ஞாயிறு, 19 செப்டம்பர், 2010
எங்களுக்கு காணியோ, பூமியோ தேவையில்லை. எமது சொந்தங்களைத் தேடிக் கொடுத்தாலே போதும்.
கற்றுக் கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் அமர்வு நேற்று கிளிநொச்சி உதவி அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த அமர்வில் சாட்சியமளிக்கவென 200க்கும் மேற்பட்ட பெண்கள் சமூமளித்திருந்தனர்.
மேற்படி அமர்வில் பெரும்பாலான பெண்கள் காணாமல் போயுள்ள தமது உறவுகளைத் தேடித் தருமாறு மன்றாட்டமாகக் கேட்டுக் கொண்டனர். எங்களுக்கு காணியோ, பூமியோ தேவையில்லை. எமது சொந்தங்களைத் தேடிக் கொடுத்தாலே போதும் என்பதே அனைவரதும் கோரிக்கையாக இருந்தது.
இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக ஆணைக்குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட் டது.
பெருந்தொகையில் மக்கள் சாட்சியமளிக்க காத்திருந்தமையால் அவர்களது சாட்சியத்தை எழுத்து மூலம் ஆணைக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.
இந்த அமர்வு குறித்து வடக்கு பெண்கள் அமைப்பைச் சேர்ந்த பேச்சாளர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், வன்னியில் மீள்குடியேற்றப்பட்ட மக்களில் பெண்களே கூடுதலாக பாதிக்கப்பட்டவர்களாகவும் சிரமங்களை அனுபவிப்பவர்களாகவும் உள்ளனர்.
எனவே தான் நேற்று நடைபெற்ற அமர்வில் பெருமளவில் பெண்கள் கலந்து கொண்டனர்.
ஏற்கனவே விண்ணப்பித்திருந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு சாட்சியமளிக்க அவகாசம் வழங்கப்பட்டது. தமிழில் கேள்விகள் கேட்கப்பட்டன. மொழி பெயர்ப்பாளர் ஒருவர் அமர்த்தப்பட்டிருந்தார்.
சாட்சியமளித்தவர்களை இனந்தெரியாதவர்கள் கையடக்கத் தொலைபேசியில் படம் பிடித்துக் கொண்டதுடன் அவர்கள் சாட்சியத்தை பதிவும் செய்து கொண்டனர். ஆனாலும் மக்கள் துணிந்து கருத்துத் தெரிவித்ததாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக