செவ்வாய், 5 அக்டோபர், 2010

முல்லைத்தீவுக் கடலில் சிங்களவர்கள் மீன் பிடிக்க அனுமதி – தமிழ் மீனவர்களிற்கு பாஸ் நடைமுறை

முல்லைத்தீவுக் கடலில் அரசின் ஆதரவுடன் சிங்கள மீனவர்கள் ஏராளமானோர் மீன்பிடித் தொழில் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து தெரியவருவதாவது.

முப்பது வருட கால யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் முல்லைத்தீவுக் கடலில் அரசின் ஆதரவுடன் சிங்கள மீனவர்கள் ஏராளமானோர் மீன்பிடித் தொழில் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.. இதனால் இங்கு மீன்பிடித் தொழிலையே ஜீவனோபாயமாக கொண்டிருக்கும் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. தமிழ் மீனவர்கள் அநேகர் பாரம்பரிய முறைப்படி குறிப்பாக கரை வலை இழுத்து மீன் பிடிக்கின்றனர்.

ஆனால் இங்கு மீன்பிடிக்கும் சிங்களவர்களில் 70 பேர் வரையானோர் ரோலர் படகுகளை சொந்தமாக வைத்திருந்து மீன் பிடிக்கின்றார்கள். முல்லைத்தீவில் கடலில் தொழிலில் ஈடுபடும் தமிழர்கள்களின் எண்ணிக்கை 4128. ஆனால் அங்கு மீன் பிடிக்கும் சிங்களவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்குக்கு மேல் அதிகமாகிக் கொண்டிருக்கின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் ஆகிய இடங்களில் தமிழர்கள் இன்னமும் மீள்குடியேற்றப்படவில்லை. ஆனால் இவற்றை அண்டிய கடல் பிரதேசங்களில் சிங்களவர்கள் மீன் பிடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஸ்ரீலங்கா அரசின் நீண்டகால போர் நடவடிக்கையில் முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள் பெருமளாவான உயிர் பொருள் ரீதியிலான பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள நிலையில் தற்போது அளம்பில் செம்மலை தீர்த்தக்கரை பகுதிகளில் உள்ள கடற்தொழிலாளர்கள் மீள்குடியேறியுள்ள போதும் கடற்தொழில் செய்வதற்கான பாஸ் நடைமுறையினை ஸ்ரீலங்காபடையினர் மேற்கொண்டுள்ளதாக கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளார்கள். கடற்தொழிலாளர்கள் தாங்கள் தொழில் செய்ய முடியாத நிலையில் இருப்பதாகவும் ஆனால் கொக்குத்தொடுவாய் நாயாறு பகுதிகளில் சிங்கள கடற்தொழிலாளர்கள் சுதந்திர கடற்தொழிலினை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக