செவ்வாய், 5 அக்டோபர், 2010

இந்திய கடலோரக் காவற் படை கூட்டு தொடர்பாடல் ரோந்து நடவடிக்கை.

பாக்கு நீரிணையிலும் மன்னார் குடாவிலும் இந்திய கடலோரக் காவற் படை கூட்டு தொடர்பாடல் ரோந்து நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. சென்னையில் சில மாதங்களுக்கு முன்னர் இலங்கைக் கடற்படையுடன் கூட்டு ரோந்தை மேற்கொள்வதற்கான சாத்தியம் குறித்து உயர் மட்ட கலந்தாலோசனை இடம்பெற்றிருந்தது.

இந்தச் சந்திப்பை தொடர்ந்து இலங்கைக் கடற்படையுடன் கூட்டு தொடர்பாடல் ரோந்து நடவடிக்கைகளை இந்திய கடலோரக் காவற் படை ஆரம்பித்திருக்கிறது. நடுக்கடலில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகள், வெளியார் ஊடுருவல்கள், மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பான தகவல்களை இலங்கை கடற்படை பகிர்ந்துகொள்ளும்.
 பிராந்தியத்தில் அமைதியை பேணுவதற்காக இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக எக்ஸ்பிரஸ் செய்திச் சேவை தெரிவி்த்துள்ளது.

மிக உயர்ந்த மட்ட தொடர்பாடல் அலைவரிசையான எம்.எம்.பி. ஊடாக இலங்கை கடற்படையுடன் இந்தியக் கடலோரக் காவற்படை தொடர்பாடல்களை மேற்கொள்ளும்.

இந்தியக் கடலோரக் காவல் படைக் கப்பல்கள், விசைப்படகுகளிலுள்ள அதிகாரிகள் இந்தியக் கடலில் செல்லும் போது ரோந்து நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கைக் கடற்படையுடன் தொடர்பாடல்களை மேற்கொள்வார்கள்.

ஆனால், இந்தியக் கடலோரக் காவற் படை அதிகாரிகளோ அல்லது இலங்கைக் கடற்படையினரோ தத்தமது கடல் எல்லைகளை தாண்ட மாட்டார்கள்.

அவர்களுடைய நடவடிக்கைகள் தொடர்பாடல்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதாகவே அமையும்.

இரு நாடுகளுக்கும் இடையிலான கடத்தல்களை தடுப்பதற்கும் ஆட்களின் பயணத்தை தடுக்கவும் இந்த முறைமை உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதலால் இந்த புதிய முறைமையின் பிரகாரம் இந்திய மீனவர்களின் நடமாட்டம் கண்காணிப்புக்குட்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக