோட்டத்தில் இணைவார் என்று பரவலான வதந்திகள் கிளம்பியிருந்தன.

ஒரு கைதியாக இருந்தும் ஊடக இடைவெளிகளை அவர் விடாது நிரப்பி வருவது அரசியல் யாத்திரைக்கான தனது செயல்முறைகள் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது என்பதன் அறிகுறியாக இருக்குமோ?

இது அவரைப்பற்றி வெளிவந்த பல கதைகளுடன் நன்கு பொருந்துகிறது, மிகவும் பிரபலப்படுத்தப்பட்ட அவரது வன்னிப் பயணத்திலிருந்து இது ஆரம்பமானது, புலம்பெயர் தமிழ் தலைவர்களுடன் வன்னி சென்று அங்கு நடைபெறும் மிள்குடியேற்ற நடவடிக்கைகளை பார்வையிட்டு அதன்பின்னர் அரச சார்பற்ற நிறுவனம் ( NGO) ஒன்றை ஆரம்பித்து புலம்பெயர் பங்களிப்பினைக் கோரியதும் இதிலடக்கம்.

கே.பியின் வெளிப்படையான நேர்காணல் கூற்றுக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியையும் தமிழ் மக்களின் இன்னல்களை மட்டும் வெளிப்படுத்தாது பாதுகாப்புச் செயலரையும், ஜனாதிபதியையும் துதிபாடுவது கேக்துண்டங்களுக்கு மாச்சீனி சேர்த்து சுவை கூட்டும் விளம்பர உத்தியாகவுமுள்ளது.

கே.பி க்கு வழங்கப்பட்டுள்ள பொதுசனத் தொடர்பு சலுகையானது ஸ்ரீலங்கா அரசின் திட்டமிட்ட ஒரு சூதாட்டம். எப்படியோ அவரது அரசியல் புனர்வாழ்வு தொடரப்போவது, இப்போது பாதுகாப்பிலிருக்கும் 737 முன்னிரைப் புலிப்போராளிகளுக்கு எதிராக அரசு சட்டநடவடிக்கை மேற்கொள்ளும் போது, கே.பி முடிக்குரிய தரப்பு சாட்சியாக மாறி சாட்சியமளித்த பின்னரே. விசேட நீதிமன்றங்களை அமைத்து விசாரணைகளை மேற்கொள்ளா விட்டால் இந்நடவடிக்கைகள் முடிவடைய ஒரு வருடத்தக்கு மேலாகும். இந்த உத்தேசக்கணிப்பீடு சரியாயின், வரும் 2011 ல் அரசியல் வானில் சஞ்சரிக்க கே.பி க்கு இடம் கிடைத்து விடும்.

ஏற்கனவே யுத்தத்திற்கு முன் ஸ்ரீலங்கா அரசு இறக்கிவிட்ட பல முயற்சிகள் தமிழீழ விடுதலைப் புலிகள் கால்பதித்திருந்த பல நாடுகளில் தங்கள் நிலையைக் கட்டிக்காக்கப் படாதபாடு படும்படியான நிலைக்கு தள்ளிவிட்டிருந்தது.

ஜனாதிபதி, பிரதமர், வெளியுறவு அமைச்சர் என்று எல்லோருமே கடந்த காலங்களில் தங்கள் வெளிநாட்டுப் பயணங்களின் போது இந்நோக்கினை வலியுறுத்தி வந்தார்கள். இம் முயற்சிகளுக்கு புறமே தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பினைத் தகர்த்தெறிய இன்டர்போலின் (Interpol) கூட்டு முயற்சியினையும் நாடப்போவதாக ஸ்ரீலங்கா அரசு கூறியிருந்தது.

இம் முயற்சிகளுக்கு மேலும் ஊக்கமளிப்பது போல சமீபத்தில் ஸ்ரீலங்கா இராணுவ புலனாய்வுப்பிரிவினர், தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பிரிவின் தலைவர் கஸ்ட்ரோவின் புதைக்கப் பட்டிருந்த நாட்குறிப்பையும் மற்றும் சில விரிவான விடயங்கள் தொகுக்கப்பட்ட ஆவணங்களையும் தோண்டி எடுத்துள்ளார்கள்.

இவ் ஆவணங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சகல சர்வதேச செயற்பாடுகளையும், மனிதக் கடத்தல், ஆயதக்கடத்தல்களில் தொடர்புடையவர்களையும் மற்றும் கிழக்காசியா, மேற்குஐரோப்பா, கனடா, ஆபிரிக்கா ஆகிய இடங்களிலுள்ள நிதிவளத் தளங்கள் பற்றியும் நன்கு விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளதாம்.

இதில் குறிப்பிடவேண்டிய சுவராஸ்யமான ஓரு விடயம் வார இறுதியில் காலியில் நடைபெற்ற கடற்பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பாதுகாப்புச் செயலர் கோத்தபாயா ராஜபக்ஸ இந்நோக்கம் பற்றி பேசும்போது “சுயமாக நாம் எவ்வளவோ பலம் வாய்ந்தவர்களாக இருந்தாலும், அரசு சாராத தனிநபர்களினால் சர்வதேசம் ஊடாக வரும் அச்சுறுத்தல்களுக்கு எதிராகத் தனிமைப்பட்டு இயங்கினால் நாம் பலமற்றவர்களாகவே இருப்போம்” என்று குறிப்பிட்டார்.

புலம் பெயர் தமிழர்களின் ஈழக்குறிக்கோளையும், தமிழ்போராளிகளை உயிர்த்தெழுப்பிக்க நடக்கும் முயற்சிகளையும் மறக்க வைக்க ஸ்ரீலங்கா அரசினால் முடியுமா?

ஆம் என்று பதிலளிப்பதாயின் சமமற்ற பல கலவைகளின் கூட்டான புலம்பெயர் சமூகத்தின் சிக்கலான பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும். அத்தோடு எவ்வாறு புலம்பெயர் தமிழ் சமூகம் தமிழ்போராளிகளின் பிரதான ஆதரவாளியாக மாறியது என்பதின் சரித்திர சம்பந்தம் வாய்ந்த உண்மைகளையும் தவிர்க்க வேண்டி இருக்கும்.

புலம்பெயர் தமிழர்கள் ஈழப்பிரச்சினைக்கு ஆதரவு வழங்கும் விடயத்தில் இருதுண்டுகளாக பிளவுபட்டு நிற்கிறார்கள், அடிப்படையில் அவர்கள் இரு வேறுபட்ட தளங்களில் நின்று செயற்படுகிறார்கள். ஒன்று உணர்ச்சிப் பெருக்கில் செயற்படும் தளம்,

பல வருடங்களாக தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களையும் தங்கள் சொந்த பந்தங்களை இழந்த சோகங்களையும் அடிப்படையாகக் கொண்டது. இன்னமும் இன்னலின்பிடியில் சிக்கித் தவிக்கும் தமது உறவுகளுக்கு நேரடியாகச் சென்று உதவ முடியாத இயலாமை அவர்களை இப்போது கடும் கோபத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது.

 ஸ்ரீலங்காவில் நடப்பவைகளால் உணர்ச்சி வயப்பட்டு தத்தளிக்கும் பெரும்பான்மையோர் அநேகமாக இந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள்தான். கே.பியின் ஆதரவுடன் ஸ்ரீலங்கா வகுக்கும் வியூகத்தில் இந்தப் பகுதியினர் விழுந்து விடலாம், அரசியல் முன்னேற்பாடுகளையும் தொடங்கி அரசு ஒரே கணையில் இரு இலக்கை வீழத்தலாம்.

மறு பாதியினர் ஆழமான கொள்கைப் பற்றாளர்கள், தமிழின் தனித்துவத்தை பேணிப் பாதுகாப்பதும் தமிழீழத்தை உருவாக்குவதுதான் அதற்கான ஒரே வழி என்றும் விசுவசிப்பவர்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் தோற்றத்திற்கு முன்னரே இவர்கள்தான் தமிழீழத்தின் ஆரம்ப கர்த்தாக்கள். இந்தப் பாதியினர் கடந்த கால அனுபவங்கள் காரணமாக பெரும்பான்மை சிங்களவர்களின் அரசியல் அபிலாசைகளில் ஆழமான சந்தேகம் கொண்டுள்ளார்கள். அதுதான் பிரிவினைவாதம் என்கிற ஊற்றின் தொடக்கம். கே.பி வழங்கும் விளக்கங்கள் அநேகமாக இந்தப் பகுதியினரின் மனங்களை முற்று முழதாக வெற்றி கொண்டுவிட முடியாது.எப்படியாயினும் அவர்களின் நம்பிக்கை முறைகளில் ஒரு கீறலை ஏற்படுத்தலாம்.

இந்தப் பகுதியினரிடத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கும் நம்பிக்கைகளை பொய்யாக்கும்விதமான ஒரு அரசியல் தீர்வே இவர்களுக்குத் தேவை. கடந்த மூன்று தசாப்தங்களாக ஆட்சி செய்த அரசாங்களால் இதை அணுகவே முடியவில்லை. இப்போது கூட ஒரு சிறிய அளவே நிறைவேற்றப்பட்டுள்ளது. அரைகுறை தீர்வான அரசியலமைப்பின் 13வது சட்டத்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது கூட வெறும் வாய்பேச்சளவிலேயே உள்ளது.

ஸ்ரீலங்காவைச் சேர்ந்தவரும் பயங்கரவாதம் பற்றிய ஆய்வுகளில் சர்வதேசப் புகழ் தேடிய அதி உயர் தகைமைகளைக் கொண்ட பேராசிரியர் றோகான் குணரட்ன கடந்த வாரம் ஸ்ரீலங்காவின் தலைநகர் கொழும்பில் யுத்தத்தின் பின் எதிர்நோக்கும் சவால்கள் என்கிற தலைப்பில் பேசும்போது இந்த உள்வீட்டு உண்மைகளை தொட்டுக்காட்டினார்.

அவர் கூறியதாவது” சுதந்திரம் கிடைத்த காலத்திலிருந்து ஸ்ரீலங்காவின் தலைவர்கள் பல இனம் பல மதம் கொண்ட சமூகமாக ஆட்சி செய்யத் தவறியதின் தாக்கமே ஸ்ரீலங்காவின் இன-அரசியல் மோதல்கள். ஸ்ரீலங்கா அரசியல் தலைவர்கள் ஸ்ரீலங்காவின் நீண்டகால தேசிய நலன்களை குறுகிய கால அரசியல் இலாபத்துக்காக விட்டுக் கொடுத்துள்ளனர்.”

ஸ்ரீலங்கா அரசியல்வாதிகள் இனி எப்போதும் இனம் மதம் சார்பான அரசியல் நடத்த மாட்டோம் என்கிற புரிந்துணர்வை தம்முள் கட்டியெழுப்பி, இளையோர் மனங்களில் நஞ்சு பாய்ச்சி அவர்களை தீவிரவாதிகளாக்குவதை தவிர்த்து, இன,மத பிரிவினைகளுக்கு வலுவூட்டுவதை நிறுத்தினால், அன்றி இந்த நாட்டில் துர்ப்பாக்கியமான கடந்த கால இன்னல்கள் அநேகமாக மீண்டும் மீண்டும் ஏற்படக்கூடும்.

ஸ்ரீலங்கா அரசும் அரசியல் தலைவர்களும் அரசியல் நம்பிக்கை என்ற ஜீவாதார நிலையை கட்டியெழுப்ப முயற்சிக்கிறார்கள் என்பதற்கு எந்த அறிகுறியும் தென்படாததால் அவரது வார்த்தைகளை கவனத்தில் எடுத்து நன்கு செயற்படவேண்டும்.

இத்தாலிய தத்துவமேதை மச்சியவெல்லியானின் ( Machiavellian ) கோட்பாடுகளுக்கமைய (“எவனொருவன் காலத்திற்கேற்ப செயற்படுகிறானோ அவனே பயனடைவான், எவனது செயல்கள் காலத்திற்கு பொருந்தாதோ அவனது முயற்சிகள் பயன் தராது.”) இதை அணுகாவிட்டால் புலம்பெயர் சமூகத்தை கையாளும் முயற்சி சாதகமான தீர்வினைத் தராது.

(கேணல். ஹரிஹரன் தெற்காசியப் பிராந்திய ஓய்வுபெற்ற இராணுவ புலனாய்வு நிபுணர். இந்திய அமைதி காக்கும் படையினர் ஸ்ரீலங்காவில் பணியாற்றிய போது புலனாய்வுப் பிரிவின் தலைவராகப் பணிபுரிந்தவர்.அவர் சென்னை சீன கற்கை நிலையத்துடனும், தெற்காசிய ஆய்வுகள் மையத்துடனும் இணைந்து பணியாற்றி வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக