ஜெனரல் சரத் பொன்சேகாவை வெலிக்கடை சிறையில் வைத்து கொலை செய்யும் சதித் திட்டம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொலைக் குற்றச்சாட்டில் வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாய்யா என்ற பாதாள உலக உறுப்பினரிடம் இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்புப் பிரிவின் உயர் அதிகாரியொருவருக்கு நெருக்கமான ரத்தரன் திலக் என அழைக்கப்படும் பிரபல கொள்ளைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நபர் ஒருவரே அந்தப் பொறுப்பை மாய்யா என்ற நபரிடம் ஒப்படைத்துள்ளார்.
கொழும்பிலுள்ள பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புகளைப் பேணிவரும் ரத்தரன் திலக், அரச குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர் எனக் கூறப்படுகிறது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அரச குடும்பத்தின் பெருந்தொகையான தங்க ஆபரணங்கள் ரத்தரன் திலக்கின் வழிநடத்தலின் கீழ் சிங்கப்பூருக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
ரத்தரன் திலக்கிற்கு மிகவும் நம்பிக்கையான மாய்யா ஏற்கனவே கொல்லப்பட்ட ஃபாஜி என்ற பாதாள உலகத் தலைவரின் சகாவாக செயல்பட்டுள்ளார். மாய்யா என்ற நபர் பொரல்லை, வானத்தமுல்ல, காதர்நோனா தோட்டத்தை வசிப்பிடமாகக் கொண்டவராவார். அத்துடன், பாதாள உலகத் தலைவரான நாவலகே நிஹாலின் சகோதரரான நொயல் என்பவரைக் கொலை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் மாய்யா கடந்த ஒன்றரை வருடமாக வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ரத்தரன் திலக் என்பவர் மாய்யா என்ற பாதாள உலக உறுப்பினருக்கு மேற்கூறிய பாதுகாப்புப் பிரிவின் உயர் அதிகாரியின் அனுமதியுடன் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தும் சுதந்திரம் உள்ளிட்ட ஏனைய வசதிகளை சிறையில் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில், சரத் பொன்சேகாவைக் கொலை செய்யும் சதித் திட்டம் சில மாதங்களுக்கு முன்னர் இருந்தே தீட்டப்பட்டது. இதற்கு ஏதுவாக வெலிக்கடைச் சிறைச்சாலையின் சூழலை மாற்றியமைக்கும் பணிகளும் சில மாதங்களுக்கு முன்னரே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் அடிப்படையில் மாய்யாவைக் கொண்டு சிறைக்கைதிகள் மத்தியில் சரத் பொன்சேகா மீது எதிர்ப்பலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிறைச்சாலையில் ஏற்படும் குழப்ப நிலையொன்றைப் பயன்படுத்தி அதில் சரத் பொன்சேகாவை சிக்கவைத்து கொலை செய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
பொன்சேகாவின் உடல் நிலையைக் கவனத்தில் கொள்ளாது கடும் வேலைகளை வழங்குதல், சுத்தமான காற்றைச் சுவாசிப்பதைத் தடுத்தல், வைத்திய ஆலோசனைகளைக் கவனத்தில் கொள்ளாது ஏனைய சிறைக்கைதிகளுக்கு வழங்கப்படும் உணவை வழங்க வேண்டும் என சிறை அதிகாரிகளுக்கு உயர் மட்டத்திலிருந்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனைத்தவிர, தற்போது வெலிக்கடைச் சிறையிலிருக்கும் அதிகாரிகளை இடமாற்றம் செய்துவிட்டு புதிய அதிகாரிகளை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சரத் பொன்சேகாவின் பாதுகாப்பிற்காக பெருமளவிலான சிறைக்கைதிகள் தாமாகவே முன்வந்து அவருக்கு இரவு பகலாக பாதுகாப்பு வழங்கி வருவதாக சிறைச்சாலையிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிங்க படைப் பிரிவை கலைப்பது குறித்து பாதுகாப்புச் செயலாளர் கவனம்?
இராணுவத் தளபதியாக பொறுப்பேற்க முன்னர் சரத் பொன்சேகா கட்டளை அதிகாரியாக பணியாற்றிய சிங்க படைப் பிரிவை கலைப்பது குறித்து பாதுகாப்புச் செயலாளர் கவனம் செலுத்தி வருவதாக இராணுவத் தலைமையகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெனரல் பொன்சேகாவின் ஆரம்ப இராணுவப் பிரிவான சிங்க படைப் பிரிவு குறித்து சந்தேகத்தோடு செயல்பட்டுவரும் பாதுகாப்பு அமைச்சு அந்தப் பிரிவைச் சேர்ந்த எந்த அதிகாரிகளையும் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளரின் பாதுகாப்புப் பணிகளில் பயன்படுத்துவதில்லை. அந்தப் படைப் பிரிவில் பணியாற்றிய உயர் அதிகாரிகள் சிலர் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி ஓய்வில் அனுப்பப்பட்டுள்ளனர். அத்துடன், அம்பேபுஸ்ஸ சிங்க படைப் பிரிவின் முகாமில் வைக்கப்பட்டுள்ள சிங்கத்தை தெஹிவளை வனவிலங்கு பூங்காவிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக