சனி, 11 செப்டம்பர், 2010

ஈழத் தமிழர் வாழ்வில் எமக்கான இன்றைய வாய்ப்பு இதுதான்


ஈழத் தமிழர் வாழ்வில் நடந்தது எதுவோ அதனை எண்ணி தொடர்ந்தும் மனதைக் குழப்பாது அடுத்த கட்டத்திற்கு நகரவேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இன்று இருக்கிறோம். சொந்தங்களை இழந்து, சொத்துக்களைப் பறிகொடுத்து சோகத்தின் உச்சத்தில் அடுத்த வேளைக் கஞ்சிக்கு என்ன செய்வது என அங்கலாய்த்தவாறு ஈழத்தில் எங்கள் உறவுகளின் உயிர்கள் ஊசலாடிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் எங்கள் சொந்தங்களைக் காப்பதற்கு எதனையாவது செய்யவேண்டும் என்ற உறுதி உங்களிடம் இருப்பது எமக்குத் தெரியும்.


இன்று சீனர்கள், சிங்களவர்கள் இந்தியர்கள் என ஈழ மண் பலராலும் கூறுபோடப்படும் கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். இலங்கையின் தமிழர் தாயகப் பகுதிகளில் குறிப்பாக வடக்கில் அரங்கேறிவரும் குறிப்பிட்ட சில சம்பவங்களை புலம்பெயர் தமிழர்களாகிய, குறிப்பாக புலம்பெயர் வாழும் ஈழத்தினைச் சேர்ந்த செல்வந்தர்களிடம் முன்வைக்க விரும்புகிறேன். காரணம், இதற்கான தீர்வு உங்களிடம்தான் இருக்கிறது.

இன்று பல்வேறு நாடுகளும் கொடையாக வழங்கும் நிதிகளைக் கொண்டு பலதரப்பட்ட அபிவிருத்திப் பணிகள் நாட்டினது வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வீதி அபிவிருத்தி, கட்டட நிர்மானம் உள்ளிட்ட உட்கட்டுமான அபிவிருத்திப் பணிகளுக்கான ஒப்பந்தகாரர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அனைவருமே சிங்கவர்கள்தான்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியில் அகலமாக்கப்பட்டு வரும் யாழ்ப்பாணம்-பருத்தித்துறை வீதியாக இருக்கலாம், மாங்குளம் முல்லைத்தீவு வீதியாக இருக்கலாம் இதற்கான ஒப்பந்தகாரர்களாக சிங்கள நிறுவனங்களே இருக்கின்றன. மாங்குளத்தில் தனது வட பிராந்திய அலுவலகத்தினைத் திறந்திருக்கும் ஷஹமாட் நிர்மாணத்தாரர்’ என்ற சிங்களவர்களுக்குச் சொந்தமான நிறுவனமே இந்தப் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வீதி அபிவிருத்தி பணிகளுக்கான ஒப்பந்காரராக உள்ளது.

இதுபோல ஓமந்தை தொடக்கம் காங்கேசன்துறை வரையிலான தொடருந்துப் பாதையினை மீள நிர்மானிப்பதற்கான ஒப்பந்தமும் இந்திய நிறுவனம் ஒன்றிடமே போய்ச் சேர்ந்திருக்கிறது. அச்சுவேலி பொருளாதார வர்த்தக வலயத்தில் தங்களது முதலீடுகளை மேற்கொள்வதற்கும் கொழும்பினைத் தளமாகக் கொண்ட பல நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.

இவை தவிர நாட்டினது வடக்குப் பகுதியில் முதலிடுவதற்கு சிங்கள மற்றும் இந்திய முதலீட்டாளர்கள் முண்டியடிக்கிறார்கள். பெரும்பாலும் சிங்களவர்களாலேயே நிர்வகிக்கப்படுகின்ற ஆடை உற்பத்தி நிறுவனங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தங்களது தொழிற்சாலைகளை அமைத்து வருகின்றன.

சிறிலங்காவின் முன்னணி ஆடை உற்பத்தி நிறுவனமான சிங்களவர்களுக்குச் சொந்தமான மாஸ் இன்ரிமேற்ஸ் என்ற நிறுவனம் வவுனியா மாவட்டத்திலுள்ள ஓமந்தைப் பகுதியில் 3 மில்லியன் டொலர் செலவில் ஆடை உற்பத்தித் தொழிற்சாலை ஒன்றை நிர்மானித்து வருகிறது. இந்தத் தொழிற்சாலையானது 1500 பேருக்கு வேலை வாய்ப்பினை வழங்குமாம். போரினால் பாதிக்கப்பட்ட பகுதி இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்கும் வகையில் செயற்படும் இதுபோன்ற நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளை இப்பகுதிகளில் நிறுவுவதற்கு யூ.எஸ் எயிட் நிறுவனம் உதவிகளை வழங்குவது இங்கு குறிப்பிடத்தக்கது.

யாழ்பாணத்தின் கேரதீவு இறங்குதுறையினையும் பூநகரியின் சங்குப்பிட்டி இறங்குதுறையினையும் இணைக்கும் சுமார் 450 மீற்றர் நீளமான பாலத்தினை நிர்மானிக்கும் பணி தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிர்மானப் பணியினையும் கொழும்பினைச் சேர்ந்த சிங்களவருக்குச் சொந்தமான முன்னணிக் கட்டுமான நிறுவனம் ஒன்றுதான் முன்னெடுக்கிறது.

இவை தவிர, யாழ்ப்பாணம், முறிகண்டி, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளுக்கு உல்லாசப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் வகையில் நட்சத்திர விடுதிகளை அமைப்பதற்கான முன்முனைப்புக்கள் முழு வேகத்துடன் இடம்பெற்று வருகின்றன. முறிகண்டிப் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் விடுதி அதன் நிறைவுக்கட்டத்தினை அடைந்திருக்கிறது. இந்தத் திட்டங்கள் அனைத்தையும் முன்னெடுப்பவர்கள் வேறு யாருமல்ல, செல்வந்தச் சிங்கள நிறுவனங்களே.

இதுபோன்ற முனைப்புக்கள் அனைத்தும் தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்களவர்களின் செல்வாக்கு அதிகரிப்பதற்கும் தமிழர்களது வழங்களை இவர்கள் சுரண்டுவதற்கும் இந்தப் பிராந்தியத்தினது குடிப்பரம்பலில் மாற்றம் ஏற்படுவதற்குமே வழிசெய்யும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

தமிழர் தாயகப் பகுதிகளில் இதுபோன்ற முதலீடுகளை மேற்கொள்வதற்கு ஈழத் தமிழரை விட எவருக்கும் அதிக உரிமை கிடையாது. இதுவொன்றும் இயலாத காரியமன்று.

இது தவிர, எங்களது பிரதேசத்தில் இடம்பெறும் அபிவிருத்திப் பணிகள் தரமானதாகவும் சிறப்பாகவும் அமையவேண்டுமெனில் தமிழர்களது கட்டுமான நிறுவனங்கள் இந்தப் பணிகளைப் பொறுப்பெடுக்கவேண்டும். இதுபோன்ற பாரிய கட்டுமான நடவடிக்கைகளையும் முதலீடுகளையும் மேற்கொள்ளக்கூடிய தமிழ் நிறுவனங்கள் இன்று இங்கில்லை. ஐ.எஸ்.ஓ 9001 என்ற சர்வதேச தரச் சான்றிதழைப் பெற்ற தமிழருக்குச் சொந்தமான யூரோவிலி பொறியியல் மற்றும் கட்டுமானத் தனியார் நிறுவனம் என்ற ஒரேயொரு கட்டுமான நிறுவனம்தான் யாழ்ப்பாணத்திலுள்ளது.

அமைதிக் காலத்தின் போது கிளிநொச்சி மருத்துவமனை பல மில்லியன் டொலர் செலவில் புதிதாக நிர்மானிக்கப்பட்டமை அனைவரும் அறிந்ததே. இந்த மருத்துவமனையின் நிர்மானத்திற்கான ஒப்பந்தத்தினை ஒரு தமிழருக்குச் சொந்தமான, அதுவும் புலம்பெயர் நாடு ஒன்றைத் தளமாகக் கொண்ட கட்டுமான நிறுவனம் ஒன்று கையில் எடுத்தமையினால்தான் கிளிநொச்சி மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் அனைவரும் புகழும் வகையில் சிறப்பாக அமைந்திருந்தன. அமெரிக்காவினைத் தளமாகக் கொண்ட பிரைம் எஞ்சினியறிங் என்ற நிறுவனமே இதன் கட்டுமானப் பணியினை மேற்கொண்டிருந்தது.

இதுபோல புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழர்கள் தமிழர் தாயகப் பகுதிகளில் தங்களது முதலீடுகளை மேற்கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயம். பல்வேறுபட்ட கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்தகார நிறுவனங்களை அமைக்கலாம் அல்லது அதிகரிக்கும் உல்லாசப் பயணிகளின் வருகையினைக் கருத்திற்கொண்டு தமிழர் தாயகப் பகுதிகளில் நட்சத்திர விடுதிகளை அமைக்கலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் மருத்துவர்கள் அனைவரும் இணைந்து யாழ்ப்பாணத்தில் அனைத்து வசதிகளையும் கொண்ட தனியார் மருத்துவமனை ஒன்றை அமைக்காலம். இதுபோன்ற மருத்துவமனை ஒன்றிற்கான தேவை குடாநாட்டில் அதிகமுள்ளது.

மீன் பதனிடும் தொழிற்சாலை ஒன்றை முல்லைத்தீவிலோ அன்றி யாழ்ப்பாணத்திலோ அமைக்கலாம். இதற்கான வளமும் திறனும் புலம்பெயர் தமிழர்களாகிய உங்களிடம்தான் இருக்கிறது. வன்னியிலுள்ள வசதிகளைப் பயன்படுத்தி பாரிய மரத் தளபாடத் தொழிற்சாலை ஒன்றை அங்கு நிறுவுவதற்கான வாய்ப்பும் அதிகமுள்ளது.

புலம்பெயர்வாழ் தமிழ் கல்விமான்கள் ஒன்றிணைந்து தமிழர் தாயகப் பகுதிகளில் மாணவர்களுக்கான உயர் கல்வி வசதிகளையும் தொழிற்கல்வி வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கலாம். பெரும்பாலும் கொழும்பில் மட்டுமே இத்தகைய தனியார் கல்வி நிறுவனங்கள் நிலைகொண்டுள்ளன. இத்தகைய நிறுவனங்களை அமைப்பது தமிழ் மாணவர்களுக்கு அரிய வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுக்கும். வடக்குக் கிழக்கில் பெருமளவு மாணவர்கள் தமது உயர் கல்வியைத் தொடர்வதற்கும் பொருத்தமான தொழிற்கல்வியைப் பெற்று வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கும் வழிவகையின்றித் தவிக்கின்றனர்.

தற்போது கிடைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தினை நாம் சரியாகப் பற்றிப்பிடிப்பதற்குத் தவறுவோமானால் சிங்களவர்களும் சீனர்கள் இந்தியர்களும் எங்களது வீதிகளில் உலா வருவதை எவரும் தடுக்கமுடியாது. காலங்கடந்தபின் ஐயோ கிடைத்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்துவதற்குத் தவறிவிட்டோமே என பின்னர் அழுவதிற் பயனில்லை.

இவ்வாறு தமிழர் தாயகப் பகுதிகளில் முதலீடுகளை மேற்கொள்வது சிங்கள ஆட்சியாளர்களது பிரச்சாரத்திற்கு வழிசெய்துவிடும் என்று எண்ணிவிடவேண்டாம். எங்களது மண்ணில் முதலீடுகளை மேற்கொள்ளவேண்டியது நாங்கள்தான். இந்த உரிமையினை நாம் எதற்காகவும் யாரிடமும் விட்டுக்கொடுக்க முடியாது.

இதுபோன்ற பணிகள் சவால்கள் நிறைந்ததாகத்தான் இருக்கும். இதுவுமொரு போராட்டம்தான். சிங்கள, சீன, இந்திய முதலீட்டாளர்களை எதிர்த்தும் நாம் எமது மண்ணில் போராடவேண்டும். தமிழர்களது தனித்துவம் நிலைபெறவேண்டுமெனில் நாம் எத்துணை இடர் வரினும், எப்படிப்பட்ட சவால்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்தாலும் அனைத்தையும் வெற்றியுடன் முறியடித்து முன்னேறவேண்டும்.

தமிழர்களுக்குத் தனிநாடு கோரி முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டாம் இடைநின்று போயிருக்கலாம். அதுதந்த தோல்வியினால் நாங்கள் துவண்டுவிடக்கூடாது. நாங்கள் தொடர்ந்து போராடவேண்டும். எங்களது வளத்தையும் செல்வத்தையும் சுரண்டுவதற்காக எங்களூரில் கடை விரிக்கும் மாற்றானை எதிர்த்து நின்று தமிழர்களாகிய நாங்களும் எங்களூரில் முதலிடவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக