வியாழன், 9 செப்டம்பர், 2010

30ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமது சொந்தக் காணியை மிதித்துள்ளபோதும் அச்சம் தீராத பீமன்கல் கிராம மக்கள்.

தமிழ் மக்களால் கைவிடப்பட்ட காணிகளில் இன்றுவரை மாமடு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வாழ்கின்ற சிங்கள மக்களே பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 02.09.2010 அன்று வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுடன் நாமும் இந்தக் கிராமத்தைச் சுற்றிப்பார்த்தோம். அதன் விவரங்களை வாசகர்களுக்குத் தருகின்றோம்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 உறுப்பினர்களின் முயற்சியால் இந்தக் கிராமம் உருவானதாக இந்தக் கிராமத்தின் வரலாற்றை விவரிக்கத் தொடங்கினார் தற்பொழுது 66வயதை எட்டியுள்ள சுப்பிரமணியம் என்பவர். அவருடன் உரையாடியதிலிருந்து பீமன்கல்லின் ஆதியை நன்கு தெரிந்துள்ளவர் என்பதைப் புரிந்து கொள்ளமுடிந்தது.

ஆரம்பத்தில் 3குடும்பமாக இருந்த இந்தக் கிராமம் பின்னர் 12 குடும்பங்களாக அதிகரித்து மேலும் விரிவடைந்து 36குடும்பங்களாக உயர்வடைந்தது. வளாவையிலிருந்து 5குடும்பத்தினர் கலவரத்தினால் பாதிக்கப்பட்டு இக்கிராமத்திற்கு வந்து சேர்ந்தனர்.

1977இல் இடம்பெற்ற கலவரத்தினால் மலையக மக்கள் தமது உழைப்பு மற்றும் ஏனைய உடைமைகளை விட்டுவிட்டு உடுத்த உடுப்புடன் வெளியேற்றப்பட்டதைப் போன்றே இந்தக் கிராமத்து மக்களும் உடுத்த உடையுடன் அதே ஆண்டு மாமடுவில் வசித்து வந்த சிங்கள காடையர்களினால் வெளியேற்றப்பட்டனர். முன்பு மாமடு கிராமத்திலும் தமிழர்கள்தான் இருந்தனர். பின்னர் ஜே.ஆரினால் சிங்கள மக்கள் குடியேற்றம் செய்யப்பட்டனர். இவர்களிடம் ஆரம்பத்தில் காணிகள் இல்லை. தமிழ் மக்களின் காணிகளில் வேலை செய்தனர். பின்னர் அன்றைய அரசாங்கத்தின் ஆதரவுடன் கலவரத்தைத் தோற்றுவித்து தமிழ் மக்களை இங்கிருந்து விரட்டியடித்தனர்.

1977இல் இடம்பெயர்ந்த பீமன்கல் மக்களில் சிலர் மீண்டும் ஓரிரு மாதத்தின் பின்னர் இந்தக் கிராமத்திற்கு வந்து பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுவிட்டு மீண்டும் வெளியேறிவிட்டனர். 1977 கலவரம் இம்மக்களை மனத்தளவில் மிகவும் பாதித்துள்ளதை அவர்களின் பேச்சிலிருந்து புரிந்துகொள்ள முடிந்தது.

தமிழ் மக்களால் கைவிடப்பட்ட காணிகளில் இன்றுவரை மாமடு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வாழ்கின்ற சிங்கள மக்களே பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பெரும்பாலான காணிகள் பயிரிடப்படாமையால் காடு படர்ந்து காணப்படுகின்றது. இந்தக் கிராமத்தைச் சுற்றிப்பார்த்த பொழுது அங்கே பாருங்கள் மரங்கள் மற்றும் புல்புதர்களால் சூழ்ந்துள்ள அந்தப் பகுதியில்தான் ஏராளமான வீடுகளும் பாடசாலையும் இருந்தது என்று அவர்கள் காட்டிய திசையைப் பார்த்து அதிர்ச்சியுற்றோம்.

பீமன் குளத்தைப் பார்வையுற்ற நாம் அதன் ஒருபுறம் இயற்கையாகவே மலைக்குன்றினால் அரணாக அமைந்திருப்பதைக் கண்டு ஆச்சியமுற்றோம். இந்தக் குன்றின் காரணமாகவே இந்தக்கிராமத்திற்கு பீமன்கல் என்று பெயர் வந்ததாகவும் முத்துலிங்கம் என்பவர் தெரிவித்தார்.

இந்தச் சிறிய கிராமத்தைச் சுற்றி சின்னக்குளம், துவரங்குளம், பெரிய குளம்> பீமன் குளம் என்ற குளங்கள் அமைந்துள்ளன.

இப்பொழுது 25 குடும்பத்தினர் மீள் குடியேறியுள்ளனர். கிடைக்கின்ற நிவாரண உதவிகளைப் பொருத்தும் பாதுகாப்பைப் பொருத்தும் எஞ்சியுள்ளவர்களும் விரைவில் மீள்குடியேறுவார்கள் என்று ஊர்ப்பெரியவர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

இந்தக் கிராமத்தில் மொத்தம் 12 கிணறுகளும் பொதுக்கிணறு 2ம் குழாய்க்கிணறு ஒன்றும் உள்ளது. இந்தக் கிணறுகள் துப்புரவு செய்யப்பட்டு மக்களின் பாவனைக்கு வழங்கப்பட வேண்டும்.

அரசின் மீள்குடியேற்ற நிவாரண உதவிகள் இங்குள்ள மக்களுக்கு இன்னமும் முழமையாகக் கிடைக்கப்பெறவில்லை. ரூ5,000 பணமும், 16 தகரங்களும் 8சீமெந்து மூட்டைகளும்  1தரப்பாளும் மாத்திரமே கொடுக்கப்பட்டுள்ளன. கேர் (Care) என்னும் தொண்டு நிறுவனம் இக்கிராமத்திற்கான அபிவிருத்தியை பொறுப்பெடுத்துள்ள போதிலும் அதன் பணிகள் ஏனோ முடங்கிக்கிடப்பதாகக் கிராம மக்கள் விசனப்படுகின்றனர்.

இந்தக்கிராமத்தை அண்டி கள்ளிக்குளம், கருங்காலிக்குளம், புளியங்குளம் என்னும் கிராமங்கள் உள்ளன. முன்பு இந்த நான்கு கிராமங்களுக்கும் ஒரு கிராம உத்தியோகத்தர் இருந்தார். இப்பொழுது மகாறம்பைக்குளம் கிராம உத்தியோகத்தரிடம் இந்தக்கிராமமும் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது அதனால்தான் தங்களது நிவாணங்கள் தாமதமாகக் கிடைக்கின்றன என்று ஊர் மக்கள் தெரிவித்தனர்.

எங்களது காணிகளைத் துப்புரவாக்கிக் கொடுக்கச் சொல்லுங்கள், வீட்டுக்காணிகளைச் சுற்றியுள்ள பற்றைகளை அகற்ற உதவி செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டதுடன் எமது வீடுகளுக்குத் தேவையான மணலை 4மைல் தொலைவிலிலுள்ள கச்சக்கொடியிலிருந்துதான் கொண்டுவர வேண்டியுள்ளது என்றும் அதற்கும் பர்மிட் தேவைப்படுகின்றது என்றும் அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து தமக்கு உதவும்படியும் கிராம மக்கள்  கோரிக்கை விடுத்தனர்.

மக்களின் கருத்தையும் தகவல்களையும் கேட்டுக்கொண்ட வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் உரியவர்களிடம் கதைத்து ஆவன செய்வதாக உறுதியளித்தார். மீள்குடியேற்றம் நடைபெற்ற உடனேயே பாராளுமன்ற உறுப்பினர் தம்மை வந்து சந்தித்ததால் கிராம மக்களின் முகங்களில் மகிழ்ச்சி பரவியிருந்தது.

30வருட இடப்பெயர்வின் பின்னர் தமது சொந்த இடத்திற்குச் சென்றுள்ள போதிலும் ஏதேனும் அசம்பாவிதம் நடக்குமோ என்ற அச்சத்துடனும் ஐயத்துடனுமே இக்கிராம மக்கள் வாழ்க்கையை நகர்த்துகின்றனர். இவர்கள் கொடுக்கும் உற்சாகத்தில்தான் எஞ்சியுள்ளவர்களும் மீளக்குடியேறுவர். வன்னியின் ஏனைய பிரதேசங்களைப் போன்றே இம்மக்கள் மத்தியிலும் உழைக்க வேண்டும் என்ற வெறி இருப்பதை உணர முடிந்தது.

8ஆம் வகுப்புவரை பாடங்கள் நடத்தப்பட்டுவந்த இந்தப்பாடசாலை உருத்தெரியாமல் இருந்த இடம்கூடத் தெரியாமல் உள்ளது. பாடசாலையை மீண்டும் புதிதாகக் கட்டி ஓ.எல்வரை வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டால் நகரத்தின் நெரிசல் வெகுவாகக் குறையும். கிராமத்தின் படித்தோரின் வீதமும் அதிகரிக்கும்.
 - வன்னியன்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக