புதன், 1 செப்டம்பர், 2010
உலகத்திடமும், உலகில் வாழும் எம் உறவுகளிடமும் துன்பங்களை பகிர்ந்துகொள்ள விரும்பும் மலேசியாவில் வாடும் 75 ஈழ ஏதிலிகள்:
மலேசியாவிலே 110 நாட்கள் சிறையில் வாடிய எங்களை கருணையின் அடிப்படையில் விடுதலை செய்த மலேசிய அரசுக்கும், அதன் பிரதமருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றோம். அத்துடன், எமது அவலநிலையை உலகுக்கு கூறும் ஊடகங்களுக்கும் நன்றி கூறிக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.
மேலும் எம் விடுதலையை விரைவுபடுத்துவதற்காக மாற்றுச் செயலணித் தலைவர் திரு.கலைவாணர் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட தமிழன் தன்மானப் பாசறை, தமிழன் உதவும் கரங்கள், எமக்காக 200000 கையெழுத்து பிரதிகளை சேகரிக்க உதவி செய்த சகல உறவுகளுக்கும், தங்களின் கையெழுத்துக்களை பதிவு செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும், எமது அவலநிலையை உலகுக்கு கூறும் ஊடகங்களுக்கும் நன்றி கூறிக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.
முள்ளிவாய்காலில் பேரவலத்தை சந்தித்துவிட்டு அதன் பின்வந்த பேரபாயங்களையும், ஆட்கடத்தல்களையும் தாண்டி நாம் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை இலங்கையில் இல்லை என்பதனால் எம் சுதந்திரவாழ்வுக்காக மட்டுமே 18.04.2010 அன்று ஆழ்கடலிலே திசை தெரியாதவர்களாக எமக்கு அடைக்கலம் கொடுக்கு நாடுகளை நோக்கி பயணத்தினை ஆரம்பித்தோம். துன்பத்தின் மேல் துன்பங்கள் எங்களையே வந்து சேர்ந்த வண்ணமாக 23.04.2010 அன்று எமக்குப் பெரும் ஏமாற்றம் காத்துநின்றது. இடைநடுவில் எங்களின் படகு பழுதடைந்துபோக அன்று வீசிய காற்றிலே அடித்துக் செல்லப்பட்ட நாங்கள் மலேசிய கடல் எல்லைக்குள் புகநேர்ந்தது.
படகில் இருந்து வெளியேறமாட்டோம், எங்களை 3ம் தரப்பு நாடு ஒன்று தலையிட்டு ஏற்றுக்கொண்டால் இறங்குகின்றோம் அல்லது இக்கடலிலே சாகின்றோம் என்ற கோரிக்கையை முன்வைத்தோம். மலேசியாவில் உள்ள UNHCR அதிகாரிகள் எம்மைப் பார்வையிட்டு இங்கே 3000 அதிகமான இலங்கை தமிழ் ஏதிலிகள் உள்ளார்கள். நாங்கள் உங்களை ஏதிலிகளாக பதிவு செய்கின்றோம் என்று நம்பிக்கை ஊட்டினார்கள், ஆனால்
இங்கு பதிவு செய்தவர்கள் UNHCR அட்டையை வைத்துக்கொண்டு வேலை எதுவும் செய்யமுடியாது. அதையும் மீறி வேலை செய்தால் மலேசிய பொலிசார் கைதுசெய்து சிறையில் அடைப்பார்கள். தங்குமிடம், உணவு, கல்வி போன்ற எந்த ஒரு அடிப்படை வசதிகளும் எங்களால் செய்து தரமுடியாது. எம்மால் உங்களை எந்த நாட்டிற்கும் அனுப்ப முடியாது. என தங்களின் பதிவின் கீழ் மலேசியாவில் உள்ள ஈழ ஏதிலிகளின் நிலையை எமக்கு எண்பிக்க அவர்கள் மறக்கவில்லை.
இந்த நிலையில் உங்களிடம் நாங்கள் கேட்பது என்னவென்றால், இப்படியான நிலையில் எவ்வாறு வாழ்வது தொழில் வாய்ப்பு இல்லையென்றால் தங்குமிடம் உணவு போன்ற அடிப்படை வசதிகளை எப்படி பூர்த்தி செய்வது. மலேசிய சட்டத்திற்கு மீறலாக வேலை வாய்ப்புக்களை தேடிக்கொண்டால் மலேசியா சட்டத்தை மீறுகின்றோம் என்று சிறைத் தண்டனை வேலை செய்யும் போது பலவிதமான பயவுணர்வுடன் வேலை செய்யவேண்டும். சுட்டத்திற்கு புறம்பாக நடக்கின்றோம் என்ற குற்றவுணர்வு
இந்த நிலையில் நாங்கள் என்ன செய்வது, இதற்கும் முன்னுள்ள 3000 க்கும் மேற்பட்ட ஈழ ஏதிலிகள் என்ன செய்கிறார்கள். அவர்கள் எல்லாம் மலேசியாவில் எப்படி வாழ்கிறார்கள் என்ற பலவிதமான கேள்விகள் மனதிலே தோன்ற நாங்கள் மலேசியாவுக்குள் வரவில்லை என்று மறுத்துவிட்டோம். எங்களின் கோரிக்கையும், போராட்டமும் தொடர்ந்ததினால் 25.04.2010 மலேசிய கடற்படை பொலிசார் எம் அனைவரின் உடல்மீதும் மின்சாரம் பாய்ச்சி கைது செய்துகொண்டது. கடலிலே எங்களின் உயிர்களைக் காத்த மலேசிய கடற்படைப் போலிசார்; எங்களின் நிலமை தெரிந்தும் எம்மை சிறையில் இட்டது எமக்கு பெரும் ஏமாற்றத்தையும், அச்சத்தையும் கொடுத்தது.
மலேசியாவின் KLIA தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்ட போது பலகட்ட விசாரணைகளின் பின்னர் நாங்கள் எதிர்பாராத விதமாகத்தான் மலேசியாவுக்குள் நுழைந்தோம் என்பதை மலேசிய அரசு ஏற்றுக்கொண்டது. ஆனால், நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே தற்காலிகமாக வாழலாம் எனவும் கூறியது. எங்களின் கனவுகள், ஏக்கங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டவர்களாக சிறையில் ஒருமாதம் கழிந்த நிலையில் நாங்கள் சாகும் வரையான உண்ணாவிரதம் ஒன்றினை ஆரம்பித்தோம். அதில்,
மனிதாபிமானத்தை நேசிக்கும் மலேசியா அரசாங்கம் கருணையின் அடிப்படையில் 75 ஈழத்தமிழ் ஏதிலிகளாகிய எங்களை விடுதலை செய்துஏதிலிகளை ஏற்றுக்கொள்ளும் சர்வதேச நாடுகளிடம் எம்மை ஒப்படைக்க முன்வருவதுடன் இதனை வெளியுலகிற்கு தெரியப்படுத்தவேண்டும்.
சர்வதேச தொண்டு நிறுவனங்கள் உட்பட மனித உரிமை ஆர்வலர்கள் எம்மை சந்திக்க ஆவனசெய்யப்படவேண்டும். 30 வருட காலமாக சொந்த மண்ணிலே துன்பங்களை மட்டுமே அனுபவித்து ஏதிலிகளாக வாழ்ந்து மலேசியத் தடுப்பு முகாமில் வாடும் 75 ஈழத்தமிழ் ஏதிலிகளாகிய எம்மை மனித நேயத்தை நேசிக்கும் சர்வதேச நாடுகள் பொறுப்பேற்க முன்வரவேண்டும். மலேசியா அரசாங்கம் எங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் எமது சொந்த நாட்டுக்கு திரும்பி அனுப்பக் கூடாது.
இவ்வாறான கோரிக்கையை முன்வைத்து நாங்கள் ஆரம்பித்த உண்ணவிரதத்திற்கு மலேசியாவில் உள்ள UNHCR அமைப்பின் பிரதிநிதிகள் இக்கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாது என மறுத்துவிட்டார்கள். 8 நாட்களாக தொடர்ந்த உண்ணாவிரதத்தினால் பெரும் உயிர் ஆபத்துக்கள் ஏற்படும் நிலையில் திரு.கலைவாணர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும், மலேசிய அரசையும், மலேசிய தமிழ் தலைவர்களையும், உலகத் தமிழ் தலைவர்களையும் நம்பி எம் உண்ணாவிரதத்தினை முடிவுக்கு கொண்டுவந்தோம். குறிப்பாக, உலகத் தமிழ் மக்களாகிய நீங்கள் எமக்கு ஆதரவுக் கரம் நீட்டுவீர்கள், எமக்காக குரல் கொடுப்பீர்கள் என பெரிதும் நம்பியிருந்தோம். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக துன்பத்தை மட்டும் சந்தித்த நாங்கள் மலேசிய சிறையிலும் 110 நாட்கள் கழிக்கும் போது எமக்காக குரல் கொடுக்க உலகிலே பல தமிழ் தலைவர்கள் மார்புதட்டி நிற்கிறார்கள் அவர்கள் எங்களை கரைசேர்ப்பார்கள் என பெரிதும் நம்பியிருந்தோம். 110 வது நாள் 12.08.2010 அன்று எங்கள் 75 உறவுகளில் 63 பேரை மட்டும் UNHCR சிறையில் இருந்து வெளியேற்றி எமக்கான ஏதிலியெனும் ஆவணத்தினை கையளித்துவிட்டு ஏதிலிகளாக காலில் செருப்புக்கூட இல்லாதவர்களாக சுடும் தார் வீதியில் குழந்தைகள், பெண்களுடன் இறக்கிவிடப்பட்டோம். இந்நிலையில் ஏதிலிகளாய் நின்ற எங்களுக்கு திரு.கலைவாணர் அவர்களின் மாற்றுச் செயலணி அடைக்கலம் கொடுத்தது. எங்களுக்கான அடிப்படை தேவைகளை இன்று வரை தங்களின் சக்திக்கு மேலாகவும் செய்து வருகின்றார்கள்;. எங்களுடன் கைது செய்யப்பட்ட 12 உறவுகள் இன்னும் விடுதலை செய்யப்படாமல் சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் விடுதலை தாமதப்படுவதற்கான காரணங்களை இதுவரை UNHCR உட்பட எவரும் எமக்குத் தெரியப்படுத்தவில்லை.
கடந்த பல வருடங்களாக இலங்கைத் தமிழ் ஏதிலிகள் UNHCR பதிவுடன் பல இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆடிப்படை வசதிகள் எதுமற்ற நிலையில் வாடும் இவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்திக் கொடுக்க எந்த ஒரு மலேசிய தமிழ் தலைவர்கள் என்றாலும் சரி, ஈழத்தமிழர்களை புலம்பெயர்நாடுகளில் பிரதிநிதித்துவப்படுத்தும் பல தமிழ் அமைப்புக்களும் சரி முன்வந்ததாக தெரியவில்லை. முலெசியா அரசாங்கத்திடம் நாம் சென்று எமது பிரச்சனைகளுக்கு தீர்வு கேட்க முடியாது. ஆவர்கள் எமக்கு தங்கள் நாட்டில் தற்காலிகமான பாதுகாப்பினை ஏற்படுத்தித் தந்துள்ளமைக்கு நாங்கள் கடமைப்பட்டவர்களாக இருக்கின்றோம். ஏங்களுக்கான நிரந்திர சுதந்திர வாழ்வினை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு புலம்பெயர் ஈழத் தமிழர்களும் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளும், தலைவர்களுமே முன்வரவேண்டும்.
ஈழத்தமிழர்கள் என்னும் பெயரினை பாவித்து பெயரையும், புகழையும், பணத்தையும் சம்பதித்தால் போதாது ஈழத்திலே இன்னல்களை அனுபவித்து இனி இழப்பதற்கு உயிரைத் தவிர வேறு ஏதமற்றவர்களாக இருக்கும் எங்களைப் போன்றவர்களின் வாழ்வில் ஒரு திருப்பத்தினை ஏற்படுத்துவது உங்கள் போன்றவர்களின் தலையான கடமையாகும். கப்பல் மூலமும் வேறு வழிகள் ஊடாகவும் ஐரோப்பாவிலும், அவுஸ்ரேலியாவிலும், கனடாவிலும் தஞ்சமடைபவர்களை மட்டும் ஈழத்தமிழ் ஏதிலிகளாகப் பார்க்கிறீர்கள் ஆனால், எம் மண்ணில் நடந்த பேரவலத்தின் மிச்சங்களாக அங்கிருந்து நேரடியாக வெளியேறிய எங்களுக்கு கைகொடுப்பதில் தயக்கம் காட்டுவது மிகவும் வேதனை அளிக்கிறது. இதுபொன்று மலேசியாவில் உள்ள தமிழ் தலைவர்களும், எமக்கு உதவிசெய்வதாகவும், ஈழத் தமிழர்களாகிய எம்மை பாதுகாக்கின்றோம் எனவும் பத்திரிகையில் செய்திகளாக கூறுகிறார்களே தவிர திரு.கலைவாணரைப் போன்று இங்கு எமக்கு யாரும் உதவி செய்ய முன்வந்ததாக இல்லை. குறிப்பாக இங்குள்ள சில தமிழ் தலைவர்களை நாம் நேரடியாக தொடர்புகொண்டு எம் துன்பங்களை பகிர்ந்து உதவி கேட்டபோது அவர்கள் எங்களை புரிந்துகொள்ள காலம் தாமதிப்பது வேதனையளிக்கிறது. இவ்வாறான நிலை இங்கு தொடருமாக இருந்தால் இந்தியாவில் ஏதிலிகளாக வாழும் 200000 ஈழத்தமிழ் ஏதிலிகள் போல் எந்த ஒரு உரிமையுமற்று வாழும் ஈழத் தமிழர்கள் போல். மலேசியாவிலும் ஈழத்தமிழ் ஏதிலிகளின் தொகை அதிகரிக்குமே தவிர எந்த ஒரு தீர்வும் இருக்காது என்பது திண்ணம்.
இதனை மாற்றியமைக்க மலேசிய தமிழ் தலைவர்களும், ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகளும் ஒரே குழுவாக ஒரு குடையின் கீழ் அணிதிரள்வதை தவிர வேறு வழியில்லை. உங்களின் சுயநலங்களுக்காகவும், அரசியல் செல்வாக்குகளுக்காவும் பாவப்பட்ட, துன்பப்பட்ட ஈழத்தமிழர்களை பாவிக்காதீர்கள். இவர்களின் புனிதப்போரை, தியாகங்கள் நிறைந்த உன்னத போரினை விலை பேசாதீர்கள். நீங்களும் ஒன்று திரளுங்கள் எமக்காக விடிவுக்க உலகநாடுகளிடம் குரல் கொடுங்கள். நாங்கள் போராட்டவாதிகள் அல்ல மாறாக போரினால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் என்பதை இக்கணம் நினைவுபடுத்துகிறோம். எமக்காக குரல் கொடுங்கள் என்று கேட்டுநிற்கின்றோம்.
"துன்பநேரத்தில் கைகொடுப்பவன் தான் உண்மையான தலைவன்" இதற்கமைய எம் துயரத்தில் பாராமுகமாய் இருக்காதீர்கள். மனிதநேயத்தை நேசிக்கும் உலக நாடுகள் எமது துன்பத்ததை உணர்ந்து கொள்ள பல தாமதங்கள் ஏற்படலாம். அவர்களின் முன்நிலையில் உங்களால் தான் எங்கள் துன்ப நிலையை விபரிக்க முடியும். நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் எம் வாழ்வு வீணடிக்கப்படுகின்றது கல்வி கற்றவேண்டிய எம் குழந்தைகளின் பிள்ளைப் பருவமும் மளுங்கடிக்கப்படுகின்றது. பெண்களின் வாழ்வு வீணாக்கப்படுகின்றது, முதியவர்கள் நலிவுற்றுச் செல்கிறார்கள், இளையோரின் இளமைக்காலங்கள் பாழடிக்கப்பட்டு அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகின்றது. இதற்கான பதிலை நாம் யாரிடம் போய் கேட்பது. இலங்கையிலே ஈழத்தமிழன் வாழமுடியாது என்றால் நாம் எங்குதான் சென்று வாழ்வது. ஈழத்தமிழராகிய நாம் வாழத்தகுதியற்றவர்கள் என உலகு வெளிப்படையாக அறிவிக்கும் என்றால் வாழ்வை துன்பகரமாய் வாழ்வதை விட சாவை சந்தோசமாக சந்திப்பது மேல் என தோன்றுகிறது. மிருக வதைக்கொல்லம் குரல் கொடுக்கும் மனிதர்கள் இங்கு நாம் சீரளிந்து சின்னாபின்னமாய் போவதை வேடிக்கை பார்ந்து நிற்பதா?
ஈழத்தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசே உங்களிடமும் கேட்கின்றோம் எங்களுக்கான பதில்தான் என்ன? ஏப்போது உங்களின் கரங்கள் எங்களை அணைத்துக்கொள்ளும், ஈழத் தமிழர்களாக எங்களின் துயரங்களை எப்போதுதான் துடைந்தெளிக்கும், துன்பத்தின் முடிவாய் நாம் மடிந்த பின்பா? நீங்கள் புலம்பெயர் தமிழர்களுக்கு மட்டுமா? ஈழத்தில் இன்னலுற்று சுதந்திரவாழ்வுக்கு ஏங்கும் எம்மைப் போன்ற ஏதிலியாக பட்டம் சூட்டப்பட்ட உங்கள் உறவுகளுக்கு இல்லையா? மனிதநேயத்தை உலகில் நிலைநாட்டும் சர்வதேசமே நீங்களாவது எங்கள் துன்பத்தை துடைத்து நிரந்திர சுதந்திர வாழ்வுதர முன்வாருங்கள்.
சுதந்திரவாழ்வுக்காய் ஏங்கும், 75 ஈழத்தமிழ் ஏதிலிகள், பினாங்கு, மலேசியா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக