சனி, 4 செப்டம்பர், 2010

உரிமைக்கு போரிட்ட ஒரு இனத்தை அழித்து அவர்களின் வாழ்விற்கு பிச்சை போடுகிறோம் என்பதுதான் இப்போதைய இந்திய பார்வை.

13 வது திருத்தச்சட்ட அமுலாக்கத்தில்  இந்தியா மற்றும் இலங்கை அரசுகள் ஒப்பு கொண்டு  கையெழுத்திட்ட பொழுதும், அதை இலங்கை அரசு இது நாள் வரை அமுலாக்கம் செய்யவில்லை. அதை  உருவாக்கிய இந்திய அரசும் கண்டு கொள்ளவில்லை. இது தமிழர்களை அப்போதைய சூழலில் ஏமாற்ற இந்திய மற்றும் இலங்கை அரசுகளின் கூட்டு சதியாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

13 வது சட்ட அமுலாக்கத்தில் இலங்கை அரசு கிஞ்சித்தும் அக்கறை காட்டததால்தான், விடுதலை புலிகள் மீண்டும் தனி ஈழ கோரிக்கையை கையில் எடுத்து போராட வேண்டிய சூழல் ஏற்பட்டது.  விடுதலை புலிகள் மீண்டும் ஆயுதம்   ஏந்தி போராட முழு காரணம் இந்திய மற்றும் இலங்கை அரசுகள்தான்.

அதற்க்கு பின்னர் புலிகளிற்கும் இலங்கைக்குமான சண்டையில் விடுதலை புலிகள் இலங்கையின் வசம் இருந்த பல இடங்களை கைப்பற்றினர். தனி அரசு கண்டனர்.

13 வது சட்ட அமலாக்கத்தில்  தமிழர்களை ஏமாற்றிய அரசு விடுதலை புலிகளை அழிப்பதிலும்  குறியாக இருந்தது. இந்த கால கட்டத்தில் விடுதலை புலிகள் மட்டுமே தமிழர்களின் உண்மையான பிரதிநிதிகளாய் மாறி இருந்தனர்.  விடுதலை புலிகளை அழிப்பது தமிழர் வாழ்வை சிதைப்பதற்கு  ஒப்பாகும் என்று தெரிந்தே இந்திய அரசும் இலங்கை அரசும்  திட்டமிட்டு நடந்து முடிந்த போருக்கு பல வருடங்கள் ஆலோசனை செய்துள்ளன.

இலங்கையில் கடந்த ஆண்டு ஒரு பெரிய போரை நடத்தி, அதுவும் உலக நாடுகளிற்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாதவாறு  ஒரு போரை நடத்தி அதில் தமிழர்களை ஒரு இலட்சம் பேரை கொன்றும் இந்தியாவும் இலங்கையும் தமது வக்கிர புத்தியை காட்டியுள்ளது.

இப்போது, தீவிரவாதிகள் என்று சொல்லப்பட்ட விடுதலை புலிகள் இல்லாத இந்த  கால கட்டத்தில், இந்தியா முன்பு சொன்ன 13  வது திருத்த சட்டத்தை திருத்தி அமலாக்குவதில் என்ன  தடை இருக்க போகிறது, இந்தியா இலங்கையின் விடயத்தில் தலையிடுவதென்றால் அதன் முதன் வேலை இந்த 13  வது சட்ட அமலாக்கமாகவே  இருக்க வேண்டும்.

தமிழர் வாழ்வு, அவர்களின்  தேவைக்கு 50,000 வீடுகள் எல்லாம் பின்னர்தான் வரவேண்டும் .

ஆனால் இந்தியாவும் இப்போது இந்த சட்ட  திருத்தத்தை  அமுல் படுத்த எந்த கோரிக்கையும் வைத்ததாக தெரியவில்லை. இது இந்தியா அரசின் தமிழர் எதேச்சார போக்கை காட்டுகிறது.

உரிமைக்கு போரிட்ட ஒரு இனத்தை அழித்து அவர்களின் வாழ்விற்கு பிச்சை போடுகிறோம் என்பதுதான் இப்போதைய இந்திய பார்வை.

தமிழர்கள் கேட்டது உரிமை, அன்றி  பிச்சை அல்ல.  ஆனால் தமிழர்களை சூழ்ச்சி செய்து பிச்சைகாரர்களை விட கேவலமாய்  அவர்களின் வாழ்வை தர இறக்கம் செய்து, கேவலபடுத்தி அவர்களுக்கு இப்போதைய தேவை உரிமை அல்ல பிச்சை என்பதை நிலை நிறுத்த இந்தியா முயற்சிக்கிறது. அதை செய்தும் வருகிறது. அதன் வெளிபாடே இந்தியாவின்  இப்போதைய பேச்சுக்களான ” 50,000  வீடுகள், மின் மாற்றி உலைகள், ஆயிரம் கோடி ரூபாய் சலுகைகள் , தமிழர் நிலங்களில் விவசாய மேம்பாட்டு திட்டங்கள்”., இவை எல்லாம் இந்தியாவின் தமிழர்களுக்கான  பிச்சைகார திட்டங்கள்.

ஆனால் இந்தியாவே முன்னர் சொன்ன 13  சட்ட திருத்தம் என்னவாயிற்று?  அதுதான் இப்போதை கேள்வி . அதை அமுல் படுத்தாத  இலங்கைக்கு ஏன் இந்தியா உதவிகள் செய்ய வேண்டும் ? அப்படி என்ன தமிழர்களின் மீது இந்தியாவிற்கு வெறுப்பு ? அந்த வெறுப்புதானே சீனாவை இந்தியாவிற்கு எதிராய் இலங்கையில் இறக்க நல்ல தோதுவான வேலைகளை செய்துவிட்டது.

13 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை அர்த்தமுள்ள வகையில் அமுல்படுத்துவதன் மூலம் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

சிவாஜி லிங்கம், பிரபாகரனின் சொந்தகாரர் என்று அறியப்பட்டவர் அவரின் நம்பிக்கைக்குரிய அரசியல்வாதியும் கூட. இன்னமும் இவரின் பாதுகாப்பில்தான் பிரபாகரனின் தாயார் இலங்கையில் மருத்துவ சிகிச்சையில்  உள்ளார்.

பிரபாகரனின் மற்றும் தமிழர்களின் தனி ஈழ கோரிக்கை அனைவரும் அறிந்தது.

அவர் கோரியுள்ள இந்த கோரிக்கையினை அர்த்த புஷ்டியுடன் அரசியல் நூகர்கள் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. ஏனென்றால் இவர் தனி ஈழம் ஒன்றே தீர்வு என்ற நிலையில் அரசியல் செய்த விடுதலை புலிகளின் நம்பிக்கைக்குரிய அரசியல்வாதி. அவரின் இந்த கோரிக்கை இந்தியாவிற்க்கான அழுத்தத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிரூபமா ராவுடன் தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு நடத்திய சந்திப்பின் போதும்  இது வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் 13 வது சட்ட திருத்த அமுலாக்கத்தை பற்றி அதிகம் பேசி அதை ஒப்பந்தமாக ஆக்கிய  இந்தியா, அதை பற்றி இப்போது  மூச்சு விடகூட மறுக்கிறது.

நன்றி : கண்ணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக