புதன், 22 செப்டம்பர், 2010

கருணாநிதியின் தமிழ் ரத்தம் எங்கே?” பகீர் கேள்வி.

“என் இளமை விடியும் முன்னரே முடியும் என்று யாருக்குத் தெரியும்” வலிமிகுந்த இந்தக் கவிதை வரிகளுக்குச் சொந்தக்காரர் பேரறிவாளன்! ராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு “பேட்டரி” வாங்கிக் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட தூக்கு தண்டனைக் கைதி! 19-வது வயதில் “ஐந்து நிமிட விசாரணை”க்காகக் காவல் துறையால் அழைத்துச் செல்லப்பட்டவர்.

இப்போது 39 வயதில் மரணத்தின் விளிம்பில் ஊசலாடிக்கொண்டு இருக்கிறார். அவர் சிறைக்கு சென்று 20 ஆண்டுகள் முடிந்துவிட்டதை நினைவுபடுத்தும் நிகழ்ச்சி கடந்த வாரம் சென்னையில் நடந்தது. தியாகு தலைமையில் நடந்த இந்த விழாவில் “மரண தண்டனைக்கு எதிரான சமூக நீதிப் போராளிகள்” அனைவரும் ஆஜர். ஆனாலும் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தவர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஜக்மோகன் சிங்!


பத்திரிகையாளரும்இ மனித உரிமை அக்கறையாளருமான ஜக்மோகன் சிங் தமிழர் குறித்தும், தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் புள்ளி விவரங்களோடு பேசிய ஆச்சர்யப் பேச்சுகள் இங்கே அப்படியே…
உலகமே ஊமையாகி நிற்க.. ஈழத்தில் ஒட்டுமொத்தத் தமிழர்களையும் கொன்று குவித்தார்கள்.   இன்னும் சில நாடுகள் நேரடியாகவே இலங்கைக்குப் போர் உதவி செய்தன. கொடுமையிலும் கொடுமையாக,   அத்தனையையும் நாமும் வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இனிமேலாவது, அடுத்தவனின் வேதனைகளை வேடிக்கை பார்ப்பதை விட்டுவிட்டு மனித உரிமைக்காக ஒன்றுசேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.
இன்று தமிழகத்தின் முதல்வராக கருணாநிதி இருக்கிறார். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டபோது, 2007 நவம்பர் 2-ம் நாள் கருணாநிதி தன் கவிதையில்,   இலங்கையிலே கொல்லப்பட்டிருக்கிற அந்த வீரன் ஒரு தமிழன். அங்கே பாய்கிற ரத்தம் என் தமிழர்களின் ரத்தம்” என்று எழுதியிருந்தார். இப்படி ஒரு கவிதை எழுதிய அவரைப் பாராட்டி ஒரு கடிதம் எழுதினேன்.   ஆனால், இன்று என் கவலை எல்லாம் “அந்த தமிழ் ரத்தம் இப்போது அவருக்கு எங்கே போனது?” என்பதுபற்றித்தான்!
இந்த விழாவைத் தலைமையேற்று நடத்தும் தோழர் தியாகு உட்பட மரணக் கொட்டடியில் இருந்த 25 கைதிகளுக்கு 1974-ல் கருணாநிதிதான் தண்டனைக் குறைப்பு வழங்கினார். தமிழக முதலமைச்சரை நான் கேட்டுகொள்கிறேன்…” இனி தமிழ்நாட்டில் எவருக்கும் மரண தண்டனை
அறிவிக்கப்படாது” என்று இப்போதே அறிவிக்க வேண்டும். தமிழ்நாடு சட்டமன்றம் மரண தண்டனைக்கு எதிரான ஒரு தீர்மானத்தை இயற்றி… மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் அனுப்பிவைக்க வேண்டும்!
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை இன்று நாடே போற்றுகிறது. அவர் ஜனாதிபதியாக இருந்தபோது “கருணை தொடர்பான கோப்புகள், பல அரசியல் கைதிகள் தொடர்பான கோப்புகள்” உள்துறை அமைச்சகத்தில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு நகர மறுத்துவிட்டன.
காரணம் தெரியுமா? குடியரசுத் தலைவர் அரசுக்கு எழுதிய ஒரு கடிதத்தில், “மரண தண்டனையை மறு திறனாய்வு செய்யுமாறு” கேட்டுக்கொண்டு இருந்தார். “நான் இந்த மரண தண்டனையை எதிர்க்கிறேன்” என்று அவர் திட்டவட்டமாகச் சொல்லவில்லைதான். ஆனால் மனிதாபிமான அடிப்படையிலேயே அவர் இதுபோல் கேட்டுகொண்டார்.
இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் நூற்றுக்கணக்கானவர்கள் தூக்கு மர நிழலில் துன்புறுகிறார்கள். ஒரு மனிதனை, இன்னொரு மனிதன் கொலை செய்வது எவ்வளவு கொடூரமானதோ.. அதேபோல்தான் அரசு ஒரு தனி மனிதனைத் தூக்கில் போடுவதும் தவறானது, அநீதியானது.
மரண தண்டனை என்பது என்ன? கொலைக்குக் கொலை என்ற பழிக்குப் பழி வாங்கும் காட்டுமிராண்டித்தனம் தானே!.
உலகில் 133 நாடுகள் முரண தண்டனையை ஒழித்துவிட்டன. இந்தியாவைக் காட்டிலும் குற்றங்களின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கிற பிலிப்பைன்ஸ் நாட்டிலும்கூட இந்தக் கொலை தண்டனையை அண்மையில் ஒழித்துவிட்டார்கள்.
ஆனால், “காந்தியம்” பேசும் நாம்தான் இன்னமும் மரண தண்டனையைப் பொத்திப் பாதுகாத்து வருகிறோம்” என்றார் ஜக்மோகன் சிங் உணர்ச்சிப் பிழம்பாக!

த. கதிரவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக