ஐயா,உலகத்தமிழர்களுக்கு எல்லாம் தலைவரே,கும்புடுறோமுங்க.
நாங்க தான் தமிழ்நாட்டில் வாழும் தமிழர்கள்.நீங்க தான் இவ்ளோ நாளா உங்க உடன்பிறப்புகளுக்கெல்லாம் பக்கம் பக்கமா கடிதாசி போடுறத சொல்றீங்க ஆனா எங்க ஊருக்கு தபாலே வர்றது இல்ல. அதுனால, நாங்களும் உங்களுக்கு ரொம்ப நாளா ஒரு கடிதாசி எழுதி போட்டுருவோம்னு நெனச்சு எழுதியும் புட்டோம்.
ஆனா..அந்த கடுதாசிய போடுறதுக்கு தபால் பொட்டிய தேடிப்பாத்தோம்.எங்கேயுமே காணோம். அடங்கொப்புரானே!! அங்கங்க மரத்துல கட்டிவெச்சிருந்துச்சே மத்திய அரசாங்கம் தபால் பொட்டிகள..எங்கட போச்சு அதெல்லாம்னு தேடினா..ஒரு பொட்டிய மரத்துல கட்டிவெச்சுருக்காங்க. இன்னொரு பொட்டிய உச்சா போற எடத்துல கட்டி வெச்சிருக்காங்க. இன்னொரு பெட்டிய ஒரு குப்பத் தொட்டி பக்கத்துல வெச்சிருக்காங்க. நாங்க பயந்தே போயிட்டோம்.
அந்த பெட்டி இருக்குற நெலமய பாத்தா நீங்க கூட மறந்து போயி அதுல உங்க கடிதாசிய போடமாட்டீங்க. ஆனாலும் நாங்க அந்த பொட்டிய நம்பி நாங்க வுழுந்து வுழுந்து (நாங்க கரண்ட எல்லாம் பாத்தே ரொம்ப நாளாச்சு தலீவரே) இருட்டுல வெளக்கு புடிச்சுக்கிட்டு எழுதுன தபால அதுல போட்டுட்டு வந்துட்டோம். இதுலயும் ஒரு வெசயத்த பாருங்க!!!எங்களுக்கு எப்பீடி அந்த பொட்டில தபால போடுறதுன்னு நம்பிக்கை வந்துச்சுன்னு நீங்க கேட்டீஙகன்னா ஆச்சரியப்பட்டு மயக்கமே போட்டுறுவிங்க.
இதுக்கு மேல நாங்க நம்பாம இருக்க முடியுமா? அக்கம் பக்கத்துல இருந்த பொதுசனங்க சொல்லும் போது எங்களுக்கும் நம்பிக்கை வந்துருச்சு. நாங்களும் உங்களுக்கு எழுதுன கடிதாசிய அங்க செக்கசெவேல்னு சொறிநாயி மாதிரி தொங்கிட்டிருந்த பீத்த தபால் பொட்டில போட்டுட்டோம்.தப்பித்தவறி கூட எங்க கடுதாசி அந்த பொட்டிக்குள்ள தேன் போய் வுழுந்துச்சானு நாங்க கைய உள்ள விடல. ஏன்னா. நீங்க பாளயங்கோட்டையில ஜெயிலுக்குள்ளயே பாம்பு பல்லிங்கல்லாம் இருக்குன்னு சொல்லியிருந்தீக. அப்படியிருக்கும் போது இந்த பாழா போன தபால் பொட்டி எம்மாத்திரம்.
ஒரு வழிய நாங்க தபால் பொட்டில கடுதாசிய போட்டுட்டு வேகமா நடயக்கட்டிட்டோம். சரி..நாங்க ஏன் இப்பீடி பதிவு போடுறோமுன்னா...எங்களுக்கு அந்த பொட்டில போடுற கடுதாசி உங்களுக்கு வந்திருக்குமோ வந்திருக்காதோன்ற சந்தேகத்துல தான்.
சரி விடுங்க. மன்மோகன் சிங்குக்கு நீங்க எழுதுற கடிதம்லாம் கொஞ்சம் லேட்டா தான் போய் சேருதுனு பேசிக்கிறாக. நீங்க எழுதுற கடிதாசியே லேட்டா போகுதுனா எங்க கடுதாசி எப்பிடியும் அடுத்த பொங்கலுக்கு தான் உங்களுக்கு வரும். அதுனால தான் நாங்க இப்பீடி பதிவுல போட்டுறுலாமுன்ன இங்க வந்தோம்.
சரி வெஷயத்துக்கு வர்றோம். இப்பிடியே கடிதாசியயும், பாழாப்போன மன்மோகன் சிங் தபால் பொட்டியையும் பேசி சொல்ல வந்தத மறந்துற போறோம். ஆமா...நீங்க சாமியெல்லாம் கும்புடுறிங்களாமே! இன்னிக்கு வெசயகாந்து சொல்லிருக்காரு. உண்மைதானா தலவரே!! அதுலயும் சாமிகும்புட்ற வெசயத்துல மேல்மருத்துவர் பங்காருவ எல்லாம் மிஞசிப்புட்டிங்களமே.கையில எலுமிச்சம் பழத்த எடுத்துக்கிட்டு கிருஷணன் கோயில் இருக்க பக்கமா திரும்பி மனசார அந்த கிருஷ்ணனே உங்க கிட்ட வந்து இறங்கணும்ற மாதிரி தரிசனம் பண்ணுவீங்கன்னு சொல்றாரு.
ஆனாலும் நாங்கல்லாம் இதெல்லாம் நம்பவே மாட்டோம். ஏன்னா..கவரிமானுக்கு முடிபோச்சுன்னா முட்டிக்கிட்டு செத்துப்போகுமாம். நீங்க அப்படிப்பட்ட ஒரு தலவரு. உங்கள போயி இந்த வெசயகாந்து இப்படி சொல்லிப்புடடரேன்னு தான் நாங்க இரண்டு நாள பச்ச தண்ணி கூட குடிக்கல. உங்கட்ட இருந்து முரசொலில வெசயகாந்து சொன்ன இந்த விசயத்துக்கு பதிலடி வர்ற வர நாங்களும் சாப்பிடறது இல்லனு முடிவு பண்ணிட்டோம். இன்னொன்னயும் சொல்லிருக்காரு இந்த வெவரம் புரியாத விசயகாந்து...நீங்க கையில் போட்டுறுக்க பவள மோதிரமும், மேல போட்டுறுக்க மஞ்சத்துண்டும் ராசிக்காக போட்டுறுக்கீங்களாம். இந்த இரண்டயும் கழட்டவே மாட்டிங்களாம்.
'என்ன வீராப்பு பாருங்க' இந்த பார்ட் டைம் அரசியல் வாதிக்கு. இதுக்கு நீங்க பதில் குடுத்தே ஆகணும் தலவரே. இவருக்கு நீங்க தான் அண்ணாவவிட,பெரியார விட,தண்டவாளம் வி.கே அரங்கராச விட,'பெரியார் தொண்டன்' சந்தான கிருட்டிணன விட,'தமிழ்முரசு' கோ.சாரங்கபாணிய விட,'அழியட்டுமே திராவிடம்'நாராயணனவிட,'பேனாநர்த்தனம்' ரெ.திருமலைச்சாமிய விட, புரட்சிக்கவிஞர் பாரதிதாசனவிட,அணைக்கரை 'டேப்' தங்கராசுவ விட மிகப்பெரிய சுயமரியாதை சுடரொளினு எங்களுக்கு நிரூபிக்கணும் தலவரே!
அதுக்கு இந்த வெசயகாந்து சொன்ன பவள மோதிரத்தையும் மஞ்ச துண்டயும் கழட்ட முதல்ல தூக்கி எறிஞ்சு நம்மல்லாம் திராவிட போர் முரசுங்கறதயும், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஐயா சொன்ன மாதிரி, நம்ம கழகத்துக்கு இது மாதிரி பேசி இழுக்கு வந்தத தொடச்சு எறிஞ்சுட்டு ' தோழா நீ துயர் துடைப்பாய்! வாழ்வில் உயர்வடைவாயே! வாய்விட்டிசைப்பீர் சுயமரியாதை எக்காளம்" னு இந்த வெசயகாந்துக்கு பதிலடி கொடுங்க தலவரே!!!
நீங்க இப்பலாம் எங்கயும் நடந்து போய் இது போல் பீத்த தபால் பொட்டியலாம் கண்டுபிடிச்சு கடுதாசிலாம் போட வேணாம் தலவரே. நீங்க தான் இப்போ எலவச தொலக்காட்சி பொட்டி குடுத்துருக்கீங்க. நாங்களும் குவார்ட்டர், கட்டிங் வாங்கி போட்டுட்டு தாராளமா உங்க குடும்பம் தவிர மத்தவங்க தயாரிச்ச திருட்டு விசிடிய வாங்கி போட்டு பாத்துட்டு வீட்டுல சாஞ்சு கெடக்குறோம். அதுனால் நீங்க கடிதாசிலாம் எழுதாம உங்க கலிஞர் டீவிலயே உங்க திருமுகத்த காட்டி வெசயகாந்துக்கு சூடு வெச்சிங்கன்னா தான் நாங்க தல நிமிந்து நடக்க முடியும் தலவரே!
இப்படிக்கு,
உங்கள் கடுதாசியை விரைவில் எதிர்பார்க்கும்
குப்பணம் பட்டி உடன்பிறப்பு குப்புச்சாமி
(அதாவது சென்னையில் 'பிராமணாள்' என்ற பெயரை ஒரு காப்பிக்கடையில் எழுதியிருந்ததை நீக்க சொல்லி உங்கள் ஊரான திருவாரூரில் பிறந்த ஆ.முத்துக்கிருட்டிணன் உடன் சேர்ந்து முரளீஸ் கபே என்ற கடையின் முன் மறியல் நடத்தி ஜெயிலில் களி தின்று இன்றைக்கு வெட்டியாய் பொழுது ஓட்டும் அதே குப்புச்சாமி தான். உங்கள் குடும்பம் இன்றைக்கு கிளவுட் நைன், ரெட் ஜெயிண்ட் என்று அழகான ஆங்கிலத்தில் பெயர் வைத்திருப்பதை கண்டு புளகாங்கிதமடைகிறேன் என்பதையும் தலீவருக்கு சொல்லி இந்த கடுதாசியை முடிக்கிறேன்.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக