ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

தமிழின உயிர்கொலை நாள்- செப்டம்பர் 5 : கிழக்கு பல்கலைக்கழக அகதிமுகாம் படுகொலையின் 20ஆண்டு நினைவு நாள் இன்று - இரா.துரைரத்தினம்


ஓகஸ்ட் செப்டம்பர் மாதங்கள் கிழக்கு மாகாண மக்களைப் பொறுத்தவரை அவர்களின் வாழ்வில் மறக்க முடியாத துன்பங்களையும் இழப்புக்களையும் கொடுத்த மாதங்கள். 1990ஆம் ஆண்டு யூன் மாதம் விடுதலைப்புலிகளுக்கும் ஸ்ரீலங்கா படைகளுக்கும் இடையில் போர் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு அம்பாறை பிரதேசங்களை ஸ்ரீலங்கா படைகள்.....

தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருந்தனர். முக்கியமாக மட்டக்களப்பின் எழுவான்கரைப் பிரதேசம் ஸ்ரீலங்கா படைகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.

கொலைகார இந்தியப் படைகள் வடக்கு கிழக்கை விட்டு வெளியேறிய பின்னர் சுமார் ஆறுமாத காலம் ஓரளவு நிம்மதியடைந்திருந்த கிழக்கு மாகாண மக்கள் மீண்டும் 1990 யூன் மாதம் 10ஆம் திகதிக்கு பின் போர் ஆரம்பிக்கப்பட்டதையடுத்து மீண்டும் அவர்கள் சந்தித்த அவலங்கள் என்பது சொல்லில் அடங்காதவை.

குறிப்பாக செப்டம்பர் மாதத்தில் இடம்பெற்ற கூட்டுப்படுகொலைகளால் அவர்கள் சந்தித்த துன்பங்கள் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாதவை. கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாம் படுகொலை, சத்துருக்கொண்டான் படுகொலை, சித்தாண்டி முருகன்கோவில் அகதி முகாம் படுகொலை, வீரமுனை பிள்ளையார் கோவில் படுகொலை, சம்மாந்துறை படுகொலை புதுக்குடியிருப்பு படுகொலை, என நீண்டு செல்லும் பட்டியலில் கிழக்கு பல்கலைக்கழக அகதிமுகாம் படுகொலையின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.

இன்றைய தினத்தையே 2000ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆகிய அமைப்புக்கள் ஒன்றிணைந்து தமிழின உயிர்கொலை நாள் என பிரகடனம் செய்து அதனை வருடாவருடம் நினைவு கூருவது என முடிவு செய்திருந்தனர்.

இதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் அக்காலப்பகுதியில் நடைபெற்ற கூட்டுப்படுகொலைகளை சர்வதேச மட்டத்தில் கொண்டுவந்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்துவதே இதன் நோக்கமாக இருந்தது.

இன்று 20வருடங்களை கடந்த போதிலும் கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமிலிருந்து கடத்திச் செல்லப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என தெரியாத நிலையிலேயே அவர்களின் பெற்றோரும் உறவினர்களும் உள்ளனர்.

1990 யூன் மாதத்திற்கு பின் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதையடுத்து இராணுவத்தினர் மட்டக்களப்பு எழுவான்கரை பிரதேச கிராமங்களை நோக்கி முன்னேறி வந்ததையடுத்து தமிழ் மக்கள் பாதுகாப்பு கருதி கோவில்கள், பாடசாலைகள், என பல இடங்களிலும் தஞ்சமடைந்திருந்தனர். இதில் வந்தாறுமூலையில் உள்ள கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் 45ஆயிரம் பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்தனர்.

வாளைசேனை, ஏறாவூர் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி என மட்டக்களப்பின் எழுவான்கரைப்பிரதேசத்தை முழுமையாக கைப்பற்றியதையடுத்தே இந்த அனர்த்தம் நடைபெற்றது.

செப்டம்பர் 5ஆம் திகதி அதிகாலை 6மணியளவில் அகதி முகாமில் பெரும்பரப்பும் எல்லோர் முகத்திலும் அச்சமும் பீதியும் காணப்பட்டது. கொம்மாதுறை இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமை சுற்றிவளைத்திருந்தனர்.

இவர்களுடன் மட்டக்களப்பு நகரிலிருந்து இராணுவ புலனாய்வுப் பிரிவினரும், இராணுவத்தினருடன் சேர்ந்து படுகொலைகளை புரிந்து கொண்டிருந்த புளொட் இயக்கத்தினர் மற்றும் முஸ்லீம் ஊர்காவல் படையினர் ஆகியோரும் அங்கு வந்திருந்தனர்.

பருந்தின் பிடியில் அகப்படாது தன்குஞ்சுகளை சிறகுகளுக்குள் மறைத்துக்கொள்ளும் கோழிகளைப்போல பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு என்ன நடக்கப்போகிறதோ என்ற அச்சத்துடன் தமது அருகில் அவர்களை வைத்திருந்தனர்.

அந்த முகாமுக்கு பொறுப்பாக இருந்த பேராசிரியர் மனோ சபாரத்தினம், கலாநிதி ஜெயசிங்கம், கலாநிதி சிவலிங்கம் ஆகியோரிடம் தங்கள் பிள்ளைகளை காப்பாற்றுமாறு பொதுமக்கள் சூழ்ந்து கொண்டனர்.

அங்கு வந்த கொம்மாதுறை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி தாங்கள் முகாமை சோதனையிடப் போவதாகவும் விடுதலைப்புலிகள் அங்கு இருப்பதாக தமக்கு தகவல் கிடைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அவருடன் முனாஸ் என்று அழைக்கப்படும் றிச்சட் டயஸ், கப்டன் பாலித, கப்டன் குணரத்னா, முஸ்லீம் ஊர்காவல்படையைச்சேர்ந்த மேஜர் மஜீத் புளொட் இயக்கத்தைச் சேர்ந்த மோகன் ஆகியோர் அங்கு வந்திருந்தனர். அவர்கள் சுமார் 15க்கும் மேற்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளையும் கொண்டு வந்திருந்தனர்.

அங்கு வெள்ளைவானில் ஒலிபெருக்கி ஒன்று கட்டப்பட்டிருந்து. அந்த வெள்ளைவானிலிருந்து அந்த மக்களை நோக்கி சில அறிவிப்புக்கள் விடுக்கப்பட்டது.

12க்கும் 25வயதுக்கும் இடைப்பட்டவர்கள் ஒரு வரிசையிலும், 26க்கும் 40க்கும் இடைப்பட்டவர்கள் ஒரு வரிசையிலும், 40வயதிற்கு மேற்பட்டவர்கள் ஒருவரிசையிலும் நிற்குமாறு அறிவிக்கப்பட்டது.

பலிக்கு கொண்டு செல்லப்படும் மிருகங்களைப்போல நடக்கப்போகும் விபரீதத்தை அறியாதவர்களாக அந்த மூன்று வரிசையிலும் பொதுமக்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.

சாக்கினால் முகங்கள் மூடப்பட்டு கண்கள் மட்டும் தெரியக்கூடிய நிலையில் ஐந்து இளைஞர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்களுடன் ஏழு முஸ்லீம்களும் நிறுத்தப்பட்டிருந்தனர்.

ஒவ்வொரு வரிசையில் உள்ளவர்களும் முகமூடி அணிந்தவர்கள் முன்னாலும் முஸ்லீம்கள் முன்னாலும் நிறுத்தப்பட்ட போது ஆம் என சைகை காட்டியவர்கள் பேருந்தில் கொண்டு சென்று ஏற்றப்பட்டனர்.

இவ்வாறு 158 இளைஞர்கள் பேருந்தில் ஏற்றப்பட்டனர். இவர்களில் திருமணம் முடித்தவர்கள் இரண்டு மூன்று பிள்ளைகளுக்கு தந்தையாக இருந்தவர்களும் கூட அடங்கியிருந்தனர்.

பேருந்தில் ஏற்றப்பட்ட இந்த இளைஞர்கள் முதலில் கொம்மாதுறை இராணுவ முகாமுக்கும் பின்னர் நாவலடி இராணுவ முகாமுக்கும் கொண்டு செல்லப்பட்டு அங்கு படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகின்ற போதிலும் அதற்கான நேரில் கண்டசாட்சிகள் யாரும் இல்லை.

இதனையடுத்து மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் யோசப் பரராசசிங்கம் செய்த முறைப்பாட்டையடுத்து செப்டம்பர் 8ஆம் திகதி அந்த முகாமுக்கு சென்ற அப்போதைய இராணுவத்தளபதி ஹரி டி சில்வா இதுதொடர்பாக விசாரித்து அவர்களுக்கு என்ன நடந்தது என அறிவிப்பதாக கூறிச்சென்றார்.

அதன் பின்னர் செப்டம்பர் 23ஆம் திகதியும் கிழக்கு பல்கலைகழக அகதி முகாமுக்கு சென்ற இராணுவத்தினர் மேலும் 16 இளைஞர்களை கைது செய்து பேருந்தில் ஏற்றிச்சென்றனர். அவர்களுக்கும் என்ன நடந்தது என இதுவரை தெரியாது.

ஆனால் இதன் பின்னர் இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட சமாதானக்குழு பாதுகாப்பு அமைச்சுக்கு முறைப்பாடு செய்த போது ஒக்டோபர் மாதத்தில் மட்டக்களப்பு சமாதானக்குழுவின் தலைவர் த.அருணகிரிநாதனுக்கு அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயர்மார்சல் ஏ.டபிள்யூ பெர்னாண்டோ அனுப்பிவைத்த கடித்தில் செப்டம்பர் 5ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமில் 32பேரை மட்டுமே இராணுவத்தினர் கைது செய்ததாகவும், அவர்கள் அனைவரும் 24மணிநேரத்தில் விடுதலை செய்யப்பட்டு விட்டனர் என அறிவித்திருந்தார்.

அந்த கடிதத்தில் 32பேரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது இவர்கள் அனைவரும் காணாமல் போனவர்கள் பட்டியலிலேயே சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.

இது போன்று அக்காலப்பகுதியில் சுமார் 2400தமிழர்கள் மட்டக்களப்பில் மட்டும் இராணுவத்தினராலும், இராணுவத்தினருடன் சேர்ந்து இயங்கிய புளொட் மற்றும் ரெலோ இயக்கத்தினராலும், முஸ்லீம் ஊர்காவல் படையினராலும் படுகொலை செய்யப்பட்டனர்.

முக்கியமாக புளொட் மோகன் தலைமையில் இயங்கிய புளொட் குழுவினராலும் ராசிக் தலைமையில் இயங்கிய ஈ.பி.ஆர்.எல்.எவ் குழுவினராலும், மஜீத் என்பவர் தலைமையில் இயங்கிய முஸ்லீம் ஊர்காவல்படையினரும் இந்த படுகொலைகளில் முக்கிய பங்கு வகித்தனர். படுகொலைகளை புரிந்த முஸ்லீம் ஊர்காவல்படைகளை இப்போது அரசியலில் ஈடுபட்டிருக்கும் ஹிஸ்புல்லா, அலிசாகீர் மௌலானா போன்றவர்களுமே வழிநடத்திக்கொண்டிருந்தனர்.

அதேபோல இன்று புத்தரின் ஞானம் பேசிக்கொண்டிருக்கும் சிர்த்தார்தனும் படுகொலைகளை புரிந்த புளொட் இயக்கத்தினரை வழிநடத்திக்கொண்டிருந்தார்.

இன்று இச்சம்பவங்கள் எல்லாம் மறக்கப்பட்ட விடயங்களாகிவிட்டது. ஆனால் தமது சொந்தங்களை இழந்த உறவுகள் மட்டும் 20வருடங்கள் கடந்த நிலையில் தமது உறவுகளுக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

இதில் மிக வேதனையான விடயம். செப்டம்பர் 5ஆம் திகதி தமிழின உயிர்கொலை நாளாக பிரகடனப்படுத்தப்பட்டு வருடவருடம் அதனை நினைவு கூர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. வடக்கு கிழக்கில் தான் இதை இப்போது நினைவு கூர முடியாத அளவிற்கு இராணுவ நெருக்கடிகள் காணப்படுகின்றன. ஆனால் வெளிநாடுகளில் உள்ள அமைப்புக்களுக்கு இதை நினைவு கூருவதற்கு என்ன நெருக்கடிகள் வந்துவிட்டன?

தமிழ் தேசியத்தின் குத்தகைகார அமைப்புக்களுக்கு இதை நினைவு கூருவதற்கு இப்போது நேரம் இருக்காதுதான். ஏனெனில் அவர்கள் இப்போது தங்களின் பெரும்பகுதி நேரத்தை தங்களுக்குள் முட்டி மோதி சேறடிப்பதில்தான் கவனத்தை செலுத்தி வருகிறார்கள். பாவம் அவர்களை விட்டுவிடுவோம். ஆனால் கிழக்கு மாகாணத்தை பிரதிபலிக்கும் அமைப்புக்களாவது இதனை நினைவு கூர்ந்திருக்கலாம். இந்த கொலைகளை புரிந்தவர்களையும் போர் குற்றத்தின் கீழ் விசாரிக்க வேண்டும் என கோரியிருக்கலாம். ஏன் அவர்கள் இதனை செய்யவில்லை.

யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டதையும் காத்தான்குடி ஏறாவூர் பள்ளிவாசல் படுகொலைகளையும் வருடாவருடம் ஆட்டதுவசம் செய்வது போல தவறாது நினைவு கூர்ந்து கூட்டங்களையும் அறிக்கைகளையும் விடுபவர்கள் மட்டக்களப்பில் 1990 செப்டம்பர் மாதத்தில் 2400 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு என்ன சொல்லப்போகிறார்கள்?
thurair@hotmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக