திங்கள், 20 செப்டம்பர், 2010

கரடியனாறு வெடிவிபத்து தொடர்பான விரிவான செய்தி

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் “டைனமைற்%27″ வெடிமருந்துக் கொள்கலன்கள் வெடித்துச் சிதறியதில் மூன்று வெளிநாட்டவர்களும் பெருமளவு பொலிஸாரும் பொதுமக்களுமாக 62 பேர் உடல் சிதறிப் பலியானதுடன் 74 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். அடுத்தடுத்து மூன்று “டைனமைற்%27″ கொள்கலன்கள் வெடித்துச் சிதறியதில் கரடியனாறு பொலிஸ் நிலையமும் முற்றாகத் தரைமட்டமானது.

மட்டக்களப்பு படுவான்கரை பகுதி, மட்டு.நகரிலிருந்து சுமார் 30 கிலோமீற்றர் தூரத்தில் கரடியனாறு பதுளை வீதிச்சந்தியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னைய மக்கள் தொடர்பாடல் அலுவலகத்திலேயே கரடியனாறு பொலிஸ் நிலையமுள்ளது.

இந்தக் கட்டிடம் நன்கு புனரமைக்கப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கேற்ப மிகவும் வசதி வாய்ப்புகளுடன் அமைக்கப்பட்டிருந்தது. இந்தப் பொலிஸ் நிலையத்தின் வளாகத்துள்ளேயே நேற்று முற்பகல் 11.30 மணியளவில் இந்தப் பாரிய அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது வீதிப் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காகப் படுவான்கரையில் குடும்பிமலை மற்றும் அதனையண்டிய பகுதிகளிலுள்ள பாரிய குன்றுகள் “டைனமைற்ம%27″ மூலம் வெடி வைத்து தர்க்கப்பட்டு கற்கள் உடைக்கப்பட்டு அவை வீதிப் புனரமைப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது பதுளை செங்கலடி வீதியின் (ஏ5) புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை சீனாவின் “கோவேக்%27″ என்ற நிறுவனமே மேற்கொண்டு வருகிறது. இந்தப் பெருந்தெருக்கள் வேலைக்கான கல்லுடைத்தல் மற்றும் பாறையகழ்தல் வேலைகளுக்குப் பயன்படும் டைனமைற்றுகள் மற்றும் அந்த வேலைகளுக்கான பொருட்கள் மூன்று கொள்கலன்களில் நிரப்பப்பட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக கரடியனாறு பொலிஸ் நிலைய வளாகத்தினுள்ளேயே நிறுத்தப்பட்டுள்ளன.

தேவைக்கேற்ப இந்தக் கொள்கலனிலிருந்து “டைனமைற்%27″கள் எடுத்துச் செல்லப்பட்டுப் பயன்படுத்தப்படும். நேற்றும் இதுபோன்று கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்குத் தமது நிறுவன ஜீப்பில் வந்தவர்கள் தேவையான “டைனமைற்%27″றை எடுத்து ஜீப்பினுள் ஏற்றிக்கொண்டு புறப்பட்டபோதே இந்த அனர்த்தம் நிகழ்த்துள்ளது.

இந்தச் சம்பவம் நடைபெற்றபோது பொலிஸ் நிலையத்தில் பெருமளவு பொலிஸாரும் முறைப்பாடுகள் மற்றும் தேவைகளை மேற்கொள்வதற்காகவும் அருகிலுள்ள கமநல அலுவலகத்தில் உரமானியங்களை பெறும்பொருட்டும்  15க்கும் மேற்பட்ட பொதுமக்களும் இருந்துள்ளனர். பாரிய சத்தத்துடன் மூன்று கொள்கலன்களும் ஜீப்புகளும் வெடித்துச் சிதறியதால் பொலிஸ் நிலையம் முற்றாக இடிந்து தரைமட்டமானதுடன் அங்கிருந்தவர்களில் பெருமளவானோர் உடல் சிதறிப் பலியானார்கள். ஏனையோர் படுகாயமடைந்தனர். இவர்களில் பலர் உடல் முழுவதும் எரிகாயங்களுக்குள்ளானார்கள்.

இந்த வெடிச் சத்தம் மட்டக்களப்பு நகர்வரை கேட்டுள்ளது. இதனால் கரடியனாறு மற்றும் அதனை அண்டிய பகுதிகள் பெரிதும் அதிர்ந்தன. டைனமைற் வெடித்து பொலிஸ் நிலையம் தரைமட்டமானதையடுத்து அந்தப் பகுதி முழுவதும் பெரும் ஒலிகள் கேட்டதாக அவ்விடத்திற்கு வந்தவர்கள் தெரிவித்தனர்.

சத்தம் கேட்ட திசை நோக்கி படை முகாம்களிலிருந்து விரைந்த படையினரும் பொலிஸாரும் அங்கு வந்த பொதுமக்களுடன் சேர்ந்து துரிதமாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். “டைனமைற்%27″ கொள்கலன் வெடித்துச் சின்னாபின்னமான இடத்தில் பாரிய குழிகாணப்பட்டது. உயிரிழந்தவர்களும் படுகாயமடைந்தவர்களும் கட்டிடத்தின் இடிபாடுகள் மற்றும் சிதைவுகளுக்குள் கிடந்தனர்.

காயமடைந்தவர்களை முடிந்தவரை விரைவாக மீட்டு அருகிலுள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பும் பணியில் படையினரும் பொலிஸாரும் ஈடுபட்டிருந்தனர். சம்பவம் பற்றி அறிந்து மட்டக்களப்பு, செங்கலடி மற்றும் ஆஸ்பத்திரிகளிலிருந்து அந்த இடத்திற்கு அம்புலன்ஸ்கள் விரைந்ததுடன் காயமடைந்தவர்கள், அங்கு வந்த படையினரினதும் பொலிஸாரினதும் வாகனங்களிலும் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பப்பட்டனர்.
பொலிஸ் நிலையக் கட்டிடம் சிதறி மோசமாக இடிந்து தரைமட்டமானதால் காயமடைந்தவர்களையும் உயிரிழந்தவர்களையும் மீட்பதில் பலத்த சிரமமேற்பட்டது. இதனால் புல்டோசர்கள் கொண்டு வரப்பட்டு இடிபாடுகள் அகற்றப்பட்டே சடலங்களையும் காயமடைந்தவர்களையும் அப்புறப்படுத்த முடிந்தது. இதற்கு நீண்டநேரமும் சென்றது.

இந்த அனர்த்தத்தால் பொலிஸ் நிலைய வளாகத்தினுள் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் முற்று முழுதாகச் சேதமடைந்து தலைகீழாகக் கவிழ்ந்து போயிருந்தன. உயிரிழந்தவர்கள் பலரது உடற்பாகங்கள் பொலிஸ் நிலையத்திற்கு வெளியே வயல் வெளிகளில் கிடந்து மீட்கப்பட்டன.
உயிரிழந்தவர்களில் மூவர் வெளிநாட்டவர்கள். இதில் “கோவெக்%27″ நிறுவனத்தின் உதவித் திட்டமிடல் முகாமையாளரான சூ என்பவரும் அந்த நிறுவனத்தின் கல்குவாரியின் பொறுப்பதிகாரியான ஜோ என்பவருமாவர்.
அத்துடன் இந்த நிறுவனத்தில் பணியாற்றும் இரு வாகனச் சாரதிகள் உட்பட வேப்பை வெட்டுவானைச் சேர்ந்த நான்கு பேரும் உயிரிழந்துள்ளனர். மூன்று பொலிஸாரின் சடலங்கள் உட்பட ஆறு பேரின் சடலங்கள் செங்கலடி வைத்தியசாலையிலும் ஒன்பது பேரது சடலங்கள் மட்டக்களப்பு ஆஸ்பத்திரியிலும் வைக்கப்பட்டிருந்தன.

இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த 52 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பின்னர் அவர்களில் மூவர் உயிரிழந்து விட்டதாகவும் ஆஸ்பத்திரியின் பணிப்பாளர் டாக்டர் கே.முருகனாந்தன் தெரிவித்தார். ஆபத்தான நிலையிலிருந்த நால்வர் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஹெலிகொப்டர் மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதாகவும் காயமடைந்தவர்களில் 10 முதல் 15 பேர் பொதுமக்களெனவும் ஏனையோர் பொலிஸாரெனவும் அவர் தெரிவித்தார்.
படுகாயமடைந்தவர்களில் பெரும்பாலானோருக்குப் பலத்த எரிகாயம் ஏற்பட்டுள்ளதாகவும் வேதனையால் அவர்கள் குளறிக்கொண்டிருந்தனர். காயமடைந்தவர்களின் உறவினர்களும் குளறி அழுதபடி நின்றனர்.

இதேநேரம் இந்தச் சம்பவத்தில் காயமடைந்த 22 பொலிஸார் செங்கலடி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் பற்றி அறிந்து உடனடியாக கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு இராணுவ மற்றும் பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் வந்ததுடன் பிரதியமைச்சர் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் உட்பட பலரும் வருகை தந்தனர்.
இந்தச் சம்பவம் கிழக்கு மக்களைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்தச் சம்பவமானது விபத்தே எனவும் சதி முயற்சி எதுவுமில்லை என்றும் படையினரும் பொலிஸாரும் தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்த விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் அந்தக் குழுக்கள் உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்து விசாரணைகளை ஆரம்பித்தன. தடயவியல் நிபுணர்களும் அவ்விடத்திற்கு விரைந்து தங்கள் பணிகளை மேற்கொண்டனர்.

இந்தச் சம்பவத்தையடுத்து அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது. கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோரது சடலங்கள் மிக மோசமாகச் சிதைந்துவிட்டதால் உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதிலும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது இவ்வாறிருக்க சம்பவத்தில் 25 பேர் இறந்திருப்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருப்பதாக அரசாங்கம் நேற்று மாலை அறிவித்திருக்கிறது.

இதற்கிடையில், வெடிப்புச் சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றொரு பொலிஸ் உத்தியோத்தர் நேற்றிரவு 9.30 மணியளவில் மரணமானதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் எம்.முருகானந்தன் தெரிவித்தார். மேலும் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்டுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக