புதன், 13 அக்டோபர், 2010

இலங்கைத் தமிழரான நோர்வே பிரஜை ஒருவருக்கு எதிராக மேற்கொண்டிருந்த வழக்கு நடவடிக்கையை பிரித்தானிய அரசு கைவிட்டது.

இலங்கைத் தமிழரான நோர்வே பிரஜை ஒருவருக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கச் செயற்பாட்டாளர் என்கிற சந்தேகத்தில் மேற்கொண்டிருந்த வழக்கு நடவடிக்கையை பிரித்தானிய அரசு நேற்று கைவிட்டு விட்டது.

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளார் என்று காரணம் காட்டி தேசிய பாதுகாப்புச் சட்டம், பயங்கரவாத தடைச்சட்டம் ஆகியவற்றின் கீழ் இத்தமிழர் பிரித்தானியாவில் இருந்து அந்நாட்டு குடிவரவு- குடியகல்வு திணைக்களத்தால் நோர்வேக்கு 2007 ஆம் ஆண்டின் இறுதியில் நாடு கடத்தப்பட்டிருந்தார்.

ஆனால் இவ்வாறு நாடு கடத்தப்பட்டமைக்கு எதிராக இவர் நோர்வேயில் இருந்தவாறே பிரித்தானியாவின் குடிவரவு-குடியகல்வு சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்கும் கீழ்நிலை நீதிமன்றம் ஒன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அவ்வழக்கில் அவருக்கு கடந்த எட்டு மாதங்களுக்கு முன் வெற்றி கிடைத்தது. அதாவது அவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர் என்பதற்கு ஆதாரம் இல்லை என்கிற தீர்மானத்துக்கு அந்நீதிமன்றம் வந்தது.

அத்துடன் அவர் மீதான பிரயாணத்தடையை நீக்குவதாகவும் அவரது நடமாட்டத்தை தேசிய பாதுகாப்புச் சட்டம், பயங்கரவாத தடைச்சட்டம் ஆகியவற்றின் கீழ் தடுக்க முடியாது என்றும் தீர்ப்பளித்தது.

ஆனால் அரசுத் தரப்பினர் இத்தீர்ப்புக்கு எதிராக குடிவரவு-குடியகல்வு சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்கும் உயர்நிலை நீதிமன்றம் ஒன்றில் மேன்முறையீடு தாக்கல் செய்தனர். இம்மேன்முறையீடு நேற்று தொடர் விசாரணைக்காக வந்தது.

அப்போது மன்றில் ஆஜரான குடிவரவு-குடியகல்வு அதிகாரிகள் அவர்களது மேன்முறையீட்டை வாபஸ் பெற்றுக் கொண்டனர். இதன் மூலம் அத்தமிழ் இளைஞன் மீதான பிரயாணத்தடை நீக்கப்பட்டு விட்டது.

பிரித்தானியாவில் அவர் சுதந்திரமாக நடமாட முடியும். இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக மாறி விட்டது.

இவ்வழக்கை முன்மாதிரியாகக் கொண்டு குடிவரவு- குடியகல்வு சம்பந்தப்பட்ட வழக்குகளில் தமிழர்கள் வருங்காலங்களில் நிவாரணம் பெற்றுக் கொள்ள முடியும் என்று பிரித்தானியாவைச் சேர்ந்த சட்டவல்லுனர் ஒருவர்  தெரிவித்தார்.

பிரித்தானியாவின் பிரபல சட்ட நிறுவனங்களில் ஒன்றான ‘பீறின்பேக் பெயரஸ்’ ஐச் சேர்ந்த சட்டத்தரணிகள் தமிழ் இளைஞனை ஆதரித்து மன்றில் ஆஜராகி இருந்தார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக