இலங்கை அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருப்ப தாக ஐக்கிய நாடுகளின் சட்டவிரோதப் படுகொலைகள் தொடர்பான விசேட பிரதிநிதி பிலிப்ஸ் அல்ஸ்டன் தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணை இலங்கையில் நடத்தப்படக் கூடாது எனவும் பாலஸ்தீன நிவாரணக் கப்பல்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ள உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மை குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.
குறித்த ஆணைக்குழுவுக்கான உறுப்பினர் நியமனம் தொடர்பிலும் திருப்தி கொள்ள முடியாது. பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபி மான அடிப்படையில் நிவாரணங்களை ஏற்றிச் சென்ற கப்பல் மீது இஸ்ரேலிய இராணுவத்தினர் நடத்திய தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச ரீதியிலான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என இலங்கை வலியுறுத்தியுள்ளது.
இஸ்ரேலின் நடவடிக்கைகள் குறித்து சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளுக்கான இலங்கைப் பிரதிநிதி சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த விசாரணை ஆணைக்குழுவின் தலைமைப் பொறுப்பையும் இலங்கைப் பிரதிநிதி வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மற்றும் இஸ்ரேல் விவகாரங்கள் சர்வதேச ரீதியான விசாரணைக்கு உட் படுத்தப்பட வேண்டும் என்பதே தமது உறுதியான நிலைப்பாடு என அல்ஸ்டன் தெரிவித்துள்ளார்.
சனல்-4 ஊடகத்தினால் வெளியிடப்பட்ட தகவல்கள் உண்மையானவை என பிலிப்ஸ் அல்ஸ்டன் உறுதிப்படுத்தியிருந்தமை குறிப் பிடத்தக்கது.உண்மையைக் கண்டறியும் ஆணைக் குழு யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் உருவாக்கப்படவில்லை.
பயங்கரவாதத்திற்கான மூல காரணங்களைக் கண்டறியும் நோக்கிலேயே குறித்த ஆணைக்குழு நிறுவப்பட்டுள்ளது. இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் இணைய தளத்தில் குறித்த ஆணைக்குழுவின் பிரதான நோக்கங்கள் பட்டியல்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த இணையதளத்தில் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலோ அல்லது யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலோ ஒரு வார்த்தையேனும் உள்ளடக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்கால நலன்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பதன் மூலம் கடந்த காலக் குற்றச் செயல்கள் உதாசீனம் செய்யப்படும் என்பதாக அர்த்தப்படுகிறது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக் குழு சர்வதேச நியமங்களுக்கு அமைவாக செயற்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றனவா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக